புஜ்ஜி at அனுப்பட்டி - விமர்சனம்
02 Jun 2024
ராம் கந்தசாமி இயக்கத்தில், கார்த்திக்ராஜா இசையமைப்பில், கமல்குமார், வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய், பேபி பிரணதி சிவசங்கரன், லாவண்யா கண்மணி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
கோவை மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் இருக்கும் அண்ணன், தங்கைகளான சிறுவன் கார்த்திக் விஜய், தங்கை பிரணதி இருவரும் ஆட்டுக்குட்டி ஒன்றை ஆசையாக வளர்த்து வருகிறார்கள். அதற்கு புஜ்ஜி எனப் பெயர் வைக்கிறார்கள். அவர்களது குடிகாரத் தந்தை அந்த ஆட்டுக்குட்டியை அவர்களுக்கத் தெரியாமல் விற்றுவிடுகிறார். அண்ணன், தங்கை இருவரும் அந்த ஆட்டுக்குட்டியைத் தேடிப் போகிறார்கள். அந்த ஆடு அவர்களுக்குக் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரு சாதாரணக் கதையை யதார்த்தமான கதைக்களம், கதாபாத்திரங்கள், நடிகர்களுடன் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ராம் கந்தசாமி.
முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள பிரணதி, கார்த்திக் விஜய் இருவருமே அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள். ஆசையாக வளர்த்த ஆட்டுக்குட்டியை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டுமென நிறையவே முயற்சிக்கிறார்கள்.
மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ஆட்டைக் கண்டுபிடிக்க உதவும் லாவண்யா கண்மணி இயல்பாக நடித்திருக்கிறார்.
கோவை மாவட்ட கிராமங்களான பட்டணம், பீடம் பள்ளி, அய்யம்பாளையம், பல்லடம், கண்ணம்பாளையம், அனுப்பட்டி என ஆட்டுக்குட்டியைத் தேடி திரைக்கதையும் பயணிக்கிறது. ஆட்டுக்குட்டி மாறிக் கொண்டே போவதை யதார்த்தமாகவே சித்தரித்திருக்கிறார்கள்.
பிரதிபலன் பார்க்காமல் உதவி செய்யும் குணத்தை அழுத்தமாய் பதிய வைக்கிறது படம்.
Tags: bujji