ஹபீபி - விமர்சனம்
13 Jun 2026
மீரா கதிரவன், தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் அறிந்திராத ஒரு இயக்குனர். இதற்கு முன்பு ஜெய் நடித்த ‘‘அவள் ஒரு தமிழரசி, விழித்திரு” ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர்.
அவரது மூன்றாவது படமாக நேற்று ஜுன் 12 வெளியாகி உள்ள படம் ‘ஹபீபி’.
‘ஹபீபி’ என்றால் அரபு மொழியில், ‘என் உயிர்’ அல்லது ‘என் அன்பு’ என்று தமிழில் அர்த்தம் சொல்கிறது கூகுள்.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் தான் படத்தின் கதைக்களம். அங்கு ‘கட்டுத் தறி’ போட்டு பரம்பரை பரம்பரையாக நெசவு செய்யும் குடும்பம் யூசுப் பாய் குடும்பம். அவருக்கு ஒரே ஒரு ஒரு மகன் அபுதாஹிர். சிறு வயதிலிருந்தே நிலோபர் என்ற பெண்ணைப் பார்த்தால் அவ்வளவு ஆனந்தம். பள்ளியில் படிக்கும் போது நிலோபர் மீது அது காதலாக மாறுகிறது. ஆனால், கட்டுக்கோப்பான முஸ்லிம் ஊர் என்பதால் காதலைச் சொல்லத் தயக்கம். இருவரும் பார்வையாலேயே காதலை பரிமாறிக் கொள்கிறார்கள்.
ஒரு நாள் தைரியம் வந்து நிலோபர் வீட்டிற்குச் சென்று காதலை சொல்ல முயற்சிக்கிறார் அபுதாஹிர். ஆனால், ஊர் மக்களிடம் மாட்டிக் கொள்கிறார். ஆனால், தான் திருடத்தான் அந்த வீட்டிற்குப் போனேன் எனச் சொல்லி நிலோபர் மீதும் பழி விழாமல் காப்பாற்றுகிறார். அதனால், ஊர் பஞ்சாயத்தின் தீர்ப்புப்படி சட்டையைக் கழற்றி வெறும் முதுகில் கசையடி கொடுக்கப்படுகிறது.
பின்னர், வேலைக்காக அரபு நாட்டுக்குச் சென்றுவிடுகிறார். சில வருடங்களுக்குப் பிறகு ஊருக்கு வருகிறார். திருமண வயது சற்றே கடந்திருந்தாலும் அவருக்குத் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முயற்சிக்கிறார்கள். அவருக்குப் பெண் கிடைத்ததா, அவரது திருமணம் நடந்ததா இல்லையா என்பதுதான் மீதிக் கதை.
படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் நடித்த கதாபாத்திரங்கள்தான் நம் மனதில் நிற்கிறது. அந்தப் பெயரை வைத்து எழுதத் தோன்றுவதுதான் இந்தப் படத்திற்குக் கிடைத்துள்ள வெற்றி. சில படங்களுக்கு மட்டுமே இப்படி அமையும்.
படத்தில் ஆச்சரியப்பட வைக்கும் சில விஷயங்கள் இருக்கின்றன. தமிழ் சினிமாவில் ஒரு முழுமையான இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் ஒரு படம் இதற்கு முன்பு வந்ததில்லை. மூன்று கால கட்டங்களில் கதை நகர்கிறது. அதற்கான பின்னணி, உருவாக்கம் ஆகியவை சிறப்பு.
படத்தில் நடிப்பால் முதலில் ஆச்சரியப்பட வைத்தவர் யூசுப் பாய் ஆக நடித்த கஸ்தூரிராஜா. அந்த முஸ்லிம் குடும்பத்து அப்பாவாக அப்படியே மாறியிருக்கிறார். கட்டுத்தறியை அகற்ற வேண்டும் என சொல்லும் போது அது பற்றிய உணர்வைப் பேசி உருக வைக்கிறார்.
அபுதாஹிர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஈஷா, முதல் படம் என்று சொல்லமுடியாதபடி நடித்திருக்கிறார். திருமண வயதைக் கடந்த ஒரு இளைஞனுக்குத் திருமணம் நடக்கத் தடைபடும் போது அவன் என்ன ஒரு வலியில் இருப்பான் என்பதை அமைதியாகக் கடத்துகிறார்.
அபுதாஹிர் விரும்பும் பெண்ணாக நிலோபர் என்ற கதாபாத்திரத்தில் வசனங்கள் அதிகம் பேசாமலேயே கவர்கிறார் மாளவிகா மனோஜ்.
அபுதாஹிருக்கு நிச்சயம் செய்யப்படும் பெண் கதீஜாவாக தனஸ்ரீ. அபுவிற்கு ஆறுதலாக இருந்து அவரைத் தேற்றும் கதாபாத்திரம்.
குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணும் சித்தி கதாபாத்திரத்தில் அனுஸ்ரேயா ராஜன். ஆரம்பத்திலிருந்தே இவர்தான் குடும்பத்தைப் பிரிக்கப் போகிறார் என்று பார்த்தால், ஒரே ஒரு காட்சியில் ‘சாச்சி’ (சித்தி) பாசம் என்றால் என்ன என்பதைக் காட்டி கண் கலங்க வைத்துவிடுகிறார்.
படத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கூட அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள்.
சாம் சிஎஸ் இசையில் முஸ்லிம் பின்னணிப் பாடல்கள் இனிமை. மகேஷ் முத்துசாமி ஊர், வீடு என அனைத்திலும் ஒரு யதார்த்தத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
படத்தின் துவக்கம் சாதாரண ஒரு படமாக ஆரம்பித்தாலும், இடைவேளைக்கு முன்பாக வேறு பாதையை நோக்கிப் பயணிக்கிறது. இடைவேளைக்குப் பின்பான காட்சிகள் உணர்வுபூர்வமான காட்சிகளாக தொடர்ந்து அமைந்து ரசிக்க வைக்கிறது. கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பாராத ஒன்று.
ஒரு தமிழ் முஸ்லிம் குடும்பத்தின் வாழ்வியலை அப்படியே பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் மீரா கதிரவன். 100 வருட தமிழ் சினிமாவில் இப்படி யாரும் சொன்னதில்லை என தாராளமாகச் சொல்லலாம்.
படம் முடித்து வரும் போது ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தியுடன் வருவீர்கள் என்பதை உறுதியாகச் சொல்கிறேன்.
Tags: habeebi, meera kathiravan, kasthuriraja
