அரண்மனை 4 - விமர்சனம்

04 May 2024

சுந்தர் சி இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், தமன்னா, ராஷி கண்ணா, சுந்தர் சி, யோகிபாபு மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

‘அரண்மனை’ பட வரிசையில் வந்துள்ள நான்காவது பாகத் திரைப்படம். மிரட்டலான கிராபிக்ஸ் காட்சிகள், சுவாரசியமான திரைக்கதை, அவ்வப்போது கலகலப்பான காமெடி என இரண்டரை மணி நேரப் படத்தை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.

சுந்தர் சி-யின் தங்கையான தமன்னா, சந்தோஷ் பிரதாப்பைக் காதலித்து வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொள்கிறார். இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் தமன்னாவும், அவரது கணவர் சந்தோஷ் பிரதாப்பும் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். தகவல் கேட்டு அந்த ஊருக்குச் செல்கிறார் சுந்தர் சி. அங்கு தொடர்ந்து சில மர்மமான சம்பவங்களும், அடுத்தடுத்து வேறு சில மரணங்களும் நடக்கிறது. அவற்றிற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க சுந்தர் சி முயல்கிறார். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தனக்குப் பொருத்தமான ஒரு கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் சுந்தர் சி. தமன்னர், ராஷி கண்ணா கதாபாத்திரங்களை விடவும் படம் முழுவதும் சுந்தர் சியைச் சுற்றித்தான் கதை நகர்கிறது. வக்கீலாக இருந்தாலும் போலீஸ் போல அடுத்தடுத்த மரணங்களுக்கான காரணங்களைக் கண்டுபிடிக்க விசாரணையில் இறங்குகிறார்.

டிரைலரில் தமன்னா, ராஷி கண்ணா ஆகியோரைப் பார்த்து கிளாமரில் அசத்தியிருப்பார்கள் என நம்பி ஏமாந்துவிட வேண்டாம். இருவருமே ஒரு இடத்தில் கூட அப்படி நடிக்கவில்லை. படம் முடிந்த பின்தான் அந்த கிளாமர் பாடலை வைத்திருக்கிறார்கள். டிரைலரைக் காட்டி ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார் சுந்தர் சி. பாசத்திற்காக ஏங்கும் கதாபாத்திரத்தில் தமன்னா. அரண்மனை வீட்டின் வாரிசாக ராஷி கண்ணா.

அரண்மனையில் பணி புரியும் மேஸ்திரியாக யோகி பாபு, கார்பென்டராக விடிவி கணேஷ், சுந்தர் சியின் அத்தையாக கோவை சரளா, வீட்டில் பணிபுரியும் சேஷ ஆகியோர் சில காட்சிகளில் காமெடி செய்திருக்கிறார்கள்.

ஹிப்ஹாப் தமிழா இசையில் பின்னணி இசை பரபரப்பைக் கூட்டியுள்ளது. ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமி படத்தை பிரம்மாண்டமாகக் காட்டியிருக்கிறார். படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளை அமைத்த குழுவினரைப் பாராட்ட வேண்டும். தமிழ் சினிமாவில் இதுவரைவந்த கிராபிக்ஸ் காட்சிகளை மிஞ்சியிருக்கிறது இப்படத்தின் தரம்.

பிளாஷ்பேக் பேயைப் பற்றிய கதை, அது தொடர்பான காட்சிகள் கொஞ்சம் தொய்வைத் தந்தாலும் முழு படமும் சுவாரசியமாக அமைந்துள்ளது.

Tags: aranmanai 4, sundar c, tamannah, rashi khanna

Share via: