உயிர் தமிழுக்கு - விமர்சனம்

11 May 2024

ஆதம் பாவா இயக்கத்தில், வித்யா சாகர் இசையமைப்பில், அமீர், சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்தராஜ் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

தேனியில் கேபிள் டிவி கம்பெனி நடத்தி வருபவர் அமீர். நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் சாந்தினி ஸ்ரீதரனைப் பார்த்ததும் காதல் கொள்கிறார். அதனால், அவரும் பக்கத்து வார்டில் போட்டியிடுகிறார். இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால், எதிர்க்கட்சியைச் சேர்ந்த அமீர் தன் பெண்ணைக் காதலிப்பதை சாந்தினியின் அப்பா ஆனந்தராஜ் எதிர்க்கிறார். இதனிடையே, ஆனந்தராஜ் திடீரென கொல்லப்படுகிறார். அந்தப்பழி அமீர் மீது விழுகிறது. சிறை சென்று வெளியில் வரும் அமீர் அடுத்த நடைபெற உள்ள சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார். அப்பாவைக் கொன்றவர் அமீர் என நம்பும் சாந்தினியும் அமீரை எதிர்த்துப் போட்டியிடுகிறார். இருவரியார் யார் வென்றது, ஆனந்தராஜைக் கொன்றது யார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு கலகலப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அமீர். எம்ஜிஆரின் தீவிர ரசிகர். படத்தில் ஆங்காங்கே நகைச்சுவையிலும் கலக்கியிருக்கிறார். அவர் பேசும் சில வசனங்கள் நாட்டு நடப்பை எதிர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. ‘வட சென்னை’ படத்தில் சீரியசான கதாபாத்திரத்தில் நடித்த அமீரா இது என ஆச்சரியப்படும் அளவிற்கு நடித்திருக்கிறார்.

அமீரின் காதலியாக சாந்தினி ஸ்ரீதரன். குடும்பப் பாங்காகவும், அழகாகவும் இருக்கிறார். அமீரைக் காதல் பார்வையாலேயே கவர்கிறார். அதே போலவே ரசிகர்களையும் கவர்கிறார். அமீரின் வலது கரங்களாக சுற்றிக் கொண்டிருக்கும் சிலரில் இமான் அண்ணாச்சிக்கு மட்டுமே அதிக வசனங்கள். படத்தில் முக்கிய காமெடியனே அவர்தான். இப்படத்தில் சீரியஸ் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார் ஆனந்தராஜ்.

வித்யாசாகர் இசை பரவாயில்லை ரகம்தான். தேவராஜ் ஒளிப்பதிவு தேனி வீதிகளை சுற்றி வருகிறது.

படத்தைப் பார்க்கும் போது 90களில் வந்த படங்களைப் போன்ற ஒரு உணர்வு வந்தாலும், ரசிக்கும்படியாக இருக்கிறது.

Tags: uyir tamizhukku

Share via: