PT சார் - விமர்சனம்
25 May 2024
கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், ஹிப்ஹாப் தமிழா, காஷ்மிரா பர்தேஷி, தியாகராஜன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
தமிழ்நாட்டில் சில வருடங்களுக்கு முன்பு பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்.
ஈரோட்டில் உள்ள பெரிய தனியார் பள்ளியில் பி.டி. ஆசிரியராக இருப்பவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அவரது வீட்டிற்கு எதிரில் வசிக்கும் அனிகா சுரேந்திரன், அவர்களது கல்வி நிறுவனக் கல்லூரியில் படிப்பவர். ஒரு நாள் திடீரென தற்கொலை செய்து கொண்டு இறந்து போகிறார். ஆனால், அது தற்கொலை அல்ல, கொலை அதைச் செய்தது அந்த கல்வி நிறுவனங்களின் சேர்மன் தியாகராஜன் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். நாட்டின் பிரபலமான பெண் வக்கீலை வைத்து வாதாடுகிறார் தியாகராஜன். அதன் பின் என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை.
சில தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவிகளை படிப்பு என்ற பெயரில் கொடுமைப்படுத்துவது நடந்து கொண்டிருக்கிறது. சில இடங்களில் பாலியல் துன்புறுத்தல்களும் நடக்கிறது என்பதை அடிக்கடி நாளிதழ்களில் செய்தியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டையே உலுக்கி ஒரு மரணத்தைப் பற்றிய கதையை இன்னும் உணர்வுபூர்வமாகக் கொடுத்திருக்க வேண்டும். அதற்கான திரைக்கதை அமைக்காமல் நீதிமன்றக் காட்சிகள் மூலம் வீணடித்துவிட்டார் இயக்குனர்.
பி.டி. சார் கனகவேல் கதாபாத்திரத்தில் பொருத்தமாகவே நடித்திருக்கிறார் ஆதி. ஸ்போர்ட்ஸ் டிரஸ், கழுத்தில் விசில் மாட்டிக் கொண்டாலே அந்தத் தோற்றம் வந்துவிடும். கூடுதலாகக் கொஞ்சம் நடித்தால் போதுமானது. இது ஒரு ஆக்ஷன் படம் என்பதாலும், ஆசிரியர் என்பதாலும் அக்கறையாகவே நடித்திருக்கிறார் ஆதி. அவருடைய படங்களில் இருக்கும் சில காமெடி விஷயங்கள் இந்தப் படத்தில் இல்லை.
ஆதியின் காதலியாக காஷ்மிரா பர்தேஷி. ஆரம்ப சில காட்சிகளில் அழகாக வந்து போகிறார். அதன்பின் ஆதிக்கு பக்கபலமாக இருக்கும் ஒரு கதாபாத்திரம்.
கல்வித் தந்தையாக மிரட்டியுள்ளார் தியாகராஜன். அவரது பார்வையும், அந்தத் துடிப்பும் அவருடைய வில்லத்தனத்தை சரியாகக் காட்டியுள்ளது. இப்படியும் சில பெரிய மனிதர்கள் இங்கு இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அப்பாவி மாணவியாக அனிகா சுரேந்திரன், அவரது அப்பாவாக இளவரசு மற்ற கதாபாத்திர நடிகர்களில் இவர்களுக்கான முக்கியத்துவம் அதிகம்.
தனது படங்களுக்கு இசையமைக்கும் போது அதிரடியான பாடல்களைக் கொடுப்பார் ஹிப்ஹாப் தமிழா. இந்தப் படத்தில் அதை பின்னணி இசையில் கொடுத்திருக்கிறார்.
இரண்டாம் பாதியை நீதிமன்றக் காட்சிகள் ஆக்கிரமித்துவிடுகிறது. இப்போதெல்லாம் அப்படியான காட்சிகளை படங்களில் வைப்பதேயில்லை. அதுவே இந்தப் படத்திற்கு சோதனையாக அமைந்துவிட்டது.
Tags: pt sir