மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘ஹெலன்’ படத்தை அப்படியே தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அப்பாவுக்கும், மகளுக்கும் இடையிலான பாசப் பிணைப்புதான் படத்தின் மையம், அதில் கூடவே த்ரில்லரை இணைத்து ரசிக்க வைத்துள்ள படம் இந்த ‘அன்பிற்கினியாள்’.

அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் பாசமான அப்பா, மகள். அப்பாவின் கடனை அடைக்க கீர்த்தி, கனடா சென்று நர்ஸ் வேலை பார்க்க ஆசைப்படுகிறார். ரெஸ்டாரன்ட் ஒன்றில் வேலை பார்க்கும் கீர்த்திக்கும், கிறிஸ்துவப் பையனான பிரவீனுக்கும் இருக்கும் காதல் ஒரு நாள் அப்பா அருண் பாண்டியனுக்குத் தெரிய வருகிறது. மகளிடம் கோபித்துக் கொண்டு பேசாமல் இருக்கிறார். அப்பா பேசாத காரணத்தால் ரெஸ்ட்டாரன்ட்டில் இரவு வரை வேலை செய்கிறார். உடன் வேலை செய்பவர்களுக்கு உதவப் போய் கறிகளை சேமித்து வைக்கும் மைனஸ் டிகிரி குளிர் கொண்ட ப்ரீசர் அறையில் சிக்கிக் கொள்கிறார். மகளைக் காணாத அப்பா அருண் பாண்டியன் போலீஸில் புகார் செய்கிறார். காதலன் பிரவீன் மீதும் சந்தேகம் வருகிறது. ஊருக்குச் சென்று கொண்டிருக்கும் பிரவீன் சம்பவம் கேள்விப்பட்டு திரும்பி வருகிறார். அனைவரும் கீர்த்தியைத் தேட ஆரம்பிக்கிறார்கள். அவர் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

80களில் ‘ஊமை விழிகள், இணைந்த கைகள்’ என சில பல படங்களில் ஆக்ஷனில் அசத்திய அருண் பாண்டியன் இந்தப் படத்தில் அன்பான அப்பாவாக யதாரத்தமாய் நடித்திருக்கிறார். இதற்கு முன்பு ‘தும்பா’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான கீர்த்தி பாண்டியனுக்கு இது இரண்டாவது படம். இரண்டாவது படத்திலேயே அனுபவ நடிகையைப் போல பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தி தன் திறமையை நிரூபித்துள்ளார்.

மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள புதுமுகங்களான பிரவீன், ரவீந்திரா, பூபதிராஜா, அடிநாட் சசி ஆகியோரும் கவனம் ஈர்க்கிறார்கள். 

ஜாவித் ரியாஸ் பின்னணி இசை த்ரில்லர் படத்திற்கு எப்படி பரபரபப்பை ஏற்படுத்த வேண்டுமோ அதைச் சரியாகக் கொடுத்திருக்கிறது. ப்ரீசர் அறைக்குள் விதவிதமான கேமரா கோணங்களில் ஒரே இடத்தில் கதை நகரும் உணர்வையே மறக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி.

‘ஹெலன்’ படத்தின் பர்பெக்ட் ரீமேக் இந்த ‘அன்பிற்கினியாள்’, ரசிகர்களின் அன்பை நிச்சயம் பெறுவாள்.