ஸ்டார் - விமர்சனம்

11 May 2024

இளன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், கவின், ப்ரீத்தி முகுந்தன், அதிதி பொஹங்கர், லால் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

சிறு வயதிலிருந்தே சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற கனவில் இருப்பவர் கவின். அவரது சினிமா ஆசைக்கு பெரும் ஆதரவாக இருப்பவர் அவரது அப்பா லால். ஆனால், அம்மா கீதா கைலாசம் மகனின் ஆசைக்கு எதிராக இருக்கிறார். வற்புறுத்தி கவினை இஞ்சினியரிங் கல்லூரியில் சேர்க்கிறார். அங்கு ப்ரீத்தி முகுந்தனை சந்தித்து காதல் கொள்கிறார் கவின். ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அதற்காக காரில் கிளம்பும் போது கார் விபத்துக்குள்ளாகிறது. பலத்த காயமடையும் கவின் ஐசியு சிகிச்சைக்குப் பின் திரும்புகிறார். ஆனால், முகத்தில் காயத் தழும்பு பெரிதாக இருக்கிறது. அவரது சினிமா ஆசை கலைய, காதலும் கலைந்து போக அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒரு இளைஞனின் லட்சியம்தான் படத்தின் கதை. சினிமாவோ, வேறு ஏதோ வேலையோ விருப்பமான துறையில் வெற்றி பெறத்தான் ஒவ்வொருவரும் போராடுகிறார்கள். அப்படி பல போராட்டகளை சந்திக்கிறார் கவின். அவர் நினைப்பது எதுவும் நடக்காமல் எல்லாமே மாறி மாறி நடக்கிறது. படம் முழுவதும் எமோஷனலான காட்சிகள் நிறைய இருக்கிறது. அனைத்தையும் தனது அழுத்தமான நடிப்பால் ரசிக்க வைக்கிறார்.

கவினின் முதல் காதலியாக கல்லூரியில் படிக்கும் ப்ரீத்தி முகுந்தன். கவின் விபத்தில் சிக்கிய பிறகு அவரை விட்டுப் பிரிகிறார். காதலுக்கு அழகும் முக்கியமோ என கவின் கலங்குகிறார். அப்படியிருந்தாலும் அவரை மனப்பூர்வமாகக் காதலித்து கல்யாணமும் செய்து கொள்கிறார் இரண்டாவது காதலியாக வரும் அதிதி பொஹங்கர்.

ஒவ்வொருவருக்கும் கவின் அப்பா லால் போல ஒருவர் கிடைத்துவிட்டால் தங்கள் லட்சியங்களை அடைய நிறையவே முயற்சிப்பார்கள் இளைஞர்கள்.

படத்திற்கு பெரும் பலம் சேர்ப்பது யுவன்ஷங்கர் ராஜா. அவரது பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கான வரவேற்பை அதிகரித்திருக்கிறது.

இடைவேளைக்குப் பிறகான திரைக்கதை எங்கெங்கோ சுற்றிச் செல்வதைத் தவிர்த்திருக்கலாம். ஆனாலும், படத்தின் கிளைமாக்ஸ் நாம் எதிர்பார்க்காத ஒன்று. பல காட்சிகளை புதுமையாக யோசித்த இயக்குனர் படத்தின் நீளத்தையும் குறைத்திருக்க வேண்டும்.

Tags: star,

Share via: