ரோமியோ - விமர்சனம்
12 Apr 2024
விநாயக் வைத்யநாதன் இயக்கத்தில், பரத் தனசேகர் இசையமைப்பில், விஜய் ஆண்டனி, மிர்ணாளினி ரவி, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
மலேசியாவில் வேலை செய்து நன்றாக சம்பாதித்துவிட்டு தன் சொந்த ஊரான தென்காசிக்குத் திரும்புகிறார் விஜய் ஆண்டனி. அவருக்குத் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்கிறார்கள். விஜய் ஆண்டனி ஆசைப்பட்டபடியே மிர்ணாளினி ரவியைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், நடிகையாக வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் மிர்ணாளினி, விஜய் ஆண்டனியை வெறுக்கிறார். மனைவியின் விருப்பத்திற்கு மரியாதை கொடுத்து ஒதுங்கியே இருக்கிறார். ஒரு கட்டத்தில் மனைவிக்காகவே அவரே சொந்தமாக படம் தயாரிக்கிறார். இதன்பிறகாவது விஜய் ஆண்டனியின் காதலை மிர்ணாளினி புரிந்து கொண்டாரா இல்லையா என்பதுதான் ‘ரோமியோ’.
த்ரில்லர் கதைகளில் அதிகமாகவே நடித்த விஜய் ஆண்டனிக்கு இந்த ‘ரோமியோ’ கதாபாத்திரம் வித்தியாசத்தைத் தந்துள்ளது. 35 வயதைக் கடந்தவருக்கு வரும் காதல் எப்படி இருக்கும் என்பதை மெச்சூரிட்டியாகத் தந்துள்ளார். மனைவியின் விருப்பத்தைப் புரிந்து கொண்டு அவருக்கு விருப்பமானவற்றையே செய்யும் பாசக்கார கணவனாக மனதில் இடம் பிடிக்கிறார்.
தென் தமிழகத்தின் மூலையிலிருந்து சினிமா ஆசைக்காக பெற்றோருக்குத் தெரியாமல் ஒரு பெண் சென்னையில் இருக்க முடியுமா என்ற கேள்வி மிர்ணாளினி கதாபாத்திரத்தில் வருகிறது. நண்பர்களுடன் தங்கியிருந்து குடிப்பழக்கமும் உள்ளவர் என ஆரம்பத்திலேயே அதிர்ச்சி தருகிறார்கள். எமோஷனலான ஒரு கதாபாத்திரம், குறை வைக்காமல் நிறைவாகவே நடித்திருக்கிறார் மிர்ணாளினி.
படத்தில் யோகி பாபு சில காட்சிகள் வந்து போனாலும், அவரைவிடவும் விடிவி கணேஷ்தான் சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்களில் மிர்ணாளினியின் நண்பர்கள், தோழி இயல்பாய் நடித்திருக்கிறார்கள். விஜய் ஆண்டனியின் பெற்றோர்களாக இளவரசு, சுதா, மிர்ணாளினியின் பெற்றோர்களாக தலைவாசல் விஜய், ஸ்ரீஜா ரவி சில காட்சிகளாக இருந்தாலும் அனுபவத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
படம் முழுவதுமே உணர்வுபூர்வமான காட்சிகளாக நிறைந்திருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு மனைவியின் ஆசை என்னவாக இருந்தாலும் அதை நிறைவேற்றி வைக்கும் கணவன் அமைவதெல்லாம் இந்தக் காலத்தில் வரம்.
இடைவேளைக்குப் பின் சினிமா தயாரிப்பு, அதில் வரும் சிக்கல் என வேறு தடத்தில் கதை பயணிக்கிறது. எமோஷனலை விடவும் காமெடியையும் அதிகம் சேர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
Tags: romeo, vijay antony, mirnalini ravi, yogi babu