நிழல் - விமர்சனம்

13 Jun 2026

இயக்குநர் ஏ.கே.குமார் தனது சமீபத்திய படமான ‘நிழல்’ மூலம், பழிவாங்கும் உணர்வை மையப்படுத்திய ஒரு விறுவிறுப்பான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லரை வழங்கியிருக்கிறார். வழக்கமான பழிவாங்கும் கதைகளிலிருந்து வேறுபட்டு, பெண்களுக்கு எதிரான அநீதிகளை உணர்வுபூர்வமாக அணுகியிருக்கும் இந்தப் படம், பார்வையாளர்களை தொடர்ந்து ஆர்வமுடன் வைத்திருக்கிறது.

மருத்துவரான ஜனனி, தொழிலதிபரின் மகன் ஹரி விஜய் மற்றும் அவரது இரண்டு நண்பர்களை கொடூரமாகத் தாக்கி கொலை செய்ய முயல்கிறாள். தாக்குதலில் இருந்து தப்பிக்கும் அந்த மூவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். தொழிலதிபரின் மனைவி, தன் மகனின் இந்த நிலைக்குக் காரணமானவர்களை காவல்துறை அதிகாரி ஒருவரின் உதவியுடன் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறாள். அப்போது ஜனனி தொடர்பான பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவருகின்றன. அது என்ன? ஜனனியின் இந்தக் கொடூரத் தாக்குதல்களுக்கான உண்மையான காரணம் என்ன? என்பதை விறுவிறுப்பான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராகச் சொல்வதே ‘நிழல்’.

நாயகியாக ஜனனி முதன்முறையாக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து, ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். கோபம், பழிவாங்கும் உணர்வு, உணர்ச்சிகரமான பரிமாணங்கள் என பல அடுக்குகளை திறமையாக வெளிப்படுத்தியிருக்கும் அவர், தனது நடிப்பால் கதாபாத்திரத்திற்கு முழு நியாயம் சேர்த்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் கடுமையாக உழைத்து, நம்பும்படியான விதத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார்.

காவல்துறை அதிகாரி மற்றும் ஜனனியின் காதலன் வேடத்தில் விஷாகன், தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை திறமையாகவும் இயல்பாகவும் கையாண்டிருக்கிறார். வில்லன் பாத்திரத்தில் ஹரி விஜய், கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமான தேர்வாக அமைந்து படத்திற்கு கூடுதல் வலிமை சேர்த்திருக்கிறார்.

இரண்டாவது நாயகனாக கெளஷிக், கதையின் முக்கிய திருப்புமுனையாக அமைந்த பாத்திரத்தில் தனது இருப்பை உறுதியாக நிலைநாட்டியிருக்கிறார். வழக்கறிஞராக அபிஷேக் சங்கர், ஜனனியின் தந்தையாக ரமேஷ் கண்ணா உள்ளிட்ட மற்ற நடிகர்கள் அனைவரும் தங்கள் பாத்திரங்களை சரியான அளவில், திறமையாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மோகன்குமார் இரவு நேரக் காட்சிகள் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளை உயர் தரத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். ஒளியமைப்பு மற்றும் கேமரா கோணங்களின் மூலம் தனது திறமையை நிரூபித்த மோகன்குமார், படம் முழுவதையும் தரமான விதத்தில் படம்பிடித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் எம். அபுபக்கரின் பாடல்கள் சராசரி அளவிலேயே இருந்தாலும், பின்னணி இசை மிகச் சிறப்பாக அமைந்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. படத்தொகுப்பாளர் தினேஷ் முதல் பாதி முழுவதும் சஸ்பென்ஸை உடையாமல் கதையை நகர்த்திச் செல்வதோடு, இரண்டாம் பாதியில் திருப்பங்களை சரியான நேரத்தில் தொகுத்து, படத்தை தொடர்ந்து விறுவிறுப்பாக வைத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் ஏராளமான பழிவாங்கும் படங்கள் வந்தாலும், அவற்றிலிருந்து தனது கதையை தனித்துவமாக வேறுபடுத்திக் காட்டும் வகையில் திரைக்கதையை அமைத்து இயக்கியிருக்கும் ஏ.கே.குமார், கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தை உணர்வுபூர்வமாகக் கையாண்டிருக்கிறார்.

பெண்களுக்கு எதிராக அநீதி இழைப்பவர்கள் சட்டத்திலிருந்து தப்பினாலும், அவர்களுக்கு ஏதோ ஒரு வழியில் தண்டனை கிடைக்க வேண்டும் என்ற கருத்தை வலுவாக முன்வைத்த இயக்குநர், அதை சுவாரஸ்யமான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக ரசிக்க வைத்திருக்கிறார்.

Tags: nizhal

Share via: