ரசவாதி - விமர்சனம்
04 May 2024
சாந்தகுமார் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், அர்ஜுன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
கொடைக்கானலில் சித்த மருத்துவராக இருப்பவர் அர்ஜுன் தாஸ். அங்கு ஹோட்டலில் மேனேஜர் வேலைக்குச் சேரும் தன்யா ரவிச்சந்திரனைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். இருவரது காதலையும் பிரிக்க நினைக்கிறார் மாற்றலாக வந்த இன்ஸ்பெக்டர் சுஜித் சங்கர். அவருடைய கையில் அர்ஜுன் தாஸ் போட்டோ. இருவருக்கும் என்ன பிரச்சனை, என்பது பிளாஷ்பேக். இருவரது மோதலும் எப்படி முடிவுக்கு வருகிறது என்பதுதான் கிளைமாக்ஸ்.
ஒவ்வொரு படத்திலும் கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அர்ஜுன் தாஸ். ஆனால், ஒவ்வொரு படத்திலும் ஒரு நெகட்டிவ் ஷேடுடனேயே அவரது கதாபாத்திரம் அமைக்கப்படுகிறது. அவருக்கு அது பொருத்தமாக இருந்தாலும் தொடர்ந்து அப்படியே நடிப்பதைத் தவிர்க்கலாம். ஆள் பார்க்கத்தான் கரடுமுரடாக இருந்தாலும் அவ்வளவு நல்லவராக வடிவமைக்கப்பட்டிருக்கிறது அவரது கதாபாத்திரம்.
அர்ஜுன் தாஸ் காதலியாக தன்யா ரவிச்சந்திரன். அடிக்கடி கஞ்சா புகைக்கும் ஒரு கதாபாத்திரம். தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை மதுப்பிரியர்களாகவும், கஞ்சா பிரியர்களாகவும் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். மற்றொரு கதாநாயகியாக ரேஷ்மா வெங்கடேஷ். பிளாஷ்பேக்கில் வருகிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் இடம் பிடிக்கிறார். வில்லனாக மலையாள நடிகர் சுஜித் சங்கர். சைக்கோத்தனமான வில்லன். ரம்யா கதாபாத்திரம் சுவாரசியமாக இருந்தாலும் இயக்குனருக்கு ஏதோ ஒரு கோபம் போலிருக்கிறது. விமர்சனம் சொல்லும் டாக்டரை கிண்டலடித்திருக்கிறார்.
தமனின் பின்னணி இசை, சரவணன் இளவரசு ஒளிப்பதிவு ரசவாதியின் ரசனையை கூடுதலாக்குகிறது.
‘மௌன குரு, மகாமுனி’ என மிரட்டலான படங்களைக் கொடுத்த இயக்குனர் இந்தப் படத்தில் ஒரு லைட்டான கதையுடன் திருப்தியடைந்து விட்டாரோ ?.
Tags: rasavathi