ஃபைண்டர் - விமர்சனம்
21 Apr 2024
வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில், சூர்ய பிரசாத் இசையமைப்பில், வினோத் ராஜேந்திரன், சார்லி, சென்ட்ராயன், தாரணி, நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
சென்னையை அடுத்த பழவேற்காட்டில் வசிக்கும் மீனவர் சார்லி. அவர் மனைவி சீட்டுக்காக வசூலித்த பணத்தை சீட்டு கம்பெனி நடத்தியவர் ஏமாற்றிச் சென்றுவிடுகிறார். ஏமாந்த மக்கள் பணம் கேட்டு சார்லி குடும்பத்தாரிடம் சண்டைக்கு வருகிறார்கள். பணத்தை அடைக்க செய்யாத கொலை ஒன்றை செய்ததாகச் சொல்லி சிறைக்குச் செல்கிறார் சார்லி. அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது. அப்பாவைக் காப்பாற்ற அவரது மகள் போராடுகிறார். கிரிமினாலஜி படித்து முடித்த மாணவர் வினோத் ராஜேந்திரன், தாரணி ஆகியோர் புதிதாக ஆரம்பிக்கும் ‘ஃபைண்டர்’ நிறுவனம் மூலம் சார்லியை விடுவிக்க முயற்சிக்கிறார்கள். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
யாரோ ஒருவர் கொலை செய்ய, பணத்திற்காக அந்தக் கொலைப்பழியை ஏற்று சிறைக்குச் சென்றவர்களை பல சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்டவர்களது குடும்பம் எப்படி இருக்கும், என்னவெல்லாம் கஷ்டப்படுவார்கள் என்பதை முதல் முறை சொல்லியிருக்கும் படம் இது. இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கம், நடிப்பில் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். பலருக்கும் தெரியாத குற்றப் பின்னணி கொண்ட கதையை எளிமையாகப் புரிய வைத்துள்ளார். அவரது ஜோடியாக நடித்துள்ள தாரணியும் இயல்பாக நடித்திருக்கிறார்.
செய்யாத கொலைக்காக சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் அப்பாவி மனிதராக சார்லி. நம்மை சோகத்தில் ஆழ்த்துகிறார். அவரை மீட்கத் துடிக்கும் மகளாக நடித்திருப்பவரும் யதார்த்தமாக நடித்திருக்கிறார். சார்லியை சிக்க வைக்கும் ஆளாக சென்ட்ராயன். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் முத்திரை பதிக்கிறார் நிழல்கள் ரவி.
சூர்ய பிரசாத் பின்னணி இசை, பிரசாந்த் வெள்ளியங்கிரியின் ஒளிப்பதிவு இயக்குனருக்குக் கை கொடுத்திருக்கிறது.
இடைவேளைக்குப் பிறகான கதை நல்ல திருப்பங்களுடன் பரபரப்பாக நகர்கிறது. மேக்கிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
Tags: finder