குற்றப்பின்னணி - விமர்சனம்
01 Jun 2024
என்பி இஸ்மாயில் இயக்கத்தில், சரவணன், தீபாளி, தாட்சாயினி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
பழனியில் அதிகாலையில் வீடு வீடாகச் சென்று பால் போடுபவர் சரவணன். அவருடைய வாடிக்கையாளர் ஒருவரது வீட்டுக்குள் சென்று ஒரு பெண்ணைக் கொல்கிறார். இந்த கொலையின் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, மற்றொரு வீட்டில் ஒரு தம்பதியைக் கொல்கிறார். இந்தக் கொலைகள் ஒரே பாணியில் இருக்க, கொலையாளி யார் என்பதைக் கண்டுபிடிக்க காவல்துறை தவித்து வருகிறது. ஆனால், கொலைகளைச் செய்த சரவணன் சுதந்திரமாக நடமாடி வருகிறார். அவர் அந்தக் கொலைகளைச் செய்ய என்ன காரணம், போலீஸ் அவரைக் கண்டுபிடித்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
‘ராட்சசன்’ படத்தில் வில்லனாக நடித்த சரவணன், இந்தப் படத்தில் நெகட்டிவ் ஹீரோவாக நடித்திருக்கிறார். பால் போடுவது, தண்ணீர் கேன் போடுவது என அப்பாவித்தனமாக இருப்பவர் கொலையாளியாக மாறுகிறார். அப்பாவித்தனமும், கொலைவெறியும் கலந்த நடிப்பை வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார்.
சரவணன் மனைவியாக தீபாளி. கொஞ்சம் கிளாமராகவே நடித்துள்ளார். தாட்சாயினியும் கிளாமராக நடிக்கத் தயங்கவில்லை.
ஜித் பின்னணி இசை குறிப்பிடும்படி அமைந்துள்ளது. த்ரில்லர் கதைக்குரி ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சங்கர் செல்வராஜ்.
தனக்கு நியாயமாகத் தெரிவதால் கொலைகளைச் செய்கிறார் நாயகன் சரவணன். ஆனாலும், பெண்கள் செய்யும் அந்தத் தவறுகளுக்கு உயிரைக் கொல்வது சரியா என்பது யோசிக்க வேண்டி இருக்கிறது. கொலைகளுக்கான நியாயப்படுத்துதலை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.
Tags: kuttra pinnani