வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்
13 Apr 2024
விநாயக் துரை இயக்கத்தில், சகிஷ்னா சேவியர் இசையமைப்பில், ஸ்வாதி மீனாட்சி, அனன்யா மணி, தேஜ் சரண்ராஜ், ரெஜின் ரோஸ், ராஜேஷ் பாலசந்திரன், விக்ரம் ஆதித்யா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
டாக்சி டிரைவராக வேலை பார்க்கும் ஸ்வாதி மீனாட்சி, காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றி பணம் பறிக்கும் அனன்யா மணி, திருட்டு வேலைகளைச் செய்யும் தேஜ் சரண்ராஜ், ரெஜின் ரோஸ், லஞ்சம் வாங்குவதையே கடமையாகக் கொண்ட இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாலசந்திரன், உடல் உறுப்புகளுக்காகவே கடன் கொடுத்து ஏமாற்றும் விக்ரம் ஆதித்யா. இவர்களைச் சுற்றி நடக்கும் கதை. ஒவ்வொரும் ஒரு சிக்கலில் சிக்க அவை தீர்கிறதா இல்லையா, ஒருவருக்கொருவர் எப்படி தொடர்பு வருகிறது என்பதைச் சொல்லியிருக்கும் படம் இது.
சினிமா ரசிகர்களுக்கு அதிக பரிச்சயமில்லாத நடிகர்கள், நடிகைகள். ஆனால், அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாலசந்திரன் மட்டும் கொஞ்சம் எரிச்சலூட்டுகிறார்.
இரவு நேரக் காட்சிகள் படத்தில் அதிகம் உள்ளது. ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து அதற்கான லைட்டிங்கில் கவனம் பெறுகிறார். குழப்பமில்லாத படத்தொகுப்பை அஜய் தந்திருக்கிறார். சகிஷ்னா சேவியர் பின்னணி இசை பரவாயில்லை.
‘பணம்’ என்ற தேவையில் படத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய கதாபாத்திரங்கள் எப்படி கிளைமாக்சில் இணைகிறது என்பது திரைக்கதையில் உள்ள அருமையான யுத்தி. திரைக்கதையில் உள்ள திருப்பம், காட்சிகளில் இன்னும் பரபரப்புடன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
Tags: vallavan vaguthathada