எலக்சன் - விமர்சனம்
18 May 2024
தமிழ் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், விஜயகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
40 வருடங்களாக கட்சியில் மிகவும் விசுவாசமாக இருப்பவர் ஜார்ஜ் மரியான். அவரது ஊரான நல்லூர் என்ற ஊரின் தலைவராகப் போட்டியிட விருப்பப்பட்டாலும் கட்சி அவருக்கு சீட் தர மறுக்கிறது. அதனால், அவரது மகன் விஜயகுமார் சுயேச்சையாகத் தேர்தலில் போட்டியிடுகிறார். இருந்தாலும் அவரது அப்பா மகனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யாமல் தான் சார்ந்த கட்சிக்கே பிரச்சாரம் செய்கிறார். தேர்தலில் விஜயகுமார் தோல்வியடைய கடன்காரனாகிறார். அதன்பின் அவரது அரசியல் வாழ்விலும், குடும்ப வாழ்விலும் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
உள்ளாட்சித் தேர்தலை மையமாக வைத்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். கட்சி அரசியல், நட்பு அரசியல், துரோக அரசியல், பழி வாங்கும் அரசியல் என அரசியலின் பல்வேறு முகங்களை ஒரே படத்தில் காட்டியிருக்கிறார் இயக்குனர் தமிழ். யதார்த்தமான ஒரு அரசியல் கதையாக இப்படம் அமைந்துள்ளது.
அரசியல் ஆசை இல்லையென்றாலும் அப்பா அவமானப்பட்டதற்காகத் தேர்தலில் போட்டியிடுகிறார் விஜயகுமார். தொடர்ந்து அவர் சந்திக்கும் சிக்கல்கள் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை அவர் சமாளிக்கும் விதம் யதார்த்தமாக அமைந்துள்ளது. ஒரு பக்கம் அரசியலில் இழுத்துவிடும் மாமா, மறுபக்கம் ஆதரவாக இருக்கும் மனைவி, அமைதியாகப் போகும் அப்பா, எதிர்ப்பு தெரிவிக்கும் அம்மா என குடும்பத்திற்குள்ளும் தவிக்கிறார். கடைசியில் எது அரசியல் என அவர் புரிந்து கொண்டது ஒரு அழுத்தமான பதிவு.
விஜயகுமார் மனைவியாக ப்ரித்தி அஸ்ரானி. ‘அயோத்தி’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இந்தப் படத்தில் குறைவான காட்சிகளில் வந்தாலும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
விஜயகுமாரின் தாய்மாமனாக, தங்கை கணவராக பாவல் நவகீதன். தீவிர அரசியலில் இருப்பவர். எப்படியாவது அரசியலில் முன்னேற வேண்டும் எனத் துடிப்பவர். விஜயகுமாரை முன் வைத்து, இவர் பின் நின்று அரசியல் செய்கிறார்.
வில்லனாக திலீபன். அரசியல் இவ்வளவு துரோகம், பழி வாய்ந்த ஒன்றா என இவரது கதாபாத்திரம் அதிர்ச்சியைக் கொடுக்கிறது.
கோவிந்த் வசந்தா பின்னணி இசையில் பரபரப்பைக் கூட்டியுள்ளார். அரசியல் படமாக இருந்தாலும் கிராமத்துத் தெருக்களில் புகுந்து ஓடுகிறது மகேந்திரன் ஜெயராஜுவின் கேமரா. அழகிய பெரியவனின் அரசியல் வசனங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.
உள்ளாட்சி அரசியலை உணர்வுபூர்வமாய் கொடுத்திருக்கும் ஒரு படம்.
Tags: election