கருடன் - விமர்சனம்
01 Jun 2024
ஆர்எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூரி, சசிக்குமார், உன்னி முகுந்தன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை அபகரிக்கத் துடிக்கிறார் அமைச்சர் ஆர்வி உதயகுமார். அந்த கோயிலின் டிரஸ்டிகளாக இருக்கும் நெருங்கிய நண்பர்களான சசிக்குமார், உன்னி முகுந்தன் ஆகியோரைப் பிரித்து அரசியல் செய்கிறார். அமைச்சர் பக்கம் சாய்கிறார் உன்னி. நட்பை அரசியல் வீழ்த்துகிறது. இதனிடையே, உன்னியின் விசுவாசமான வேலைக்காரரான சூரி அந்த அரசியலை எப்படி அடித்து வீழ்த்துகிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இயக்குனர் வெற்றிமாறன் எழுதியிருக்கும் கதை. நட்பு, பாசம், விசுவாசம், துரோகம், அரசியல், அதிரடி என எழுதிய கதையை பரபரப்பான திரைக்கதை அமைத்து சுவாரசியமான படமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.
கதையின் நாயகனாக சூரிக்கு இந்தப் படம் அடுத்த கட்ட வளர்ச்சியைத் தரும். இடைவெளி விடாமல் வசனம் பேசி உண்மையைச் சொல்லும் அந்த சில காட்சிகள் அவருக்கு கைத்தட்டலை வாங்கித் தருகிறது. ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார். “நாயா இருந்த என்னை மனுஷனை மாத்திட்டீங்களே,” என்ற கிளைமாக்ஸ் வசனம் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த விஷயத்தை ஒரே வரியில் சொல்லிவிடுகிறது.
சரியாகத் தைத்து கொடுத்த சட்டை போல ஒரு கதாபாத்திரம் சசிக்குமாருக்கு. நண்பனுக்காக உருகி ஏமாந்து போகும் கதாபாத்திரம். இவரது கதாபாத்திரம் மீது இன்னும் அதிக அனுதாபம் வந்திருக்க வேண்டும். இவரது நண்பராக உன்னி முகுந்தன். மலையாளம் கலந்த தமிழைப் பேசுவதை மட்டும் தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
படத்தில் ஷிவதா, ரோஷினி ஹரிப்ரியன், பிரிகடா, ரேவதி சர்மா என நால்வர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஆளுக்கொரு அழுத்தமான காட்சி என முடித்துவிட்டார் இயக்குனர். ரோஷினிக்கெல்லாம் குளோசப் காட்சிகள் கூட இல்லை என்று ஞாபகம்.
அமைச்சராக ஆர்வி உதயகுமார், அவரது பேச்சைக் கேட்டு ஆடும் மைம் கோபி, உன்னியின் அம்மாவாக வடிவுக்கரசி, இன்ஸ்பெக்டர் சமுத்திரக்கனி கொஞ்ச நேரம் வந்தாலும் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.
யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்தில் மிக முக்கியமானது. சூரியின் அந்த ஆவேசத்தை அவரது பின்னணி இசை இன்னும் அதிக வீரியத்துடன் காட்டுகிறது. ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு படத்திற்காக தனி வண்ணத்தில் அமைந்துள்ளது.
நம்ப முடியாத சில சினிமாத்தனமான காட்சிகள் படத்தின் மைனஸ் ஆக உள்ளன. அவற்றைச் சரி செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
Tags: garudan, soori, sasikumar, yuvanshankar raja, rs durai senthilkumar