பரிமளா அண்ட் கோ - விமர்சனம்

05 Jun 2026

குடும்பப் பாங்கான சென்டிமென்ட் படங்களை இயக்கி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர் இயக்குனர் பாண்டிராஜ். இந்தப் படத்தை குடும்பப் பின்னணியில் ஒரு க்ரைம் கதையாகக் கொடுத்திருக்கிறார். நகைச்சுவையாகச் சொல்லலாமா அல்லது சீரியஸாக சொல்லலாமா என்ற குழப்பத்துடனேயே திரைக்கதையை அமைத்து படத்தை நகர்த்தி இருக்கிறார். ஏதாவது ஒரே விதத்தில் மட்டும் திரைக்கதையை நகர்த்தியிருந்தால் அது இன்னும் ரசிக்க வைத்திருக்கலாம். மேலும், சில பல கிளைக் கதைகள் வேறு இருப்பதால் அது படத்தின் சுவாரசியத்தைக் குறைத்துவிடுகிறது.

படத்தில் ஜெயராம் பெயர்தான் பரிமளா. அவரது பாட்டியின் நினைவாக அவருக்கு அந்தப் பெயரை வைத்திருக்கிறார். அவரது மனைவி ஊர்வசியின் கதாபாத்திரப் பெயர் சுதந்திரம். இவர்களுக்கு கல்லூரிக்குச் செல்லும் இரண்டு பெண்கள். இளைய பெண் அனந்திகாவிடம் அந்த ஏரியாவின் ரவுடியான சாண்டி அடிக்கடி காதல் தொல்லை கொடுக்கிறார். அந்தத் தொல்லை தாங்காமல் அவரைக் கொலை செய்யலாம் என பரிமளா குடும்பத்தினர் சேர்த்து முடிவெடுக்கிறார்கள். ஒரு தீபாவளிக்கு முந்தைய நாளில் சாண்டி கொல்லப்படுகிறார். யார் அந்தக் கொலை செய்தது என்பது தெரியவில்லை. பரிமளா குடும்பத்திற்குள்ளேயே ஒருவர் மீது மற்றொருவருக்கு சந்தேகம் இருக்கிறது. மற்றவர்களுக்குத் தெரியாமல் அவர்களே இந்த கொலைத் திட்டத்தைத் தீட்டியிருப்பார்களோ என்ற சந்தேகம். இந்தக் கொலை வழக்கை இன்ஸ்பெக்டர் மிஷ்கின் விசாரிக்க ஆரம்பிக்கிறார். கொலையாளி(களை) அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு ஜெயராம், ஊர்வசி மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள் என படம் வெளிவருவதற்கு முன்பு சொன்னார்கள். ‘பஞ்சதந்திரம்’ படத்தில் இருவரது காம்பினேஷன் நகைச்சுவையில் கலக்கி இருப்பார்கள். அப்படியெல்லாம் ஒரு எதிர்பார்ப்புடன் சென்றால் இந்தப் படத்தில் ஏமாற்றமே. ஊர்வசி மட்டும் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். ஜெயராம் கொஞ்சம் கோபக்கார அப்பாவாகவே கடந்து போகிறார். அவரை விடவும் படத்தில் மிஷ்கினுக்குத்தான் நிறைய காட்சிகள் இருக்கிறது என்று கூட சொல்லலாம். இவர்கள் மூவரது நடிப்பும் டிராமாத்தனமாகவே தெரிகிறது. அதிலும் மிஷ்கின் ஒவ்வொரு காட்சியிலும் அப்படித்தான் நடித்திருக்கிறார்.

மகள்களாக சஞ்சனா, அனந்திகா இயல்பாக நடித்துள்ளார்கள். அனந்திகாவின் பேச்சில் மலையாளத் தமிழ்தான் வருகிறது. வீட்டு ஓனராக யோகி பாபு, சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். ஏரியா ரவுடியாக கொஞ்ச நேரமே வந்து கதாபாத்திரத்திற்கேற்றபடி எரிச்சலூட்டுகிறார் சாண்டி. சஞ்சனாவின் காதலனாக சந்தோஷ் சோபன், சாண்டியின் காதலியாக பூர்ணிமா ரவி, சப் இன்ஸ்பெக்டராக ஜிகேஎம் தமிழ்க்குமரன் நடித்துள்ளார்கள்.

படத்திற்கு பாக்ஸ்ன் இசையமைத்திருக்கிறார். பரிமளா வீட்டைப் பற்றிக் காட்டும் போது ஒவ்வொரு முறையும் டிரோன் ஷாட் வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ். படத்தில் அடிக்கடி வரும் பிளாஷ்பேக் காட்சிகளை குழப்பமில்லாமல் எடிட் செய்திருக்கிறார் எடிட்டர் பிரதீப் ராகவ்.

படத்தின் டிரைலரில் ‘பாபநாசம்’ படம் பற்றிய ரெபரன்ஸ் எல்லாம் இருக்கவே, அந்தப் படம் போல ஒரு கொலை, அதைச் சுற்றிய நிகழ்வுகள் என பரபரப்பாக நகரும் படமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது. க்ரைம் கதை என்றால் அதில் ஒரு மோதாவித் தனமான திரைக்கதை ‘பாபநாசம்’ படம் போல இருக்க வேண்டும். இந்தப் படத்தில் அவை மிகச் சாதாரணமாகவே நகர்ந்து போகிறது. இவர்கள்தான் கொலையாளியோ என நாம் சந்தேகப்பட இன்னும் சில கதாபாத்திரங்களை திணித்திருக்கிறார் இயக்குனர்.

எங்கெங்கோ சுற்றி கடைசியில் போதைப் பொருள் பற்றிய படமாகக் கொண்டு வந்து முடித்திருக்கிறார். கடைசியில் கருத்து சொல்ல வருவதுதான் முக்கியம் என நினைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.

Tags: parimala and co, jayaram, urvashi

Share via: