ஆட்டி - விமர்சனம்

13 Jun 2026

இயக்குநர் தி.கிட்டு தனது சமீபத்திய படமான ‘ஆட்டி’ மூலம், 1970களின் மலைச்சாரல் பின்னணியில் ஒரு மர்மமான சஸ்பென்ஸ் திரில்லரை வழங்கியிருக்கிறார். தேயிலைத் தோட்டங்கள் சூழ்ந்த அந்த ஊரின் அமைதியான தோற்றத்துக்குப் பின்னால் மறைந்திருக்கும் இருண்ட ரகசியங்களை, பார்வையாளர்களை படிப்படியாக அவிழ்த்து விடும் விதத்தில் கட்டமைத்திருக்கிறார்.

1970களில் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த மலைக்கிராமத்தில் உள்ள காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வரும் இசக்கி கார்வண்ணன், அங்கு ஒரு குற்ற வழக்குகூடப் பதிவாகாமல் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறார். அதே சமயம், புதிதாக ஆசிரியராக வந்த பிரவீன் பழனிசாமி மர்மமான முறையில் கொடூரமாகக் கொல்லப்படுகிறார். இந்த வழக்கை விசாரிக்கும் இசக்கி, ஊரின் பல அதிர்ச்சிகரமான உண்மைகளை அறிந்துகொள்ளும் அதே வேளையில், முகமூடி அணிந்த ஐந்து பேர் கொண்ட ஒரு குழு தொடர்ச்சியாகக் கொலைகளைச் செய்வதையும் கண்டுபிடிக்கிறார். அவர்கள் யார்? எதற்காக இந்தக் கொலைகள்? ஆசிரியர் கொலைக்கும் அவர்களுக்கும் தொடர்பு உண்டா? எனும் கேள்விகளுக்கு சஸ்பென்ஸ் நிறைந்த விதத்தில் பதில் சொல்லும் வகையில் படம் பயணிக்கிறது.

நாயகனாக இசக்கி கார்வண்ணன் தனது கம்பீரமான தோற்றம், கூர்மையான பார்வை மற்றும் தெளிவான சிந்தனையால் கதாபாத்திரத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறார். நாயகன் பாத்திரத்தில் இருந்தாலும், தன்னை முன்னிலைப்படுத்தாமல் திரைக்கதைக்கே முக்கியத்துவம் கொடுத்து படத்தின் ஒட்டுமொத்த தரத்தை உயர்த்தியிருக்கிறார்.

அழுத்தமான கதாபாத்திரத்தில் அபி நட்சத்திரா தனது முதிர்ச்சியான நடிப்பால் கவனத்தை ஈர்க்கிறார். இருப்பினும், அவரது பாத்திர வடிவமைப்பு மற்றும் அதற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் சற்று ஏமாற்றமே மிஞ்சுகிறது.

ஆசிரியர் பாத்திரத்தில் பிரவீன் பழனிசாமி சிறிய வேடத்தில் இருந்தும், தனது நடிப்பால் கதைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். காவலர் செல்வகுமார், காதல் சுகுமார், கரண் சக்கரவர்த்தி, சவுந்தர் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் அனைவரும் தங்கள் பாத்திரங்களைத் திறமையாகவும், இயல்பாகவும் வாழ வைத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சிபி சதாசிவம் இயற்கையின் அழகையும், அந்தப் பகுதியில் நிலவும் ஆபத்தின் சூழலையும் மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருப்பதோடு, 1970களின் காலச்சூழலை உணர வைக்கும் விதத்தில் பணியாற்றியிருக்கிறார். பின்னணி இசை அமைப்பாளர் தீசன் காட்சிகளுக்கு ஏற்றவாறு இசையைப் பயன்படுத்தியிருப்பதுடன், மலைப்பகுதியின் இயற்கை ஒலிகளைத் துல்லியமாக இணைத்து கவனத்தை ஈர்க்கிறார்.

படத்தொகுப்பாளர் சி.எம். இளங்கோவன் திருப்பங்கள் நிறைந்த கதையை எதிர்பாராத விதத்தில் தொகுத்து, பார்வையாளர்களை தொடர்ந்து ஆர்வமுடன் வைத்திருக்கிறார். கலை இயக்குநர் முஜீபிர் ரஹ்மான் 1970களின் ஆடை வடிவமைப்பு, கட்டிட அமைப்பு உள்ளிட்ட அனைத்தையும் உண்மையாகவும், படத்திற்கு கூடுதல் வலிமை சேர்க்கும் விதமாகவும் உருவாக்கியிருக்கிறார்.

மர்மங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் முதல் பாதி சுவாரஸ்யமாகப் பயணிக்கிறது. இரண்டாம் பாதியில் பெண்களுக்கு எதிரான கொடூரக் குற்றங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் மையமாக வருவதால், படம் அதிரடி திரில்லர் பாதைக்கு மாறுகிறது. இயக்குநர் திருமுருகன் வேகமான, விறுவிறுப்பான திரைக்கதை மூலம் கதையை முன்னெடுப்பதோடு, வரலாற்று ரீதியாக பெண்களுக்கு எதிராக நடந்த அநீதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார். 

Tags: aatti

Share via: