பெத்தி - விமர்சனம்
05 Jun 2026
இந்திய சினிமாவில் விளையாட்டு வகையில் புதிய பரிமாணம் கொடுக்கும் படங்களில் ‘பெத்தி’ தனித்து தெரிகிறது. பெயரே இல்லாத கிராமம், அடையாளம் இல்லாத மக்கள், அரசின் பதிவுகளில் கூட இடம்பெறாத பழங்குடியின வாழ்க்கை – இவற்றையெல்லாம் ஒரு இளைஞனின் விளையாட்டுப் போராட்டமாக இயக்குநர் புச்சி பாபு சனா திரைக்கு கொண்டு வந்திருக்கிறார். அடையாளத்துக்காக நடக்கும் ஒரு தனி மனிதப் போராட்டத்தை, உணர்ச்சி, உழைப்பு, திருப்பங்கள் என அனைத்தையும் இணைத்து சொல்லும் இந்தப் படம், “விளையாட்டு வெறும் விளையாட்டல்ல, அது ஒரு சமூகத்தின் அடையாளமாகவும் மாறும்” என்பதை நெஞ்சைத் தொடும் வகையில் சொல்கிறது.
பெயரே இல்லாத கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், தங்களுக்கான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தேடி போராடுகிறார்கள். அவர்களில் ஒருவரான நாயகன் ராம் சரண், விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்தால் தன் மக்களுக்கு அடையாளம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பயணப்படுகிறார். எதிர்ப்பு, சதி, ஏமாற்றம், எதிர்பாராத சோதனைகள் என பல தடைகளை சந்திக்கிறார். அனைத்தையும் தகர்த்தெறிந்து வெற்றியை நெருங்கும் தருணத்தில், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவே முடியாத சூழல் உருவாகிறது. ஆனாலும் தன் முயற்சியை கைவிடாத ராம் சரண், மாற்று வழியில் சாதனை படைத்து தன் லட்சியத்தை நிறைவேற்ற முயல்கிறார். அந்த முயற்சி என்ன? அதில் அவர் வெற்றி பெற்றாரா? தன் ஊருக்கும் மக்களுக்கும் அடையாளமும் அங்கீகாரமும் கிடைத்ததா? என்பதையே ஒரு விளையாட்டு வீரனின் உண்மையான போராட்ட வாழ்க்கையாக ‘பெத்தி’ சொல்கிறது.
விளையாட்டு வீரருக்கான உடற்பயிற்சி, ஆற்றல், உழைப்பு என அனைத்தையும் திரையில் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் நாயகன் ராம் சரண். தன் சமூகத்தின் அடையாளத்துக்காக பல தடைகளைத் தாண்டும் அவரது பயணத்தை உணர்ச்சிப் பூர்வமான நடிப்பால் பார்வையாளர்களுக்கு நேரடியாகக் கடத்துகிறார். துடிப்பான உடல்மொழி மற்றும் தீவிரமான பார்வையால் திரையை முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறார்.
நாயகியாக ஜான்வி கபூர் வழக்கமான கமர்ஷியல் ஹீரோயின் பிம்பத்துடன் வருகிறார். கதையோடு அவரது பங்களிப்பு அதிகம் இல்லை என்றாலும், தேவையான இடங்களில் தன் பங்கை நேர்த்தியாகச் செய்திருக்கிறார். குஸ்தி பயிற்றுவிப்பாளராக சிவ ராஜ்குமார் கம்பீரமான பேச்சு, செயல்பாடு மற்றும் உடல்மொழியால் ஒரு உண்மையான வாத்தியாரின் உருவத்தை அச்சு அசலாக கொண்டு வந்திருக்கிறார். ஜகபதி பாபு, பொமன் இராணி உள்ளிட்ட அனுபவசாலிகளின் நடிப்பு திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு படத்தின் மிகப் பெரிய பலம். கிரிக்கெட், குஸ்தி, ஓட்டப்பந்தயம் என ஒவ்வொரு விளையாட்டுக் காட்சிகளையும் பிரமாண்டமாகவும், அதே சமயம் விறுவிறுப்பாகவும் பதிவு செய்திருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மானின் இசை படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு பாடலும் தனித்தனி ரகங்களில் மனதில் முணுமுணுக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. பின்னணி இசை காட்சிகளுக்கு உணர்ச்சியையும் பதற்றத்தையும் சரியான அளவில் ஊட்டியிருக்கிறது.
நவீன் நூலியின் படத்தொகுப்பும், அவினாஷ் கொல்லாவின் தயாரிப்பு வடிவமைப்பும் படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கின்றன.
வல்லரசு நாடாக உருமாறிக் கொண்டிருக்கும் இந்தியாவில், இன்னும் பெயரில்லாத கிராமங்கள் இருப்பதையும், அங்கு வாழும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட கிடைக்காத நிலையையும் துணிச்சலுடன் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் புச்சி பாபு சனா. விளையாட்டை மட்டும் மையப்படுத்தாமல், எந்தத் துறையாக இருந்தாலும் தன் அடையாளத்தை தேடும் ஒரு இளைஞனின் உண்மையான போராட்டத்தை சொல்லி, மற்ற விளையாட்டுப் படங்களிலிருந்து ‘பெத்தி’யை வித்தியாசப்படுத்தியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘பெத்தி’ – உணர்ச்சி, உழைப்பு, சமூக அக்கறை நிறைந்த ஒரு சக்திவாய்ந்த திரைப்படம். விளையாட்டு ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அடையாளத்துக்காக போராடும் ஒவ்வொரு மனிதனின் இதயத்தையும் தொடும் படைப்பு!
Tags: peddi, ram charan
