டபுள் ஆக்குபன்சி - விமர்சனம்
13 Jun 2026
இயக்குநர் அஸ்வின் கந்தசுவாமி எழுதி இயக்கிய ‘டபுள் ஆக்குபன்ஸி’ படம், ஒரு வித்தியாசமான கற்பனைக் கதையை அறிவியல் தொடர்புடன் இணைத்து, இளைஞர்களை கவரும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பகல்-இரவு என இரு வடிவங்களில் வாழும் ஒரு அதிசயப் பிறவியின் காதல் மற்றும் போராட்டத்தை மையப்படுத்திய இந்தப் படம், பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தைத் தர முயன்றிருக்கிறது.
போஸ் வெங்கட் – வினோதினி தம்பதிக்கு பல வருடங்கள் கழித்து ஒரு குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த சில நிமிடங்களில் மூச்சு நின்றுவிட, போஸ் வெங்கட் கடவுளிடம் கதறுகிறார். அப்போது வானில் இருந்து வந்த ஒரு வெளிச்சம் குழந்தையின் உயிரை மீட்டெடுப்பது மட்டுமல்லாமல், அதன் பாலினத்தையே மாற்றி விடுகிறது. அதுமட்டுமின்றி, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண்ணாகவும், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஆணாகவும் மாறும் அதிசயமும் நிகழ்கிறது.
இந்த அதிசயக் குழந்தைக(ளை) அழைத்துக்கொண்டு வேறு ஊருக்குச் செல்லும் போஸ் வெங்கட் – வினோதினி தம்பதி விபத்தில் இறந்துவிட, அந்த இரு வடிவங்களும் சென்னைக்கு வந்துவிடுகின்றன. ஒருவரை ஒருவர் பார்க்கவோ, ஒருவரது செயல்களை மற்றவர் நினைவில் வைத்திருக்கவோ முடியாத இந்த விசித்திரமான வாழ்க்கையில் காதல் மலர்கிறது. பகலில் ரேஷ்மா வெங்கடேஷாக இருப்பவளை வினோத் கிஷன் காதலிக்க, இரவில் சந்தோஷாக மாறுபவரை சம்யுக்தா விஸ்வநாதன் காதலிக்கிறார்.
இவர்களது அதிசய வாழ்க்கை காதலில் பல சிக்கல்களை உருவாக்கும் அதே வேளையில், ஒரு மரபணு ஆராய்ச்சி நிறுவனம் இவர்களை வியாபாரமாக்கி பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறது. இந்த சிக்கல்களிலிருந்து அவர்கள் தப்பி, காதலில் வெற்றி பெறுகிறார்களா? அவர்களது இந்த அதிசய வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா? என்பதை வித்தியாசமான கதைக்கருவாகவும், இளைஞர்களை மகிழ்விக்கும் விதமாகவும் சொல்வதே ‘டபுள் ஆக்குபன்ஸி’.
அறிமுக நடிகர் சந்தோஷ் நாயகனாக அனைத்து துறைகளிலும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். ஆக்ஷன், நடனம், காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை, வசன உச்சரிப்பு என எந்தப் பகுதியிலும் பதற்றமின்றி விளையாடியிருக்கும் அவர், முழுமையான ஹீரோ மெட்டீரியலாக தன்னை நிலைநாட்டியிருக்கிறார்.
சந்தோஷின் காதலியாக சம்யுக்தா விஸ்வநாதன் நவீன ஆடைகளில் அழகாகத் தோன்றுவதோடு, காதல் மற்றும் பாடல் காட்சிகளில் கவர்ச்சியாகவும் இயல்பாகவும் நடித்திருக்கிறார்.
இரவு நேரத்தில் மட்டும் வெளியே வர முடியாத ரேஷ்மா வெங்கடேஷ், அழுத்தமான கதாபாத்திரத்தில் உணர்வுப்பூர்வமாக நடித்து கவனத்தை ஈர்க்கிறார். தன் வாழ்க்கையின் கட்டுப்பாடுகளையும், சாதாரண பெண்ணாக வாழ வேண்டும் என்ற ஏக்கத்தையும் தன் கண்களால் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ரேஷ்மாவின் காதலனாக வினோத் கிஷன், தன் கண்களை கண்ணாடியால் மறைத்துக்கொண்டு காதல் மற்றும் நகைச்சுவை இரண்டையும் சமநேரத்தில் கொடுத்து ரசிக்க வைக்கிறார்.
விடிவி கணேஷ் இயல்பான நகைச்சுவையுடன் இருக்கிறார். பகவதி பெருமாள், விச்சு விஸ்வநாத், போஸ் வெங்கட், வினோதினி உள்ளிட்ட மற்ற நடிகர்கள் தங்கள் அனுபவத்துடன் திரைக்கதைக்கு துணை நிற்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சாந்தகுமார் சக்கரவர்த்தி படம் முழுவதையும் வண்ணமயமாகவும் பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் துள்ளல் நிறைந்தவையாக இருக்கின்றன. பின்னணி இசை சராசரி அளவிலேயே இருக்கிறது.
படத்தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனி கதையின் அடிப்படைகளையும் லாஜிக்குகளையும் பார்வையாளர்களுக்கு தெளிவாகப் புரிய வைத்திருப்பதோடு, எந்தவித குழப்பமும் இல்லாமல் கதையை சீராக நகர்த்திச் சென்றிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் அஸ்வின் கந்தசுவாமி, “ஒரு இதயம், இரண்டு உருவம்” என்ற வித்தியாசமான கதைக் கருவை சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் வழங்கியிருக்கிறார். ஃபேண்டஸி வகையைச் சேர்ந்தாலும், அதை அறிவியலோடு இணைத்து எழுதப்பட்ட காட்சிகள் மற்றும் லாஜிக்குகள் முதல் பாதியை மிகவும் கவர்ச்சிகரமாக்கியிருக்கின்றன.
இருப்பினும், முதல் பாதியில் இருந்த துள்ளலும் நகைச்சுவையும் இரண்டாம் பாதியில் சற்று குறைந்துவிடுகிறது. ஆனால், ஒருவரை ஒருவர் பார்க்கவோ உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவோ முடியாத இந்த வித்தியாசமான இரட்டையர்களின் உணர்ச்சிகள் மூலம் அந்த பலவீனத்தை இயக்குநர் அழகாக ஈடுசெய்திருக்கிறார்.
நம்புவதற்கு கடினமான ஒரு கற்பனையை, சினிமா என்ற ஊடகத்தின் மூலம் உயிர்ப்புடன் சொல்லியிருக்கும் ‘டபுள் ஆக்குபன்ஸி’, புதுமையான கதைகளை விரும்புபவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நிச்சயம் மகிழ்ச்சியைத் தரும் படமாக அமைந்திருக்கிறது.
Tags: double occupancy
