டியர் - விமர்சனம்

12 Apr 2024

ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், ஜிவி பிரகாஷ்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம்.

படத்தின் கதாநாயகி கதாபாத்திரப் பெயரான Deepika (தீபிகா), கதாநாயகன் கதாபாத்திரப் பெயரான Arjun (அர்ஜுன்) ஆகியோரது பெயரின் முதல் எழுத்துக்களை வைத்து ‘DeAr” என தலைப்பு வைத்திருக்கிறார்கள். பெயர்தான் ‘டியர்’ ஆனால் படத்தில் விலகியே இருக்கிறார்கள். ‘டியர்’ ஆக இருந்து விலகிய அவர்கள் ‘நியர் (near)’ ஆக வந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

சென்னையில் டிவி செய்தி வாசிப்பாளராக இருப்பவர் ஜிவி பிரகாஷ்குமார். குன்னூரில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தூங்கும் போது குறட்டை விடுவேன் என ஐஸ்வர்யா உண்மையைச் சொன்னதால் வந்த மாப்பிள்ளைகள் பலரும் ஓடிவிடுகிறார்கள். அதனால், ஜிவி பிரகாஷ் பெண் பார்க்க வந்த போது அதை மறைக்கிறது அவரது குடும்பம். திருமணத்திற்குப் பிறகு உண்மை தெரிய வர, நிம்மதியாக தூங்கும் பழக்கம் கொண்ட ஜிவிக்கு அது பெரிய பிரச்சனையாகத் தெரிகிறது. அதனால், மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்து விவாகரத்து கேட்கிறார். இருவரையும் சேர்த்து வைக்க பெரியவர்கள் முயன்றும் முடியவில்லை. இதன்பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

உணர்வு பூர்வமாக பல காட்சிகளில் நடிக்க வேண்டிய ஒரு கதாபாத்திரம். அனைத்திலுமே அழுத்தமாகவே நடித்திருக்கிறார் ஜிவி பிரகாஷ். மனைவி ஒரு பக்கம், மனைவி குடும்பத்தினர் மற்றொரு பக்கம், தனது குடும்பத்தினர் இன்னொரு பக்கம் அனைவரையும் சமாளிக்க வேண்டிய ஒரு கதாபாத்திரம். தனது எதிர்பார்ப்புக்குரிய வாழ்க்கை அமையவில்லை என்றால் ஒருவன் எவ்வளவு சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது என ஜிவி பிரகாஷ் கதாபாத்திரம் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் அட்டகாசமாக நடிப்பவர் எனப் பெயரெடுத்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தப் படத்திலும் அதே பெயரைத் தக்க வைத்துக் கொள்கிறார். ஜிவி தன்னை வெறுத்தாலும் அவரது குடும்பத்தினர் மீது பாசமாய் இருக்கும் ஒரு கதாபாத்திரம். மாமியாரின் ஆசையை நிறைவேற்றி வைக்கும் பாசமான மருமகளாய் கவர்ந்திருக்கிறார்.

மற்ற கதாபாத்திரங்களில் காளி வெங்கட் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார். எதிலும் பர்பெக்ஷன் பார்க்கும் ஒரு கதாபாத்திரம். அவரது மனைவியாக நந்தினி, இனி பல படங்களில் அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் இவரைப் பார்க்கலாம். கீதா கைலாசம் - இளவரசு, ரோகினி - தலைவாசல் விஜய், அம்மா அப்பா கதாபாத்திரங்களில் வழக்கம் போலவே இயல்பான நடிப்பு.

இன்றைய இளம் தம்பதியினர் அவர்களது வாழ்க்கையில் சில சிறிய பிரச்சனைகளைக் கூட விஸ்வரூபமாக்கி பெரிய பிரச்சனையாக நினைக்கிறார்கள். ஆனால், முதிர்ந்த தம்பதியினர் பெரிய பிரச்சனைகளைக் கூட மறந்து மன்னித்து வாழ்க்கையைக் கடத்துகிறார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

தலைவாசல் விஜய் - ரோகினி, காளி வெங்கட் - நந்தினி, ஜிவி பிரகாஷ் - ஐஸ்வர்யா என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரது இல்லற வாழ்க்கை முறை எப்படியாக அமைந்துள்ளது என்பதை ஒரு பாடமாகவே கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த் என்று தாராளமாகச் சொல்லலாம்.

‘குறட்டை’ என்பது மட்டும் ‘குட்நைட்’ படத்தை ஞாபகப்படுத்தினாலும், அதை மறக்க வைத்து வேறொரு தளத்தில் கதையை நகர்த்தி அழுத்தமான உணர்வுகளுடன் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

Tags: dear, gv prakashkumar, aishwarya rajesh

Share via: