ஹாட் ஸ்பாட் 2 மச் - விமர்சனம்
22 Jan 2026
தயாரிப்பாளரிடம் கதை விவரிக்கும் அறிமுக இயக்குநரின் நான்கு வேறுபட்ட கதைகள் வழியாக பார்வையாளர்களின் ஆதரவைப் பெற்ற ‘ஹாட் ஸ்பாட்’ படத்தின் தொடர்ச்சியே ‘ஹாட் ஸ்பாட் 2’. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஹாட் ஸ்பாட் 2 திரைப்படம், சமூகத்தில் நிலவும் சூடான விவாதங்களை குட்டிக் கதைகள் மூலம் விவரிக்கும் ஒரு சுவாரசியமான படைப்பாக முயற்சித்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.
இந்தக் காலக் காதல், பெண்ணியம், ரசிகர்களின் வெறித்தனம் போன்றவன்றை நடுநிலையான பார்வையில் அணுகி, பார்வையாளர்களை யோசிக்க வைக்கிறது. முதல் பாகத்தின் பாணியைத் தொடர்ந்தாலும், இதில் உள்ள கதைகள்நடிகர்களின் தேர்ந்த நடிப்பாலும், தொழில்நுட்ப அம்சங்களாலும் ரசிக்க வைக்கின்றன.
முதல் பாகத்தைப் போலவே இதிலும், அதே தயாரிப்பாளரிடம் அறிமுக இயக்குநர் கதை சொல்ல வருகிறார். அவரது நோக்கமும் முதல் பாகத்தின் இயக்குநருடையதே என்றாலும், அவர் விவாதிக்க இருக்கும் விஷயம் தனிப்பட்ட ஒருவருக்கானது அல்ல, ஒட்டுமொத்த சமூகத்துக்கானது. அது என்ன?, அதன் மூலம் இயக்குநர் மக்களுக்கு என்ன செய்தியை தெரிவிக்க முயல்கிறார்? என்பதே ‘ஹாட் ஸ்பாட் 2’ன் மையம்.
திரை நட்சத்திரங்களின் தீவிர ரசிகர்கள், பெண்ணியம் மற்றும் உடை சுதந்திரம் என்ற பெயரில் பெரியவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத இளைய தலைமுறை, காதலின் தற்போதைய போக்கை எண்ணி வருந்தும் ஆண்கள் ஆகிய மூன்று தரப்புகளையும் ஆராயும் வெவ்வேறு கதைகளில், இரு பக்கங்களிலும் உள்ள நியாயங்களை விவாதித்திருக்கும் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், இந்த மூன்று கதைகளை விளக்கும் அறிமுக இயக்குநரின் சொந்தக் கதை வழியாக உலக அளவில் விவாதப் பொருளாக உள்ள ஒரு விஷயத்தை அழுத்தமின்றி மேலோட்டமாகத் தொட்டிருக்கிறார்.
ஒரு கதைக்கருவுக்கு திரைக்கதை மற்றும் காட்சிகளை உருவாக்கி பார்வையாளர்களை திருப்திப்படுத்த போராடுவதை விட, சமூக சிக்கல்களை விவாதிக்கும் சிறு சிறு கதைகளை இணைத்து சொல்லி வெற்றி அடைந்த இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், அதையே தனது ஸ்டைலாக தொடர்ந்திருப்பது முதல் பாகத்தைப் போலவே உதவியிருந்தாலும், சில இடங்களில் சற்று தடுமாற்றங்களை எதிர்கொண்டுள்ளது. அதே நேரம், முதல் பாகத்தைப் போல் பெரிய சர்ச்சையாக இல்லாமல், ஒரு எல்லைக்குள் இருந்து வந்திருக்கும் விக்னேஷ் கார்த்திக், விவாதிக்கும் ஒவ்வொரு சிக்கலிலும், இரு தரப்புகளிலும் உள்ள நியாயங்களை சமமாகப் பேசி, நடுநிலைமையை கடைப்பிடித்திருக்கிறார்.
கதைகளின் பாத்திரங்களாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், அஷ்வின், ஆதித்யா பாஸ்கர், ரக்ஷன், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், தயாரிப்பாளர் கே.ஜெ.பாலமணிமர்பன், பவானி ஸ்ரீ, பிரிகிடா, சஞ்சனா திவாரி ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
கதைகளை விவரிக்கும் பாத்திரமாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், உட்கார்ந்த நிலையிலேயே பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அற்புதமான நடிப்பை காட்டியிருந்தாலும், அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் பில்டப் சற்று அதிகமானதே.
தற்போதைய காதலின் போக்கையும், பெண்களின் எண்ணங்களையும் நினைத்து வருந்தும் பாத்திரத்தில் நடித்திருக்கும் அஷ்வின், நடிப்பில் மேலும் முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவரது நண்பராக நடித்திருக்கும் அமர் தரும் டைமிங் உரையாடல்கள் சிரிப்பை வரவழைக்கின்றன.
வலுவான பாத்திரத்தில் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கும் பாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் கவனம் ஈர்ப்பது போல, தனது தீவிரமான செயலால் 2 கே கிட்ஸுக்கு அதிர்ச்சியான அறிவுரை அளித்து தம்பி ராமையா ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.
நான்கு கதைகள் மற்றும் அவற்றுக்கான அமைப்புகளுக்கு ஏற்ப ஒளிப்பதிவில் வேறுபாடுகளை காட்டி ஈர்த்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் ஜெகதீஷ் ரவி மற்றும் ஜோசப் பால்.
சதிஷ் ரகுநாதன் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. யு.முத்தயனின் எடிட்டிங்கும் சி.சண்முகத்தின் கலை வடிவமைப்பும் படத்துக்கு கூடுதல் வலிமை சேர்த்திருக்கின்றன. எழுதி இயக்கியிருக்கும் விக்னேஷ் கார்த்திக், சூடான விஷயங்களை ருசியாக சொல்வதோடு, அதில் உள்ள இரு தரப்புகளின் நியாயங்களை சமநிலையில் விவாதித்து, அனைத்து தரப்புகளையும் சிந்தனைக்கு தூண்டியிருக்கிறார்.
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் எண்ணம் சமூக சிக்கல்களை விவாதிப்பது மட்டுமின்றி, அதில் உள்ள சந்தேகங்களைப் பற்றி பார்வையாளர்களிடம் பல கேள்விகளை எழுப்பி, சூடான விவாதங்கள் மற்றும் கேள்விகள் தொடரும் என்ற வகையில் படத்தை நிறைவு செய்திருப்பது பாராட்டத்தக்கது என்றாலும், ஒரே ஸ்டைலில், உறுதியான தீர்வு சொல்லாமல் மேலோட்டமாக அணுகியிருப்பது படத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்கிறது.
Tags: hot spot 2 much

