மாய பிம்பம் - விமர்சனம்

22 Jan 2026

மாய பிம்பம் திரைப்படம், காதல் என்ற உணர்வை புதிய பார்வையில் அலசும் ஒரு சுவாரசியமான படைப்பாக அமைந்துள்ளது. இயக்குநர் கே.ஜெ.சுரேந்தர் இயக்கத்தில் உருவான இந்தப் படம், இளம் தலைமுறையினரின் உணர்ச்சிகளையும், தவறான புரிதல்களையும் தொட்டு, பார்வையாளர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எளிய கதைக்களத்தில் தொடங்கி, எதிர்பாராத திருப்பங்களுடன் முடியும் இப்படம், தமிழ் சினிமாவில் காதல் வகைப் படங்களுக்கு புது உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. நடிகர்களின் இயல்பான நடிப்பும், தொழில்நுட்ப அம்சங்களும் இதை ஒரு பொழுதுபோக்கு அனுபவமாக மாற்றியுள்ளன.

மருத்துவக் கல்லூரி மாணவரான ஆகாஷ், பேருந்துப் பயணத்தில் தற்செயலாக சந்திக்கும் நாயகி ஜானகியிடம் ஈர்க்கப்படுகிறார். அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கையில், அது ஒரு விபத்தில் முடிவடைகிறது. இருப்பினும், அந்த விபத்தே இருவரையும் மீண்டும் இணைக்கும் வகையில் அமைந்து, நெருக்கமான உறவுக்கு வழிவகுக்கிறது. அந்த சூழலில் நிகழும் நிகழ்வுகளின் உண்மையான தோற்றத்தை காணாமல், மாயையான உருவத்தை கண்டு ஆகாஷ் செய்யும் ஒரு தவறு, அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடுகிறது என்பதே படத்தின் மையக் கதை.

சுமதி என்ற பாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஜானகி, அண்டை வீட்டுப் பெண் போன்ற எளிய தோற்றத்தில் இருந்தாலும், பார்வையாளர்களை உடனடியாக ஈர்த்துவிடுகிறார். அறிமுகத் திரைப்படத்தில் வலுவான பாத்திரத்தை சிரமமின்றி கையாண்டு பாராட்டுகளை அள்ளும் ஜானகி, நாயகனின் செயலைக் கண்டு அதிர்ச்சியுறும் அந்த ஒரு காட்சியில் தனது இதயத்தில் உள்ள காதலையும், ஏமாற்ற உணர்வையும் கண்களால் தெளிவாக வெளிப்படுத்தி, பாராட்டுகளைப் பெறுகிறார்.

நாயகனாக நடித்திருக்கும் ஆகாஷ், தனது இயற்கையான நடிப்பால் கவனத்தை ஈர்க்கிறார். உடல் ஈர்ப்பின் மீதான ஆசையால் தனது உண்மையான காதலை உணராமல் போனதை எண்ணி வருந்தும் காட்சிகளிலும், தனது காதலுக்கு தானே தடையானதை நினைத்து தவிக்கும் பகுதிகளிலும் முதிர்ந்த நடிப்பால் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.

நாயகனின் தோழர்களாக நடித்திருக்கும் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண்குமார் போன்றோர் புதியவர்களாக இருந்தாலும், எந்தவித தயக்கமும் இன்றி இயல்பாக நடித்து, திரைக்கதையின் ஓட்டத்தை வலுப்படுத்தியுள்ளனர்.

நாயகனின் பெற்றோர்கள், அண்ணன், அண்ணி போன்ற பாத்திரங்களில் நடித்தவர்கள் பெரும்பாலும் புதிய முகங்களாக இருந்தாலும், தங்கள் நடிப்பால் அந்தப் பாத்திரங்களை பார்வையாளர்களின் நினைவில் எளிதில் பதியச் செய்துள்ளனர்.

எட்வின் சகாயின் ஒளிப்பதிவு, கடலூர் மற்றும் சிதம்பரம் பேருந்து நிலையங்களை கதையின் ஒரு அங்கமாக மாற்றியுள்ளது. ஆடம்பரமில்லாத ஒளிப்பதிவு என்றாலும், பார்வையாளர்களுக்கு கதையுடன் பயணிக்கும் உணர்வை அளிக்கிறது.

நந்தாவின் இசையில் பாடல்கள், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் இனிமையாக அமைந்துள்ளன. திரைக்கதையுடன் இணைந்து செல்லும் பின்னணி இசை, படத்துக்கு மிகுந்த வலிமை சேர்க்கிறது.

காதல் கதையாக இருந்தாலும், அதை வித்தியாசமான கோணத்தில் வழங்க முயன்ற இயக்குநருக்கு உறுதுணையாக இருந்த படத்தொகுப்பாளர் வினோத் சிவகுமாரின் பணி பாராட்டத்தக்கது.

எழுதி இயக்கியிருக்கும் கே.ஜெ.சுரேந்தர், காதல் கதையை அழகு நிரம்பிய கவிதையாக மட்டுமின்றி, உணர்ச்சி அழுத்தம் கொண்டதாகவும் உருவாக்கியுள்ளார்.

காதல் என்ற ஒற்றை வார்த்தையே கதையின் அடிப்படையாக இருந்தாலும், அதை வைத்து இரண்டு மணி நேரத்துக்கும் மேல் பார்வையாளர்களை கட்டிப்போடும் இயக்குநர் கே.ஜெ.சுரேந்தரின் திரைக்கதை மற்றும் உச்சக்கட்டம், ஏற்கனவே வந்த ஒரு படத்தின் தாக்கத்தை ஞாபகப்படுத்தினாலும், அதுபோலவே பார்வையாளர்களிடம் வலுவான தாக்கத்தை உருவாக்குகிறது.

காதலுக்கு பல்வேறு எதிரிகளும், தடைகளும் வரலாம், ஆனால் முதன்முறையாக காதலே ஒரு காதலுக்கு எப்படி தடையாகிறது என்பதை திரை மொழியின் திருப்பங்களால் மிக ஈர்க்கும் வகையில் விவரித்து, வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் கே.ஜெ.சுரேந்தர்.

Tags: Maayabimbum

Share via: