டபுள் டக்கர் - விமர்சனம்

07 Apr 2024

மீரா மகதி இயக்கத்தில், வித்யாசாகர் இசையமைப்பில், தீரஜ், ஸ்ம்ருதி வெங்கட் மற்றம் பலர் நடித்திருக்கும் படம்.

ஒரு பேன்டஸி, சென்டிமென்ட் கதையை சுவாரசியமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் மீரா மகதி. சிறு வயதில் நடந்த விபத்தில் முகத்தின் ஒரு பகுதி காயமடைந்து நிரந்தரத் தழும்பாக இருக்கிறது. அதனால், பலரும் தன்னை வெறுப்பதால் தவிப்பவர் தீரஜ். அவரது நெருங்கிய தோழி ஸ்ம்ருதியிடம் காதலைச் சொல்கிறார். ஆனால், அவர் பதில் சொல்லாததால் தற்கொலை செய்து கொள்கிறார். கடவுளின் உலகத்திலிருந்து வரும் இரண்டு அனிமேஷன் உருவங்களான ‘லெப்ட், ரைட்’,  தீரஜ் 85 வயது வரை வாழ வேண்டியவர் என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள். அதனால் அவருக்கு உயிர் கொடுக்க முயற்சிக்க, தீரஜ் உடலை யாரோ கடத்தி விடுகிறார்கள். ஆவியாக இருக்கும் தீரஜை அழைத்துக் கொண்டு உடலைத் தேடிச் செல்கிறார்கள். அவரது உடல் கிடைத்ததா, தீரஜ் மீண்டும் உயிர் பெற்றாரா, அவரது காதல் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இது படத்தின் ஒரு பகுதி கதை மட்டும்தான். இதுபோல இன்னும் சில கிளைக் கதைகள் படத்தில் உள்ளன. அத்தனை கிளைக்கதைகளும் தீரஜ் கதையுடன் வந்து இணைவது போல கிளைமாக்சை முடித்திருக்கிறார் இயக்குனர். குழந்தைகளைக் கவரும் விதத்தில் படத்தைக் கொடுக்க முயற்சித்து அதை பூர்த்தியும் செய்திருக்கிறார்.

தழும்புடன் கூடிய முகத்தால் தன்னைப் பலரும் வெறுப்பதை நினைத்து கவலைப்படும் அப்பாவியாக தீரஜ். அவரைப் போலவே தோற்றம் கொண்ட மற்றொருவரது உடலில் நுழைந்த பின் அந்த அப்பாவித்தனம் இல்லாமல் காதல், காமெடி என நடிப்பிலும் தீவிரம் காட்டியிருக்கிறார் தீரஜ்.

காதலுக்கு அழகு முக்கியமல்ல, மனம்தான் முக்கியம் என தீரஜைக் காதலிக்கும் ஸ்ம்ருதி வெங்கட் அவரைப் பற்றிய உண்மையைத் தெரிந்து கொண்டு உதவுகிறார்.

மையக் கதையிலிருந்து விலகி செல்லும் சில கிளைக் கதைகளின் கதாபாத்திரங்கள் சுவாரசியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஸ்ம்ருதியின் பெரியப்பாவாக மன்சூரலிகான், தீரஜின் பிரம்மாண்ட வீட்டைக் கைப்பற்ற நினைக்கும் கிரிமினல்கள் சுனில் ரெட்டி, ஷாரா, மன்சூரலிகான் டிரைவர் கருணாகரன், மன்சூர் ஆசைப்பட்ட நடிகையான யாஷிகா ஆனந்த், மன்சூருக்கு உதவி செய்யும் பெண் இன்ஸ்பெக்டர் கோவை சரளா, மனநல மருத்துவமனையில் இருக்கும் எம்எஸ் பாஸ்கர் இப்படி பல கதாபாத்திரங்களில் சில முக்கிய நடிகர்கள், நடிகைகள் வந்து போகிறார்கள்.

குறிப்பாக கோவை சரளா, மன்சூரலிகான் போன் உரையாடல் காட்சி படத்தின் ஹைலைட்டான நகைச்சுவைக் காட்சியாக அமைந்துள்ளது. ஷாரா, சுனில் சம்பந்தப்பட்ட காட்சிகளை இன்னும் சேர்த்திருக்கலாம்.

இறந்த உடல், மற்றொரு உடலில் வேறொருவது ஆவி, கடவுள் உலகத்திலிருந்து சில அனிமேஷன் கதாபாத்திரங்கள், என படத்தில் என்னென்னமோ இடம் பெற்றுள்ளது. ஒரே படத்தில் விதவிதமாக செய்ய வேண்டும் என இயக்குனர் நினைத்திருக்கிறார்.

வித்யாசாகர் இசையில் ‘கிணி கிணி’ ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவு, அனிமேஷன், விஎப்எக்ஸ் காட்சிகள் படத்திற்கு டக்கரான பலத்தைக் கொடுத்திருக்கிறது.

நிறைய கதாபாத்திரங்களால் ஏற்படும் சிறு குழப்பத்தைத் தவிர்த்து இரண்டு மணி நேரப் படத்தை இன்னும் கொஞ்ச நேரம் நீட்டித்து எடுத்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும்.

Tags: double tucker, dheeraj, vidyasagar

Share via: