மகாராஜா - விமர்சனம்
14 Jun 2024
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பில், விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி, மம்தா மோகன்தாஸ், அபிராமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
விஜய் சேதுபதி சென்னையில் கேகே நகர் பகுதியில் சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவருடைய வீடு பள்ளிக்கரணை பகுதியில் தனிமையில் இருக்கிறது. அவரது வீட்டில் ஒரு நாள் திருடர்கள் வந்து குப்பைத் தொட்டி ஒன்றை திருடிச் சென்றுவிடுகிறார்கள். ஒரு விபத்தில் அந்த குப்பைத் தொட்டிதான் விஜய் சேதுபதியின் மகளைக் காப்பாற்றியது. அந்த விபத்தில் மனைவியைப் பறி கொடுத்த அவரும், அவரது மகளும் அந்த குப்பைத் தொட்டியை தெய்வமாக வழிபட்டு வருபவர்கள். அது திருடப்பட்டதால் அதை கண்டுபிடித்துக் கொடுக்க காவல் நிலையம் சென்று புகார் தருகிறார் விஜய் சேதுபதி. புகாரை இன்ஸ்பெக்டர் நட்டி முதலில் ஏற்க மறுக்கிறார். ஆனால், விஜய் சேதுபதி 5 லட்சம் லஞ்சம் தருகிறேன் என்றதும் தனி குழுவை அமைத்து விசாரணையை ஆரம்பிக்கிறார். அந்த அளவிற்கு அந்த குப்பைத் தொட்டி மதிப்புள்ளதா என்ற கேள்விக்கான விடைதான் மீதிப் படம்.
ஒரு படத்தின் திரைக்கதை எப்படி விறுவிறுப்பான அமைய வேண்டும் என்பதற்கான உதாரணமாக இந்தப் படம் அமையும். இப்படத்தின் வெற்றிக்கும், வரவேற்புக்கும் காரணம் என திரைக்கதையைத்தான் முதலில் சொல்வார்கள். அந்த அளவிற்கு அதை அமைத்திருக்கிறார் இயக்குனர்.
விஜய்சேதுபதியின் நடிப்பைப் பற்றி சொல்லவே வேண்டாம். இந்தப் படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரம். காவல் நிலையத்திற்குள் புகார் கொடுக்க வந்த போது அவர் செய்யும் களேபரம் அவரது கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஒரு உதாரணம். நடுத்தர வயது கதாபாத்திரத்தில் நச் என நடித்திருக்கிறார். நடிப்பின் மீதான தன்னுடைய பசி இன்னும் தீரவில்லை என்பதற்கு இந்தக் கதாபாத்திரம் மற்றொரு உதாரணம்.
படத்தின் வில்லன் அனுராக் காஷ்யப். பகல் நேரத்தில் எலக்ட்ரிக்கல் கடையை நடத்துகிறார். இரவு நேரங்களில் வீடு வீடாகச் சென்று திருடுகிறார், கொலை செய்கிறார். அவருடைய சுயரூபம் என்ன என்பதைத் தெரிந்து அதிர்ச்சியடையும் மனைவியாக அபிராமி.
இன்ஸ்பெக்டர் நட்டி கதாபாத்திரம் லஞ்சம் வாங்கும் ஒரு கதாபாத்திரம் என நமக்கு முதலில் உணர்த்துகிறார் இயக்குனர். ஆனால், கடைசியில் அவர் எப்படிப்பட்டவர் என்பதைக் காட்டும் போது தியேட்டர்களில் கைத்தட்டல் ஒலிக்கிறது. சப் இன்ஸ்பெக்டர் அருள்தாஸ், கான்ஸ்டபிள் முனிஷ்காந்த் அவரவர் பங்கிற்கு நிறைவாக நடித்திருக்கிறார்கள். போலீஸ் இன்பார்மர் ஆக சிங்கம்புலி, இதுவரையில் அவர் நடிக்காத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.விஜய் சேதுபதியின் மகள் படிக்கும் பள்ளியின் பி.டி ஆசிரியையாக மம்தா மோகன்தாஸ். அதிக முக்கியத்துவம் இல்லாத ஒரு கதாபாத்திரம்.
‘பாய்ஸ்’ மணிகண்டன், பாரதிராஜா, திவ்யாபாரதி சில காட்சிகளில் வந்து போகிறார்கள்.
அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை பரபரப்பைக் கூட்டுகிறது. தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு காட்சிகளுடன் சரியான கோணத்தில் நகர்கிறது. திரைக்கதை வடிவத்தை சிதைக்காத சிறப்பான படத்தொகுப்பை எடிட்டர் பிலோமின்ராஜ் தந்திருக்கிறார்.
சில கேள்விகள் ஆங்காங்கே எழுந்தாலும் திரைக்கதை யுத்தியில் அவை கடந்து போகின்றன. மாறுபட்ட படத்தை விரும்பும் ரசிகர்களுக்குப் படம் பிடிக்கும்.
Tags: maharaja, vijay sethupathi