சாருகேசி - விமர்சனம்

13 Jun 2026

ஒய்.ஜி.மகேந்திரா நடித்துள்ள ‘சாருகேசி’, வெற்றியின் உச்சத்தை அடைந்த ஒரு கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கையில் மறைந்திருக்கும் வலியை மையப்படுத்திய ஒரு உணர்வுபூர்வமான கதையாக அமைந்துள்ளது. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, புகழ், பணம், குடும்பம் என்ற அனைத்தையும் கடந்து ஒரு மனிதன் எப்படி தன் வலிகளை எதிர்கொள்கிறான் என்பதை, வாழ்க்கை தத்துவத்துடன் இணைத்துச் சொல்ல முயன்றிருக்கிறார்.

புகழ் பெற்ற கர்நாடக சங்கீதக் கலைஞரான சாருகேசி, இசையையும் தன் மனைவி பத்மாவையும் தன் இரு கண்களாகக் கருதி வாழ்கிறார். இசை உலகில் பல சாதனைகளைப் படைத்து புகழின் உச்சத்தை அடைந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை வலியால் நிறைந்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் அவரது ஒரே மகன் ராஜ் ஐயப்பன். தந்தையின் அடையாளத்தை ஏற்க மறுத்து, தனது சொந்த அடையாளத்துடன் வாழ விரும்பும் மகன், தந்தையை வெறுப்பதோடு, பெற்றோருக்குத் தெரியாமல் தன் காதலி ரம்யா பாண்டியனை திருமணம் செய்துகொள்கிறான்.

தங்களுக்குத் தெரியாமல் நடந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளும் சாருகேசி – பத்மா தம்பதியினருக்கு, ரம்யா பாண்டியன் ஒரு அதிர்ச்சிகரமான ரகசியத்தை வெளிப்படுத்தி மிரட்டுகிறாள். அதோடு, அவர்களைப் பழிவாங்கும் தன் நோக்கத்தையும் தெளிவாகத் தெரிவிக்கிறாள். ஏற்கனவே மகனால் வேதனைப்படும் சாருகேசி, திடீரென வந்த இந்த மருமகளின் பழிவாங்கும் செயலால் எப்படி பாதிக்கப்படுகிறார்? அந்த ரகசியம் என்ன? என்பதை, ஒரு புகழ்பெற்ற மனிதனின் வலிமிகுந்த வாழ்க்கையாகவும், “அனைத்தும் கடந்து போகும்” என்ற வாழ்க்கைத் தத்துவமாகவும் சொல்வதே ‘சாருகேசி’.

நாயகனாக ஒய்.ஜி.மகேந்திரா, சாருகேசி என்ற கதாபாத்திரத்திற்கு முழு நியாயம் சேர்க்கும் விதத்தில் நடித்திருக்கிறார். வெற்றியின் உச்சத்தில் இருக்கும் சங்கீத சாம்ராட் என்ற அடையாளமும், மகனால் அவமதிக்கப்படும் சாதாரண தந்தை என்ற இரு பரிமாணங்களையும் தனது நடிப்பில் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார். சில இடங்களில் அவரது நடிப்பு சற்று அதிகமாகத் தெரிந்தாலும், உடல் மொழியின் மூலம் அதை சமாளித்து சரி செய்திருக்கிறார்.

சாருகேசியின் மனைவி பாக்கியம் வேடத்தில் சுஹாசினி, தனது வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார். சில காட்சிகளில் செயற்கைத்தனம் தென்பட்டாலும், அவரது திரை இருப்பும் முதிர்ச்சியான நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

சாருகேசியின் மகனாக ராஜ் ஐயப்பனும், மருமகளாக ரம்யா பாண்டியனும் தங்கள் வயதுக்கு ஏற்ற துள்ளலுடன் நடித்திருக்கிறார்கள். இருவரும் சாருகேசியை எதிரியாகக் கருதி செய்யும் செயல்கள் பார்வையாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகின்றன. சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், தீனா ரித்விக், ப்ரீதிகா உள்ளிட்ட மற்ற நடிகர்கள் அனைவரும் திரைக்கதைக்கு துணை நிற்கும் விதத்தில் தங்கள் பங்கைச் சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சஞ்சய்.பி.எல் கேமராவை ஒரே இடத்தில் நீண்ட நேரம் வைத்திருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். காட்சிகள் பெரும்பாலும் ஒரே கோணத்தில் மட்டுமே பயணிப்பதால், ஒளிப்பதிவு சற்று ஒரே சீராகவும், சலிப்பூட்டுவதாகவும் இருக்கிறது. வசனங்கள் அதிகம் இருந்ததால், ஒளிப்பதிவாளருக்கு பணிச்சுமை குறைவாக இருந்திருக்கலாம் என்பது திரையில் தெளிவாகத் தெரிகிறது.

கானா பாடல்களுக்கு பெயர் பெற்ற தேவா, கர்நாடக சங்கீத இசையில் தனது திறமையை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். மெலோடி பாடல்கள் திரும்பத் திரும்ப கேட்கும் அளவுக்கு இனிமையாக இருந்தாலும், சில இசைகளில் அவரது பழைய பாடல்களின் நினைவுகள் தட்டி எழுப்பப்படுகின்றன. பின்னணி இசை சராசரி அளவிலேயே இருக்கிறது.

படத்தொகுப்பாளர் ரிச்சர்ட், சாருகேசி என்ற மனிதனின் வாழ்க்கையை ஒரு புத்தகத்தைப் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் விதத்தில் காட்சிகளைத் தொகுத்திருக்கிறார்.

பா.விஜயின் பாடல்களும் வசனங்களும் படத்தின் வலிமையான தூண்களாக நின்றிருக்கின்றன. இருப்பினும், படத்தில் இடம்பெறும் பல தத்துவங்கள், நம்பிக்கை தரும் சிறு கதைகள் ஆகியவை சற்று பழமையாகவும், மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டதாகவும் தெரிவதால், படத்தின் தாக்கம் சற்று குறைந்திருக்கிறது.

சாருகேசி என்ற இசைக்கலைஞரின் நேர்மையான வாழ்க்கையை, திரைக்கதை மூலம் நேர்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் கையாண்டிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. மக்களுக்கு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் அளிக்கும் ஒரு படைப்பாக இந்தக் கதையை அவர் உருவாக்கியிருக்கிறார்.

மேடை நாடகம் திரைப்படமாக மாறும்போது, திரையில் பல மாயாஜாலங்களைச் செய்ய முடியும் என்றாலும், அதைத் தவிர்த்துவிட்டு சாருகேசி என்ற மனிதனின் வலி, சோதனைகள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் அவரது போராட்டத்தை மட்டும் மையப்படுத்தி, பார்வையாளர்களின் மனதில் பதிய வைத்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.

Tags: charukesi, suresh krishna

Share via: