ஜாக்கி - விமர்சனம்
23 Jan 2026
மதுரைப் பகுதியில் பிரபலமான கிடா சண்டைப் போட்டிகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ‘ஜாக்கி’, ஒரு அதிரடி ஆக்ஷன் டிராமா. டாக்டர் பிரகாபல் இயக்கத்தில், யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா, அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மதுரையின் உள்ளூர் கலாச்சாரத்தையும், கிடா வளர்ப்பின் உணர்ச்சிகளையும் எதார்த்தமாக சித்தரிக்கும் இந்தப் படம், பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தைத் தருகிறது. இப்போது, படத்தின் கதை, நடிப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களைப் பார்ப்போம்.
ஷேர் ஆட்டோ டிரைவராக இருக்கும் யுவன் கிருஷ்ணா, கிடா போட்டிகளில் தீவிர ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். பல கிடா போட்டிகளில் வென்றவரான, ரிதன் கிருஷ்ணா, இந்த கிடா சண்டையை ஒரு மரியாதைக்குரிய விஷயமாகக் கருதுகிறார். இந்நிலையில், யுவனின் கிடா ஒரு போட்டியில் ரிதனின் கிடாவைத் தோற்கடித்துவிட, அதனால் இருவருக்கும் இடையே கடும் விரோதம் ஏற்படுகிறது. இதன் விளைவாக, இரு குழுக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள், சண்டைகள் நிகழ்கின்றன. கிடா போட்டியால் தொடங்கிய இந்தப் பகைமையை, அதே போட்டியின் மூலம் தீர்க்க ஊர்ப் பெரியோர்கள் தீர்மானிக்கின்றனர். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே 'ஜாக்கி'யின் மையக் கதை. மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடக்கும் கிடா சண்டைப் போட்டிகளை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதையை, யதார்த்தத்துடன் சொல்ல முயன்றுள்ள இயக்குநர் டாக்டர் பிரகாபல், போட்டிகளை உண்மைக்கு அருகில் காட்டியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம்.
கதாநாயகனாக நடித்துள்ள யுவன் கிருஷ்ணா, மதுரை இளைஞன் கதாபாத்திரத்தில் முடிந்தவரையில் இயல்பாக நடித்திருக்கிறார். தான் வளர்க்கும் கிடாவைப் போலவே சண்டைக்காட்சிகளில் வெறித்தனமாகக் கலக்கியிருக்கிறார். ஒருபுறம் அதிரடி ஆக்ஷனில் பயணிக்கும் அவர், மறுபுறம் அம்மு அபிராமியுடனான காதல் காட்சிகளிலும், உணர்ச்சிகரமான தருணங்களிலும் நன்றாகவே நடித்திருக்கிறார்.
ஹீரோவுக்குத் தேவையான அனைத்து குணங்களும் இருந்தாலும், வில்லனாகக் கலக்கியுள்ள ரிதன் கிருஷ்ணா, "கிடா சண்டை மட்டுமல்ல, ரவுடியிசமும் செய்யத் தெரியும்" எனும் அதிரடி வசனங்களுடன், திரையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்துள்ள அம்மு அபிராமி, கதாபாத்திரத்துக்கு ஏற்ற தேர்வாக இருந்து, தனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவி, பத்மன், யோகி, சாய் தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா போன்றோர், கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர்களாகத் தோன்றுவதோடு, நடிப்பிலும் மதுரை மக்களாகவே உயிரோட்டமாகக் காட்டியிருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் என்.எஸ். உதயகுமார், மதுரைப் பகுதிகளின் இயல்பான தோற்றத்தையும், மக்களின் உணர்வுகளையும் யதார்த்தமாகப் படம்பிடித்துள்ளார். கிடா சண்டை மற்றும் போட்டிகளை உண்மைக்கு அருகில் படமாக்கியது, படத்துக்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளது.
சக்தி பாலாஜியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கத் தூண்டும் வகையில் உள்ளன. பின்னணி இசை, கிடா போட்டிகளை உச்சகட்ட பரபரப்புக்கு எடுத்துச் செல்கிறது. என்.பி. ஸ்ரீகாந்த், படத்தை அதிரடியாகவும் உணர்ச்சிகரமாகவும் எடிட் செய்து, திரைக்கதையின் ஈர்ப்பை அதிகரித்துள்ளார்.
எழுதி இயக்கிய டாக்டர் பிரகாபல், உண்மைச் சம்பவங்களைத் திரைப்படமாக்கும்போது, அதைத் திரைமொழியில் சரியாகச் சொல்வதைச் சிறப்பாகச் செய்துள்ளார். குறிப்பாக, கிடா சண்டைப் போட்டிகளைத் தத்ரூபமாகப் படமாக்கி, சினிமா ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கியிருக்கிறார்.
கிடா சண்டை மூலம் பிறக்கும் விரோதம் எனும் கதைக் கருவில், காதல், சென்டிமென்ட் போன்ற பல்வேறு அம்சங்கள் இருந்தாலும், படம் முழுவதும் நாயகனுக்கும், வில்லனுக்குமான மோதலாக மட்டுமே ஆக்ஷன் பாணியில் செல்கிறது. இருப்பினும், நடிகர்களின் யதார்த்த நடிப்பும், கிடா போட்டிகளும் அந்தக் குறையை மறைத்து, படத்தை ரசிக்கத் தூண்டுகின்றன.
Tags: jackie

