தயாரிப்பு - ஜாகுவார் ஸ்டுடியோஸ்
இயக்கம் - பார்த்திபன்
இசை - அருள்தேவ்
நடிப்பு - ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி

பணத்தாசை பிடித்த ஒரு மனித மிருகம் எப்படி மனிதர்களை வேட்டையாடிக் கொல்கிறது, அந்த மனித மிருகத்தை நிஜ மிருகம் எப்படி வீழ்த்துகிறது என்பதுதான் இப்படத்தின் கதை.

கணவனை இழந்து தனிமையில் குழந்தைகளுடன் வாழும் பெண்களாகத் தேடிப் போய் அவர்களைத் தன் வலையில் வீழ்த்துபவர் ஸ்ரீகாந்த். அப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு, தன்னைப் பற்றிய சுயரூபம் தெரிந்தபின் அவர்களை குடும்பத்தோடு கொன்று தப்பிக்கிறார். இப்படி இந்தியா முழுவதும் சில பல கொலைகளைச் செய்தவர், ஊட்டிக்குச் செல்கிறார். அங்கு டீ எஸ்டேட் முதலாளி ராய் லட்சுமியைத் தன் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொள்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் ஸ்ரீகாந்த் யார் என்பது தெரிய வர, அவரிடமிருந்து தப்பிக்க நினைக்கிறார் ராய் லட்சுமி. ஆனால், அவரை தன் வலைக்குள் வசமாக சிக்க வைக்கிறார் ஸ்ரீகாந்த். அடுத்து என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.

பல படங்களில் சாக்லேட் பாயாக வந்த ஸ்ரீகாந்த் இந்தப் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தன்னால் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் கொடுமைக்காரனாகவும் நடிக்க முடியும் என நிரூபித்திருக்கிறார். முன்பெல்லாம் அவரது நடிப்பில் அவ்வளவு உணர்வுகள் வெளிப்படாது. இந்தப் படத்தில் நடிப்பில் நிறையவே முன்னேற்றம் கண்டுள்ளார்.

டீ எஸ்டேட் முதலாளியாக ராய் லட்சுமி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனி நாயகியாக நடித்துள்ளார். முகத்தில் கொஞ்சம் முதிர்ச்சி தெரிகிறது. வழக்கமாக கிளாமர் காட்டி நடிப்பவர் இந்தப் படத்தில் அதை கைவிட்டிருக்கிறார். ராய் லட்சுமியின் தங்கைகளாக நடித்திருப்பவர்கள் அக்காவுக்குப் பதிலாக போட்டி போட்டு கிளாமர் காட்டி நடித்து யார் இவர்கள் எனக் கேட்க வைத்திருக்கிறார்கள்.

படத்தில் கிராபிக்ஸ் மூலம் வடிவமைக்கப்பட்ட புலிக்குத்தான் அதிக முக்கியத்துவம். படத்திற்கான விளம்பரங்களில் கூட அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். ஆரம்பத்திலிருந்து அடிக்கடி வந்து பயமுறுத்தும் புலிக்கு கிளைமாக்சில் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை நீ.......ட்டியிருக்கக் கூடாது.

ஏற்கெனவே பல வருடங்களாகப் பல படங்களில் பார்த்த பிளாக்மெயில் சம்பந்தப்பட்ட படம்தான். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பைச் சேர்த்திருந்தால் ‘மிருகா’ மிரட்டியிருக்கும்.