ஹிட் லிஸ்ட் - விமர்சனம்
31 May 2024
சூர்யகதிர் காக்கள்ளார், கார்த்திகேயன் இயக்கத்தில், சத்யா இசையமைப்பில், விஜய் கனிஷ்கா, சரத்குமார், கௌதம் மேனன், ஸ்மிருதி வெங்கட் மற்றம் பலர் நடித்திருக்கும் படம்.
அம்மா சித்தாரா, தங்கை அபி நட்சத்திரா ஆகியோருடன் சிறிய மகிழ்ச்சியான குடும்பமாக இருப்பவர் விஜய் கனிஷ்கா. ஒரு நாள் அவருடைய அம்மா, தங்கை ஆகியோரை முகமூடி மனிதன் ஒருவன் கடத்துகிறான். பின்னர், விஜய் கனிஷ்காவைத் தொடர்பு கொண்டு இரண்டு கொலைகளைச் செய்யச் சொல்கிறான். அவற்றைச் செய்தால்தான் அம்மாவையும், தங்கையையும் விடுவிப்பேன் என்கிறான். விஜய்க்கு உதவியாக டெபுடி கமிஷனர் சரத்குமார் களமிறங்குகிறார். முகமூடி மனிதன் சொன்ன இரண்டு கொலைகளை விஜய் செய்தாரா, அவரது அம்மா, தங்கை காப்பாற்றப்பட்டார்களா என்பதுதான் இப்படத்தின் மீதிக் கதை.
தமிழ் சினிமாவிற்கு மற்றுமொரு அருமையான அறிமுகம் விஜய் கனிஷ்கா. இளம் கதாநாயகர்களுக்குப் பஞ்சமாக இருக்கும் தமிழ் சினிமாவில் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்தால் இவரும் முன்னணிக்கு வரலாம். அம்மா, தங்கையைக் காப்பாற்ற முகமூடி மனிதன் சொல்வதை எல்லாம் செய்யத் துடிக்கிறார். பாசத்திற்காகத் துடிக்கும் கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்திருக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக சரத்குமார். இது போன்ற கதாபாத்திரங்கள் எல்லாம் அவருக்கு சர்வசாதாரணம். அதிகாரிக்குரிய அசத்தலான கம்பீரத்துடன் நடித்திருக்கிறார்.
பிளாஷ்பேக்கில்தான் படத்தின் மையக் கதை என்னவென்பது சொல்லப்படுகிறது. கொரானோ கால கட்டங்களில் மக்கள் பட்ட அவஸ்தைகளை அந்தக் காட்சிகள் சொல்கின்றன. மக்களைக் காப்பாற்றத் துடிக்கும் பொறுப்பு மிக்க டாக்டராக ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கிறார். அக் காட்சிகளில் சில நிமிடங்களே வந்தாலும் மனதில் இடம் பிடிக்கிறார் சமுத்திரக்கனி.
மருத்துவமனை டீன் ஆக கௌதம் மேனன், விஜய் அம்மாவாக சித்தாரா, தங்கையாக அபி நட்சத்திரா மற்ற கதாபாத்திரங்களில் குறிப்பிட வேண்டிய நடிகர்கள்.
சத்யாவின் பின்னணி இசை, ராம் சரண் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
படத்தில் நகைச்சுவை, காதல் என எதுவுமில்லை. ஆரம்பமான கொஞ்ச நேரத்திலேயே கதைக்குள் சென்றுவிடுகிறார்கள். எதற்காக கடத்தல், கொலைகள் நடக்கிறது என்று புரியாமல் இருக்கும் போது, பிளாஷ்பேக்கில் அதற்கான காரணத்தைச் சொல்லி நெகிழ வைத்திருக்கிறார்கள். நாட்டில் நடக்கும் சில ஊழல்களில் ஒன்றாக மருத்துவமனை ஊழலைப் பற்றியும் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறது படம்.
Tags: hit list