சங்கத்தலைவன் - விமர்சனம்
27 Feb 2021
தயாரிப்பு - உதய் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - மணிமாறன்
இசை - ராபர்ட் சற்குணம்
நடிப்பு - சமுத்திரக்கனி, கருணாஸ், ரம்யா, சுனுலட்சுமி
மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் திரைப்படங்கள் இந்தக் காலத்தில் அபூர்வமாகிவிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொழிலாளர்களின் பிரச்சினையை மையப்படுத்தி இந்தப் படம் வெளிவந்து உள்ளதை உள்ளபடி சொல்லி மனதில் பதிய வைத்துள்ளது.
இயக்குனர் மணிமாறன், கருணாஸ், சமுத்திரக்கனி, சுனுலட்சுமி, ரம்யா என ஒவ்வொருவருமே அவர்களது பணியை நிறைவாகச் செய்து நம் மனதில் இடம் பிடிக்கிறார்கள். அவர்களது திரைப் பயணத்தில் இந்தப் படம் முக்கியமானதொரு தடத்தைப் பதிக்கும் படமாகவும் அமையும்.
விசைத்தறி ஓட்டுபவராக கருணாஸ். தனது முதலாளி மாரிமுத்துவுக்கு அவ்வளவு விசுவாசமாக இருக்கிறார். தன்னுடன் வேலை செய்யும் பெண்ணொருத்தி மிஷினில் சிக்கை கையை இழந்த பிறகுதான் முதலாளியின் சுயரூபம் என்னவென்பது கருணாஸுக்குப் புரிகிறது. விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருக்கும் சமுத்திரக்கனியிடம் நடந்ததைச் சொல்லி கையிழந்து பெண்ணுக்கு நிவாரணத் தொகை வாங்கித் தருகிறார் கருணாஸ். ஒரு கட்டத்தில் கருணாஸ் செய்த வேலை தெரிய வர அவரை வேலையை விட்டு நிறுத்துகிறார் மாரிமுத்து. இதனிடையே, ஊதிய உயர்வு, போனஸ் கேட்டு தொழிலாளர்கள் நடத்தும் போராட்டத்தை முன்னின்று நடத்தும் வாய்ப்பு கருணாஸுக்குக் கிடைக்கிறது. இதனால் கருணாஸ் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் மாரிமுத்து. இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
கருணாஸ், இதற்கு முன்பு கதாநாயகனாக சில படங்களில் நடித்திருக்கிறார். அவை பெரும்பாலும் காமெடி படங்களாகவே இருக்கும். ஆனால், கருத்துள்ள இந்தப் படத்தில் நடித்து தனக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார் கருணாஸ். அவருடைய நடிப்பும் மிக இயல்பாக அமைந்து பாராட்ட வைத்துள்ளது.
சங்கத்தலைவனாக சமுத்திரக்கனி. தொழிலாளர்களுக்கு துணை நிற்கும் உண்மையான தலைவனாக மனதில் இடம் பிடிக்கிறார். சங்கத்தின் பக்கமே தலை வைத்தும் படுக்காத கருணாஸை மாற்றி அவரை ஒரு கட்டத்தில் சங்கத்தலைவனாகவும் செயல்பட வைக்கிறார். சமுத்திரக்கனி போல சங்கத்தலைவர்கள் கிடைத்தால் எத்தனை தொழிலாளிகளின் வாழ்வும் நிறைவாக இருக்கம் என்ற ஏக்கம் படம் பார்க்கம் போது வருகிறது.
தங்கள் குடும்பத்திற்கும் வர வேண்டிய விசைத்தறி கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்ய வேண்டிய நிலை சுனுலட்சுமிக்கு. ஒரு சராசரி பெண் தொழிலாளி எப்படி இருப்பாரோ அதை அப்படியே கண்முன் நிறுத்தியிருக்கிறார்.
டிவி நிகழ்ச்சிகளில் ஸ்டைலாகப் பார்த்த ரம்யாவா இது என ஆச்சரியப்பட வைக்கிறார் ரம்யா. சமுத்திரக்கனியின் மனைவியாக கிராமத்துப் பெண்ணாக அட போட வைக்கிறார்.
ராபர்ட் சற்குணம் இசை, ஸ்ரீனிவாஸ் தேவாம்சம் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாய் அமைந்துள்ளது.
இம்மாதிரியான படங்களுக்கு மக்கள் அதிகமான வரவேற்பு கொடுத்தால்தான் தமிழ் சினிமா வளரும். பல விருதுகளில் கலந்து கொண்டு போட்டியிடக் கூடிய தகுதி இந்த சங்கத்தலைவனுக்கு உண்டு.
சங்கத்தலைவன் - தியாகத் தலைவன்
Tags: samuthirakani, sangathalaivan, karunas,