பகலறியான் - விமர்சனம்
24 May 2024
முருகன் இயக்கத்தில், விவேக் சரோ இசையமைப்பில், வெற்றி, அக்ஷய கந்தமுதன், முருகன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
ஓர் இரவில் நடக்கும் ஒரு திரில்லர் கதை. தனது அப்பாவையே கொன்று சிறை தண்டனை அனுபவித்தவர் வெற்றி. அவர் அக்ஷயா கந்தமுதனைக் காதலிக்கிறார். அக்ஷயாவின் அப்பா அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை வீட்டை விட்டு வரச் சொல்லி இருவரும் காரில் பெங்களூரு பயணிக்கிறார்கள். வழியில் விபச்சார புரோக்கர் ஒருவரிடம் பணம் பெறுகிறார் வெற்றி. அது அக்ஷயாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
அதே சமயம் ரவுடியான முருகன், கடத்தப்பட்ட தனது தங்கையை வலை வீசி தேடி வருகிறார். வெற்றி, அக்ஷயாவை மற்றொரு கும்பல் கொலை செய்ய திட்டமிடுகிறது. வெற்றி, அக்ஷயா திட்டமிட்டபடி பெங்களூரு சென்றார்களா, அவர்கள் மற்றொரு கும்பலிடம் இருந்து தப்பித்தார்களா, ரவுடி முருகனின் தங்கை கிடைத்தாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
அப்பாவைக் கொன்று சிறையிலிருந்து விட்டு வெளியில் வந்தவராக வெற்றி. நண்பருடன் சேர்ந்து மெக்கானிக் கடை வைத்திருந்தாலும் மற்ற சமயங்களில் ரவுடியாகவும் இருக்கிறார். சிரிப்பே வராத இறுக்கமான கதாபாத்திரம் அவருக்கு. அதிக வசனங்கள் இல்லாமல் பார்வையாலேயே மிரட்டலைக் காட்டுகிறார். கடைசியில் அவர் எடுக்கும் முடிவு நாம் சிறிதும் எதிர்பாராத ஒன்று.
வெற்றியின் காதலியாக அக்ஷய கந்தமுதன். தன்னை வெற்றி ஏமாற்றுகிறார் என்று தெரிந்ததும் அவர் கலங்குவதும், பின் உண்மை தெரிந்த பின் அதற்காகக் கலங்குவதும் என அந்தத் தவிப்பை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ரவுடியாக படத்தின் இயக்குனர் முருகன். தோற்றமும், உடல் மொழியும் ஒரு வில்லனுக்குரிய நடிகரை அடையாளப்படுத்துகிறது. ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டுகிறார்.
இருபது வருடங்களுக்கு முன்பு நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்த சாப்ளின் பாலு, இந்தப் படத்தில் ரவுடியின் வலது கையாக நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டராக சாய் தீனா. ஏதோ செய்யப் போகிறார் என்று பார்த்தால் இரவு நேரத்தில் பாட்டைப் போட்டு நடனமாடி காமெடி செய்துவிட்டுப் போகிறார்.
படத்தில் குறிப்பிட வேண்டியது அபிலாஷ் ஒளிப்பதிவு. முழுவதும் இரவு நேரத்திலேயே நகரும் கதை. லைட்டிங்குகளில் அசத்தியிருக்கிறார். விவேக் சரோவின் பின்னணி இசையும் குறிப்பிட வேண்டியவை. பல காட்சிகளை பரபரப்புக்குள்ளாக்கி இருக்கிறது.
ஒரு கதையாக பரபரப்பாக யோசித்துள்ளார் இயக்குனர். ஆனால், ஆரம்பத்தில் ரவுடி முருகனின் தங்கை எதற்காக கடத்தப்பட்டார், அக்ஷயாவை வெற்றி எதற்காக அழைத்துச் செல்கிறார் என்பதை நமக்கு சொல்லியிருந்தால் படத்துடன் இன்னும் ஒன்றி ரசித்திருக்க முடியும். திரைக்கதை யுத்தியில் படத்தை நகர்த்த முயற்சித்திருக்கிறார்கள். அந்த ‘தங்கை’ சஸ்பென்ஸை கடைசி வரை காப்பாற்றியிருக்கிறார்கள்.
Tags: pagalariyaan