மருதம் - விமர்சனம்

11 Oct 2025
மருதம்: விவசாயிகளின் வலியும் வீரமும் - விமர்சனம்ராணிப்பேட்டை அருகிலுள்ள ஒரு அமைதியான கிராமத்தில், மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் சிறிய குடும்பம் நடத்தி, விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகிறார் விதார்த். ஆனால், வாங்காத கடனுக்காக அவரது நிலத்தை வங்கி ஏலம் விடுகிறது. விசாரித்தால், அவரது தந்தை பெயரில் கடன் இருப்பதாகச் சொல்கிறார்கள். இது சாத்தியமில்லை என உறுதியாக நம்பும் விதார்த், இதன் பின்னால் ஒரு பெரிய மோசடி இருப்பதை உணர்கிறார்.
இந்த மோசடியின் ஆழத்தை ஆராய்ந்து, தனது நிலத்தை மீட்கும் போராட்டத்தில் இறங்கும் விதார்த் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை, விவசாயிகளின் அன்றாட வாழ்வியலை மட்டுமின்றி, அவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றான நில மோசடியையும், அதன் பின்னணியில் உள்ள சக்திவாய்ந்த கும்பலையும் தோலுரித்துக் காட்டும் வகையில் சொல்கிறது 'மருதம்' திரைப்படம். இது வெறும் கதையல்ல, விவசாயிகளின் உண்மை வலியைத் தொட்டுச் செல்லும் ஒரு விழிப்புணர்வு காவியம்.
நாயகன் விதார்த், தனது வழக்கமான அர்ப்பணிப்புடன் கதாபாத்திரத்தை உயிர்ப்பித்திருக்கிறார். நிலத்தை இழந்த துயரம், சட்டப்போராட்டத்தின் தீவிரம் என அனைத்தையும் உணர்ச்சிகரமாக வெளிப்படுத்துகிறார். வசனங்கள் இல்லாத இடங்களில் கூட, அவரது முகபாவனைகள் மூலம் மன உணர்வுகளை அழகாகக் கடத்துகிறார். படத்தைத் தனி ஆளாகத் தாங்கியிருக்கும் விதார்த், பார்வையாளர்களின் இதயத்தைத் தொடுகிறார்.
நாயகி ரக்ஷனா, தோற்றத்தில் சற்று பொருந்தாத போதிலும், வசன உச்சரிப்பு மற்றும் உடல் மொழியால் தனது ரோலை வலுப்படுத்தியிருக்கிறார். சில காட்சிகளை இயல்பாகக் கையாண்டாலும், உணர்ச்சி ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் ஒரே தொனியில் பயணிப்பது சற்று பலவீனம். இருப்பினும், கிராமத்து பெண்ணாக ஏற்றுக்கொள்ளும்படி நடித்திருக்கிறார்.
அருள்தாஸ், சிறிய வேடத்தில் வந்தாலும், இரக்கமுள்ள மனிதராக மனதில் நிற்கிறார். அவரது நடிப்பு, படத்துக்கு உணர்ச்சி ஆழம் சேர்க்கிறது. நகைச்சுவைக்காக அறிமுகமாகும் மாறன், சில இடங்களில் சிரிப்பூட்டினாலும், இறுதியில் வரும் திருப்பம் அதிர்ச்சி அளிக்கிறது.வங்கி மேலாளராக சரவண சுப்பையா, வழக்கறிஞராக தினந்தோறும் நாகராஜ் ஆகியோர் சில காட்சிகளில் வந்தாலும், பொருத்தமான தேர்வுகள். அவர்களது நடிப்பு, கதையின் யதார்த்தத்தை உயர்த்துகிறது.
இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தனின் பாடல்கள் மண் வாசனையுடன் வீசுகின்றன. பின்னணி இசை, கிராமத்தின் இனிமையையும், கதாபாத்திரங்களின் வலியையும் சேர்த்து அழுத்தமாகக் கடத்துகிறது. ஒளிப்பதிவாளர் அருள் கே. சோமசுந்தரம், கிராமத்தின் இயற்கை அழகையும், மக்களின் உண்மை முகங்களையும் நேர்த்தியாகப் படம்பிடித்திருக்கிறார். எடிட்டர் பி. சந்துரு, எளிய கதையை வாழ்வியல் காவியமாகவும், நீதிமன்ற காட்சிகளை சுவாரஸ்யமாகவும் தொகுத்து, தொய்வில்லாமல் நகர்த்தியிருக்கிறார்.
விவசாயிகள் தங்கள் நிலத்தை இழக்கும் மோசடிகளைச் செய்திகளாகப் படித்து மறந்து போகிறோம். ஆனால், இயக்குநர் வி. கஜேந்திரன், இந்தப் பெரும் மோசடியின் பின்னணியை - அரசு அதிகாரிகள் சுயநலத்துக்காக விவசாயிகளைச் சுரண்டுவதை - தைரியமாகத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார். மோசடி கும்பலின் அட்டூழியங்களை அதிர்ச்சியளிக்கும் வகையில் விவரித்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது.
விழிப்புணர்வு கதையாக இருந்தாலும், திரைப்பட அம்சங்களுடன் - நீதிமன்ற காட்சிகளின் சஸ்பென்ஸ், சுருக்கமான திரைக்கதை - ரசிக்கும்படி உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். வயல் சார்ந்த இடங்களில் படமாக்கப்பட்ட இப்படம், விவசாயிகளின் சோகத்தை மட்டுமின்றி, அவர்களைச் சுரண்டும் மோசடியிலிருந்து எச்சரிக்கையாக இருப்பதற்கான வழிகாட்டியாகவும், பொழுதுபோக்கு திரைப்படமாகவும் அமைந்துள்ளது.
'மருதம்' - விவசாயிகள் மட்டுமல்ல, அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு விழிப்புணர்வு விருந்து. நிலத்தின் மணம் வீசும் இந்தப் படம், உங்கள் மனதைத் தொடும்!

Tags: marutham, vidharth, rakshana

Share via:

Movies Released On October 21