மிராய் - விமர்சனம்
14 Sep 2025
கலிங்கத்து போருக்குப் பின்னர், பேரரசர் அசோகன் சாகாவரம் பெறுவதற்கான ரகசியத்தை ஒன்பது புத்தகங்களில் மறைத்து, அவை தீய சக்திகளின் கைகளில் சிக்காமல் இருக்க ஒன்பது வீரர்களை நியமிக்கிறார். ஆயிரமாண்டுகள் கடந்து, நவீன காலத்தில், மந்திர சக்திகள் மூலம் உலகை ஆள நினைக்கும் மனோஜ் மஞ்சு இந்த புத்தகங்களை கைப்பற்ற முயல்கிறார். இதைத் தடுக்க, மிராய் எனும் அதிசக்தி வாய்ந்த கோளின் உதவியுடன் நாயகன் தேஜா சஜ்ஜா களமிறங்குகிறார். அவர் இதை எவ்வாறு முறியடிக்கிறார் என்பதை பிரமாண்டமாக விவரிக்கிறது ‘மிராய்’.
தேஜா சஜ்ஜா, ஃபேண்டஸி கதைக்களத்திற்கு மிகப் பொருத்தமாக பொருந்தி, பார்வையாளர்களை கதையுடன் ஒன்றச் செய்கிறார். தனது அடையாளமும், மிராயின் சக்தியும் தெரியாத நிலையில் தொடங்கி, அவை தெரியவரும்போது வெளிப்படுத்தும் ஆற்றல் மிகுந்த நடிப்பு திரையரங்கில் கைதட்டல்களை அள்ளுகிறது.
வில்லனாக மனோஜ் மஞ்சு, ஒன்பது புத்தகங்கள் வழியாக சாகாவரம் பெற்று உலகை ஆள வேண்டும் என்ற தனது தீவிரமான எண்ணத்தை, “திறமையே கடவுள்” என்ற தத்துவத்துடன் அழுத்தமாக பதிவு செய்கிறார். அவரது நடிப்பு கதாபாத்திரத்திற்கு ஆழம் சேர்க்கிறது.
நாயகியாக ரித்திகா நாயக், நாயகனின் இளவயது தாயாக ஸ்ரேயா சரண், முனிவராக ஜெயராம், ஜகபதி பாபு, கெட்டப் சீனு ஆகியோர் தத்தமது பாத்திரங்களுக்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
கெள்ரா ஹரியின் இசை படத்தின் பிரமாண்டத்தை மேலும் உயர்த்துகிறது. குறிப்பாக, சண்டைக்காட்சிகளின் பின்னணி இசை புதுமையாகவும், பார்வையாளர்களை கவரும் விதத்திலும் அமைந்துள்ளது.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் கட்டம்னேனியின் கேமரா ஒரு கதாபாத்திரமாகவே பயணித்து, காட்சிகளை மாயாஜாலமாக பதிவு செய்கிறது. கலை இயக்குநர் ஸ்ரீ நாகேந்திர தங்கலாவின் பிரமாண்டமான செட் வடிவமைப்புகள் கதையை மேலும் உயிர்ப்பிக்கின்றன.
கார்த்திக் கட்டம்னேனி மற்றும் மணிபாபு கர்ணம் ஆகியோரின் கதை, ராமரின் வில் மற்றும் ஆன்மீகத்தை மையப்படுத்தி, ஃபேண்டஸி ஜானரை அற்புதமாக வெளிப்படுத்துகிறது. மணிபாபு கர்ணத்தின் வசனங்கள் கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.
இயக்குநர் கார்த்திக் கட்டம்னேனி, ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டாலும், அனைத்து பார்வையாளர்களையும் கவரும் வகையில் கிராபிக்ஸ் மற்றும் காட்சி அமைப்புகளை பயன்படுத்தியிருக்கிறார். மிராய் கோள், மந்திர புத்தகங்கள், மந்திர ஊர், மந்திர வித்தைகள் ஆகியவற்றை வியப்பூட்டும் வகையில் படமாக்கியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம்.
‘மிராய்’ ஒரு வியக்கவைக்கும் ஃபேண்டஸி அனுபவம். ஆன்மீகம், மந்திரம், மற்றும் பிரமாண்டத்தின் கலவையாக, இது திரையரங்கில் கண்டிப்பாக ரசிக்கப்பட வேண்டிய படைப்பு!
Tags: mirai