குரங்கு பெடல் - விமர்சனம்
04 May 2024
கமலக்கண்ணன் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், காளி வெங்கட், சந்தோஷ் வேல்முருகன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம்.
தமிழ் சினிமாவில் சிறுவர்கள் நடித்து கடைசியாக ரசிக்க வைத்த படம் ‘பசங்க’. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படமும் சிறுவர்களை மையமாக வைத்து நம்மை உணர்வுபூர்வமாக ரசிக்க வைத்திருக்கிறது. ஒரு சிறுவனின் ஆசை அந்த அளவிற்கு யதார்த்தமாய், அருமையாய் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் கமலக்கண்ணன்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தறி நெய்யும் வேலை செய்பவர் காளி வெங்கட். அவரது ஒரே மகன் சந்தோஷ் வேல்முருகன். ஐந்தாவது வகுப்பு தேர்வு எழுதி முடித்த பின் விடுமுறை நாளில் சைக்கிள் ஓட்டிப் பழக வேண்டும் என ஆசைப்படுகிறான் சந்தோஷ். அதற்காக வீட்டிலிருந்து காசு திருடி வாடகை சைக்கிளை ஓட்டிப் பழகுகிறான். ஒரு நாள் சைக்கிளை விட கொஞ்சம் தாமதம் ஆகிறது. கூடுதலாக வாடகை தர வேண்டும் என்பதால் பக்கத்து ஊரில் இருக்கும் அக்கா வீட்டிற்குச் சென்று காசு கேட்கப் போகிறான். அவன் திரும்பி வராததால் காளி வெங்கட், மற்றும் ஊரார் சந்தோஷைத் தேடுகிறார்கள். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
90களுக்கு முன்பாகப் பிறந்தவர்களுக்குத்தான் இந்த வாடகை சைக்கிள் பற்றித் தெரியும். அதற்கு முன்பாக கிராமத்து வீடுகளில் கூட ஒரு சைக்கிள் இருந்தாலே ஆச்சரியம்தான். எங்கே வெளியே சென்றாலும் வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டுதான் செல்வார்கள்.
இப்படம் முழுவதையும் மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன் தனது தோளில் தாங்குகிறார். இதற்கு முன்பு சினிமாவில் நடித்த அனுபவம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால், இந்தப் படத்தில் அவரது நடிப்பு எந்த இடத்திலும் நடிப்பாகத் தெரியவேயில்லை.
அப்பா கதாபாத்திரத்தில் காளி வெங்கட். எந்தக் கதாபாத்திரம் வேண்டுமானாலும் கொடுங்கள். அதில் யதார்த்தமாய் நடித்துக் காட்டுகிறேன் என சவால்விடும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் காளி வெங்கட்.
சைக்கிள் கடை நடத்தும் பிரசன்னா, அவரிடம் சைக்கிளை அடமானம் வைக்கும் ஜென்சன் திவாகர் இருவரும் சிரிக்க வைக்கிறார்கள்.
ஜிப்ரான் பின்னணி இசை படத்தில் குறிப்பிட வேண்டிய ஒன்று. உணர்வு பூர்வமான காட்சிகளில் அவரது இசை பங்களிப்பு பலமாக இருக்கிறது. 80களின் கிராமத்தைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் சுமீ பாஸ்கரன்.
ஒரு அழகான வாழ்வியல் படமாக ரசிக்க வைக்கிறது இந்த ‘குரங்கு பெடல்’.
Tags: kurangu pedal