அஞ்சாமை - விமர்சனம்
08 Jun 2024
எஸ்பி சுப்புராமன் இயக்கத்தில், ராகவ் பிரசாத், கலாசரண் இசையில், விதார்த், வாணி போஜன், ரகுமான் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
டாக்டருக்குப் படிக்க வேண்டுமென்றால் அதற்கு ‘நீட்’ என்ற தகுதித் தேர்வு முக்கியம் என்று கொண்டுவரப்பட்டது. அதனால், ஏழை மாணவர்களும், அரசு பள்ளி மாணவர்களும் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மிக யதார்த்தமாய் காட்டியுள்ள படம். இப்படி ஒரு கதையைத் தேர்வு செய்து உணர்வுபூர்வமாகக் கொடுத்ததற்காக இயக்குனர் சுப்புராமனுக்கு தனி பாராட்டுக்கள்.
கூத்துக் கலைஞர், சாதாரண விவசாயியான விதார்த், தாய் மொழிக் கல்விதான் சுயமாக சிந்திக்க வைக்கும் என தனது மகன் கிருத்திக் மோகனை அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார். 10வது வகுப்பில் மாவட்டத்தில் முதலிடம் பிடிக்கிறார் கிருத்திக். டாக்டருக்குப் படிக்க ஆசைப்படும் அவரை நீட் தேர்வுப் பயிற்சிக்காக சேர்க்கிறார் விதார்த். நீட் தேர்வு எழுத சொந்த ஊருக்கு அருகில் தேர்வு மையம் போடாமல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் போடுகிறார்கள். மகன் கிருத்திக்குடன் ஜெய்ப்பூர் செல்கிறார் விதார்த். ஆனால், அலைச்சல் காரணமாக அவர் திடீரென இறந்து போகிறார்.
தனது அப்பாவின் மரணத்திற்கு இப்படி அலைக்கழிக்கப்பட்டதே காரணம் என மகன் கிருத்திக் அரசு மீது வழக்கு தொடுக்கிறார். அவருக்கு ஆதரவாக வக்கீல் ரகுமான் வாதாட முன் வருகிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஏழை விவசாயியாக அற்புதமாக நடித்திருக்கிறார் விதார்த். மகனின் படிப்பு கெட்டுவிடக் கூடாது என்பதற்காக தனது கூத்துக் கலையைக் கூடத் தியாகம் செய்கிறார். கடன் வாங்கியவாது தனது மகனைப் படிக்க வைத்து அவனை டாக்டராக்க வேண்டும் என கஷ்டப்படுகிறார். ஆனால், அதிகார மையத்தின் தவறினால் அவரது உயிர் அநியாயமாய் பறி போகிறது. அந்தக் காட்சியில் கண்கலங்காமல் இருக்க முடியாது. ஒரு நல்ல படத்தையும், கதாபாத்திரத்தையும் தேர்வு செய்து நடித்த விதார்த்துக்குப் பாராட்டுக்கள்.
விதார்த்தின் மனைவியாக வாணி போஜன். தனது கணவரைப் போல மகனும் வந்துவிடக் கூடாது படிப்புதான் முக்கியம் என நினைக்கும் ஒரு தாய். கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து இயல்பாய் நடித்திருக்கிறார் வாணி.
முதலில் இன்ஸ்பெக்டராக, பின்னர் வக்கீலாக அனைவரது மனதிலும் இடம் பிடிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் ரகுமான். இவரைப் போன்ற நல்ல மனிதர்கள் அதிகாரத்தில் இருந்தால் மக்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள். நீதிமன்றத்தில் அவர் வாதாடும் காட்சிகள் பல இடங்களில் கைத்தட்டலைப் பெற்றுத் தருகிறது. விதார்த்தின் மகனாக கிருத்திக் மோகன், குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்.
கலாசரண் பின்னணி இசை உணர்வுபூர்வமான காட்சிகளில் இணைந்து பயணிக்கிறது.
தாய்மொழி வழிக் கல்வி, அரசு பள்ளி, நீட் தேர்வு கொடுமைகள், சட்டப் போராட்டம் ஆகியவை இந்த நாட்டில் எப்படி இருக்கிறது. அது ஏழை மக்களை எந்த அளவிற்கு பாடாய்ப்படுத்துகிறது என்பதை வெட்டவெளிச்சமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதிகார மையத்தின் வேலைகள் எப்படி இருக்கும் என்பதை சாதாரண மக்களுக்கும் புரிய வைத்திருக்கிறார். நீட் கொடுமைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்தப் படத்தை அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டும்.
Tags: anjamai, vidharth