சன்னிதானம் P0 - விமர்சனம்

06 Jun 2026

படத்தின் தலைப்பே இது ஒரு ஐயப்பன் மகிமையைச் சொல்லும் படம் என புரிந்து கொள்ளலாம். ஆனால், படத்தின் ஆரம்பத்திலும், முடிவிலும் மட்டும் கொஞ்சம் பக்திமயமாகச் சொல்லிவிட்டு மற்றபடி சென்டிமென்ட் படமாகத்தான் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அமுதசாரதி.

வாய் பேச முடியாத தனது மகன் பேச வேண்டும் என்பதற்காக சபரிமலைக்கு மாலை போட்டு மகனுடன் செல்கிறார் சித்தாரா. ஆனால், மகனைத் தொலைத்துவிடுகிறார். அவரும் செய்யாத திருட்டுக் குற்றம் ஒன்றிற்காக மூன்று வருடங்கள் சிறைக்குச் செல்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு ஏட்டு வீட்டில் வேலைக்காரியாக இருக்கிறார் சித்தாரா. அவரது மகனைத் தேடிக் கண்டுபிடிப்பதாக ஏட்டுவின் மகள் வர்ஷா உறுதியளிக்கிறார்.

சித்தாராவின் மகனான சிறு வயதில் காணாமல் போன சிறுவன், வளர்ந்து அந்த ஊரிலேயே சிறப்பான சமையல் செய்பவராக இருக்கிறார் யோகிபாபு. அவரைத் தத்தெடுத்து வளர்த்தவர் முஸ்லிமான மூணார் ரமேஷ். ஒரு விதத்தில் யோகிபாபுவின் தம்பியாக இருக்கும் தனது காதலன் ரூபேஷ் உடன் சித்தாரா மகனைத் தேட ஆரம்பிக்கிறார் வர்ஷா.  தான் தேடி வந்தவர் அருகிலேயே இருந்தும் அது தெரியாமல் வர்ஷாவின் தேடுதல் நடக்கிறது. கடைசியில் அவர் சித்தாராவின் மகனைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சபரிமலை அருகில் உள்ள புலிமேடு என்ற ஊர்தான் படத்தின் கதைக்களம். ஐயப்பன் என்ற பெயரில் சமையல் செய்பவராக யோகிபாபு நடித்திருக்கிறார். அவருடைய வழக்கமான காமெடி ஒரு சில இடங்களில் மட்டுமே வந்து போகிறது. மற்றபடி ஒரு பாசமான அண்ணனாக நடித்திருக்கிறார். வளர்ப்பு மகனாக அப்பா மீது பாசம் காட்டுவது, தம்பி மீது பாசம் காட்டுவது, என சென்டிமென்ட் நடிப்புதான் அதிகமாக உள்ளது.

அம்மா கதாபாத்திரத்தில் வாய் பேச முடியாதவராக சித்தாரா. மகனை எப்படியாவது பேச வைக்க வேண்டும் என முயற்சிக்கிறார். மகன் காணாமல் போன பிறகும், செய்யாத குற்றத்திற்குக் கைதான போதும் தவிக்கிறார். ஆரம்பக் காட்சிகளில் அம்மா கதாபாத்திரத்தில் சென்டிமென்ட்டில் கலங்க வைக்கிறார்.

சித்தாரா மகனைத் தேடிக் கண்டுபிடிக்க முயல்பவராக வர்ஷா. அவரது காதலனாக ரூபேஷ் நடித்திருக்கிறார்கள். யோகிபாபுவின் வளர்ப்பு அப்பாவாக மூணார் ரமேஷ், யோகி பாபு மீது வெறுப்பைக் காட்டுபவராக மூணார் ரமேஷின் மகனாக பிரமோஷத் ஷெட்டி நடித்திருக்கிறார்கள்.

கேரள மாநிலத்திலேயே நடக்கும் கதை என்றாலும அதன் அழகைக் காட்டாமல் கடை, வீடு என்று மட்டுமே காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்கள். எஜிஆர் இசையில் ஐயப்பன் பற்றிய பாடல் ரசிக்க வைக்கிறது.

80களில் நிறைய படங்களில் வந்த காணாமல் போன மகன், தேடும் அப்பா, அம்மா கதை போல இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். யோகிபாபு கதாநாயகன் என்பதால் படத்தை காமெடியாக நகர்த்த முயற்சி செய்திருக்கலாம்.

Tags: sannidhanam po, yogi babu

Share via: