தயாரிப்பு - எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்
இயக்கம் - செல்வராகவன்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு - எஸ்ஜே சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கசான்ட்ரா

பேய்க் கதை என்றாலே பழி வாங்கும் கதையாகத்தானே வருகிறது, ஆனால், இயக்குனர் செல்வராகவன் வித்தியாசமாகக் கதை எழுதியிருப்பார் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான். இருந்தாலும் படத்தின் நாயகன் எஸ்ஜே சூர்யா தனியொருவராக படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார்.

பணக்காரப் பெண்ணான நந்திதா ஸ்வேதாவை ஏமாற்றி காதலித்து திருமணம் செய்து கொண்டு மாமனார் கொடுத்த கம்பெனிக்கு முதலாளியாகி தன்னை பணக்கார வாழ்க்கைக்குள் நுழைத்துக் கொண்டவர் எஸ்ஜே சூர்யா. அவர்களது குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேலைக்குச் செல்கிறார் ரெஜினா. தமிழ் சினிமா வழக்கபடி அவர் மீது ஆசை கொண்டு, அவரை அடைய முயற்சித்து அதில் வெற்றியும் பெறுகிறார் சூர்யா. அந்த சம்பவத்தில் ரெஜினா இறந்து போக, அவரோ பேயாக வருகிறார். தன் கொலைக்குக் காரணமான சூர்யா, அவரது வீட்டு வேலைக்காரர்கள் நால்வரைப் பழி தீர்க்க ஆரம்பிக்கிறார். அதில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இப்படி ஒரு கதாபாத்திரம் இந்த உலகத்தில் இருக்குமா என்ற கேள்வியுடன் ராம்சே என்கிற ராமசாமி கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார் செல்வராகவன். அந்தக் கதாபாத்திரத்தில் இயக்குனர் எதிர்பார்த்ததற்கும் மேலாக தன் நடிப்பால் உயிர் கொடுத்திருக்கிறார் எஸ்ஜே சூர்யா. ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய நடிப்பு இப்போது மட்டுமல்ல இன்னும் பல வருடங்கள் கழித்தும் சிலாகித்து பேசப்படும் என்பது மட்டும் உறுதி.

சூர்யாவுக்கு ஈடு கொடுக்கும் அவரது மனைவி கதாபாத்திரத்தில் நந்திதா ஸ்வேதா. பணக்காரத் திமிரை அப்படியே காட்டியுள்ளார். கணவன் சூர்யாவை அடக்குவதிலும் ஸ்கோர் செய்கிறார்.

அப்பாவிப் பெண்ணாக வந்து, பேயாக மாறி பழி தீர்க்கும் கதாபாத்திரத்தில் ரெஜினா. ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில்தான் அவருடைய நடிப்பை ரசிக்க முடிகிறது.

படத்தின் பெரிய பிளஸ் பாயின்ட் யுவனின் பின்னணி இசை, வித்தியாசமான பாடல்கள் மற்றும் அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு.

சராசரியான பேய்ப் படம் போல இருந்தாலும் இது செல்வராகவன் உருவாக்கிய பேய்ப் படம். இப்போது வந்தே இப்படி வரவேற்பு பெறுகிறதே, நான்கு வருடங்களக்கு முன்பே வந்திருந்தால் பேய் ஓட்டம் ஓடியிருக்கும்.