அக்காலி - விமர்சனம்

01 Jun 2024

முகம்மது ஆசிப் ஹமீத் இயக்கம், இசையில், நாசர், ஜெய்குமார், ஸ்வயம் சித்தா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

போதைப் பொருள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் அதைக் கண்டுபிடிக்க ஜெய்குமார்  தலைமையில் போலீஸ் குழு அமைக்கப்படுகிறது. மயானங்களில் புதைக்கப்பட்டுள்ள உடல்களை எடுத்துவிட்டு, அந்த குழிகளில் போதைப் பொருட்கள் பதுக்கப்படுவதாகத் தகவல் வர விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள்.

ஆனால், போதை பொருட்கள் கடத்தப்படவில்லை, சாத்தானை வழிபடும் ஒரு பிரிவினர் அங்கு பூஜைகள் செய்வது, நரபலி கொடுப்பது உள்ளிட்டவற்றை செய்கிறார்கள் என ஜெய்குமார் கண்டுபிடிக்கிறார். அந்தக் குழுவைப் பற்றி அவர் தேட ஆரம்பிக்கிறார். அவர்கள் யார், அவர்களின் தலைவர் யார் என்பதைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரு வித குழப்பத்துடனேயே திரைக்கதை நகர்கிறது. படம் பார்க்கும் சாதாரண ரசிகர்களுக்கு அவையெல்லாம் புரியுமா என்பது சந்தேகம்தான்.

இப்படியான சாத்தான் வழிபாடு குறித்த படங்கள் அதிகமாக வந்ததில்லை. இந்தப் படத்தில் கற்பனைக்கு மீறிய பல காட்சிகள் த்ரில்லிங்கிற்காகச் சேர்த்திருக்கிறார் இயக்குனர்.

படத்தின் நாயகன் என ஜெய்குமாரைத்தான் சொல்ல வேண்டும். அவரும் அவரது உதவியாளரும் எங்கெங்கோ அலைந்து திரிந்து உண்மைகளைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். பல படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்தவர் ஜெய்குமார். இந்தப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் முத்திரை பதித்திருக்கிறார்.

கிறிஸ்துவ பாதிரியாராக இடைவேளைக்குப் பின் வருகிறார் நாசர். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சஸ்பென்சாக உள்ளன. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும் அதிகாரியாக ஸ்வயம் சித்தா நடித்திருக்கிறார். ஜெய்குமாரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கும் காட்சிகள் மட்டுமே அவருக்கு அமைந்துள்ளது.

படத்தின் லைட்டிங், ஒளிப்பதிவில் மிரட்டலைத் தந்திருக்கிறார் கிரி முர்பி. இயக்குனரே படத்திற்கு இசையமைத்திருப்பதால் என்ன தர வேண்டுமோ அதைத் தந்திருக்கிறார்.

குழப்பமில்லாத திரைக்கதை மட்டும் அமைத்திருந்தால் குறிப்பிடும்படியான படமாக அமைந்திருக்கும்.

Tags: akkali

Share via:

Movies Released On July 27