திரௌபதி 2 - விமர்சனம்
24 Jan 2026
தமிழ் சினிமாவில் அரிதாகத் தோன்றும் வரலாற்றுப் படங்களில் ஒன்றாக விளங்கும் 'திரௌபதி 2', 14ஆம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மோகன்.ஜி இயக்கத்தில் வெளியான இப்படம், வல்லாள மகாராஜாவின் ஆட்சிக் காலத்தையும், துருக்கியர்களின் படையெடுப்பையும் பின்னணியாகக் கொண்டு, வீரம், துரோகம், காதல் என பல உணர்வுகளை இணைத்து சொல்கிறது. வரலாற்று உண்மைகளுடன் சில கற்பனைத் தொடர்புகளைச் சேர்த்து உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம், பார்வையாளர்களுக்கு ஒரு புதிய வரலாற்றுப் பார்வையை அளிக்க முயல்கிறது. ஒட்டுமொத்தமாக, பட்ஜெட் வரம்புக்குள் மிகுந்த முயற்சியுடன் உருவாக்கப்பட்ட இப்படம், சில குறைகள் இருந்தாலும் வரலாற்று ஆர்வலர்களை ஈர்க்கும் தன்மை கொண்டது.
திருவண்ணாமலையைத் தலைமையகமாகக் கொண்டு ஆளப்பட்ட மூன்றாம் வல்லாள மகாராஜாவின் கீழ் இருந்த சிறு நாடுகளில், விழுப்புரம் அருகிலுள்ள சேந்தமங்கலம் ஒன்று. அதை ஆளும் குறுநில மன்னரின் வாரிசான வீரசிம்ம காடவராயர், வல்லாளனின் கருடப் படையில் சேர்ந்து சேவை செய்கிறார். வட இந்தியாவை வென்ற துருக்கியர்கள் தெற்கு இந்தியாவை நோக்கி முன்னேறுகின்றனர். அவர்களைத் தடுக்கும் வல்லாள மகாராஜா கொடூரமாகப் படுகொலை செய்யப்படுகிறார். மகாராஜாவையும், கருடப் படை வீரர்களையும் காக்க இயலாததால் கவலையுறும் வீரசிம்ம காடவராயர், தன்னைத்தானே அழித்துக்கொள்ள முயலும்போது, மகாராஜா அவர் முன்பு தோன்றி சில முக்கியக் கடமைகளை ஒப்படைக்கிறார்.
மகாராஜாவின் கட்டளையை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடும் வீரசிம்ம காடவராயர், அவரது மனைவி திரௌபதி தேவி சூழ்ச்சியில் சிக்கி, கணவரைத் தவறாகப் புரிந்துகொண்டு அவரிடமிருந்து பிரிகிறார். சரியான தருணத்தில் தன் உண்மையை மனைவிக்கு விளக்க முடிவு செய்யும் வீரசிம்ம காடவராயர், மகாராஜா அளித்த பணிகளைச் செயல்படுத்தும் பயணத்தைத் தொடங்குகிறார். அந்தப் பணிகள் என்ன ? அவற்றில் அவர் வெற்றி அடைந்தாரா ? சூழ்ச்சியில் சிக்கிய திரௌபதி தேவியின் விதி என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை கூறும் வகையில், இதுவரை திரையில் விவரிக்கப்படாத வரலாற்று சம்பவங்களை, சில கற்பனை அம்சங்களுடன் இணைத்து சொல்கிறது 'திரௌபதி 2'.
14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வல்லாள மகாராஜா மற்றும் அவரது கீழ் சிறு பிரதேசங்களை ஆண்ட காடவராயர்கள் பற்றியும், அவர்கள் துருக்கியர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்றது பற்றியும் விவரித்திருக்கும் இயக்குநர் மோகன்.ஜி, குறைவாக அறியப்பட்ட வரலாற்றை வலுவாகப் பதிவு செய்ய முயன்றுள்ளார்.
வீரசிம்ம காடவராயர் பாத்திரத்தில் நடித்த ரிச்சர்ட் ரிஷி, தனது கதாபாத்திரத்துக்கு உரிய நீதி செய்யும் வகையில் நடிப்புடன், கடின உழைப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு பாத்திரத்துக்காக இவ்வளவு உழைப்பு செலுத்திய ரிச்சர்ட் ரிஷியின் தோற்றமும் உடல் அசைவுகளும், பார்வையாளர்களின் மனதில் அவரை வீரசிம்ம காடவராயராக எளிதில் நிலைநிறுத்துகின்றன.
நாயகியாக திரௌபதி தேவி பாத்திரத்தில் நடித்த ரக்ஷனா இந்துசூடன், கம்பீரமான தோற்றம், சிரித்த முகம் என படம் முழுக்க ஒரு சிலை போல சுற்றி வருகிறார். வீரமுள்ள பெண் பாத்திரத்தை தனது உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பால் அழகாகக் கையாண்டுள்ள ரக்ஷனா இந்துசூடன், திரௌபதி உருவத்துக்கு உயிர் கொடுத்துள்ளார்.
வல்லாள மகாராஜா பாத்திரத்தில் நடித்த நட்டி, அந்தப் பாத்திரத்துக்கு பொருந்தாதவராகத் தோன்றுகிறார். 80 வயது முதியவர் என்பதால் அவரது முகத்தில் போடப்பட்ட மேக்கப் அவருக்கு ஏற்றதாக இல்லை.
முகமது பின் துக்ளக் பாத்திரத்தில் நடித்த சிராக் ஜானி, முகலாயர்களின் கொடூரத்தை வெளிப்படுத்தும் வகையில் நடித்திருந்தாலும், கண்களில் கொடூரத்தைவிட காமத்தை அதிகம் காட்டியிருப்பது, பார்வையாளர்களுக்கு எந்த அச்சத்தையும் உருவாக்கவில்லை.
ஜியாசுதீன் தம்கானியாக நடித்த தினேஷ் லம்பா, எப்போதும் பெண் இன்பத்தைத் தேடுபவராகக் காட்டப்படுவதால், அவரது பாத்திரம் அச்சுறுத்துவதற்குப் பதிலாக எரிச்சலூட்டுகிறது.
முகமது பின் துக்ளக்கின் மனைவியாக நடித்த தேவயானி சர்மா, சம்புவராயர் பாத்திரத்தில் வேல ராமூர்த்தி, பரணி, திவி, ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, அருனோதயன் லக்ஷ்மணன் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் வரலாற்றுப் பாத்திரங்களில் சரியாகப் பொருந்தி, திரைக்கதைக்கு வலிமை சேர்த்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் பிலிப் ராஜ் சுந்தர், வரலாற்றுக் காட்சிகளை ஓவியங்களைப் போலப் படம்பிடித்துள்ளார். குறிப்பாக, திரௌபதி தேவியின் பாத்திரமும், அவருக்கு வழங்கப்பட்ட உடைகளின் வண்ணங்களும், அவரது காட்சிகளில் பயன்படுத்திய விளக்குகளும் பழங்கால ஓவிய உணர்வைத் தருகின்றன. அதேநேரம், வெளியிடங்களில் படமாக்கிய காட்சிகள் எந்த ஈர்ப்பும் இல்லாமல் சாதாரணமாகக் கையாளப்பட்டுள்ளன.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் கதைக்கு வலு சேர்க்கும் வகையிலும், மீண்டும் கேட்கத் தூண்டும் வகையிலும் உள்ளன. பின்னணி இசை கதாபாத்திரங்களின் வீர உணர்ச்சிகளையும், வேகமான காட்சிகளுக்கு உற்சாகம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
எஸ்.தேவராஜின் எடிட்டிங், கமலநாதன்.எஸ்-ன் கலை வடிவமைப்பு, மோகன்.ஜி-ன் உடை வடிவமைப்பு என தொழில்நுட்பக் குழுவினரின் பங்களிப்பு படத்துக்கு கூடுதல் மெருகு சேர்த்துள்ளது.
பத்மா சந்திரசேகர் மற்றும் மோகன்.ஜி ஆகியோரின் கதை மற்றும் உரையாடல்கள், அறியப்படாத வரலாற்றைத் திரைமொழியில் சுவையாகச் சொல்ல முயன்றுள்ளன. உரையாடல்கள் எளியதாக இருந்தாலும், அவற்றின் வழியே மக்களுக்கு அளிக்க விரும்பிய செய்தியை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார் பத்மா சந்திரசேகர்.
வரலாற்று நிகழ்வுகளுடன் சில கற்பனை அம்சங்களை இணைத்து, தமிழ்நாட்டில் முகலாயர்களின் ஆக்கிரமிப்பு தோற்கடிக்கப்பட்டதையும், அதன் பின்னால் இருந்த வல்லாள மகாராஜா பற்றியும் விவரித்திருக்கும் இயக்குநர் மோகன்.ஜி, தனது அறிவார்ந்த இயக்கத்தால் குறைந்த பட்ஜெட்டில் ஒரு பெரிய வரலாற்று உருவாக்கத்தை அளிக்க முயன்றுள்ளார்.
முகலாயர்கள் இந்துக்கள் மீது செய்த கொடுமைகளை விளக்க முயன்றிருக்கும் இயக்குநர் மோகன்.ஜி, அவர்கள் பெண்களிடம் அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருப்பது சற்று எரிச்சலூட்டுவதோடு, முகலாய மன்னர்கள் மீது பார்வையாளர்களுக்கு கோபம் ஏற்படாமல் போய்விடுகிறது.
யுத்தம் மற்றும் முற்றுகைக்கு இடையிலான வேறுபாட்டை காட்சிகள் வழியே தெளிவாகக் கூறியிருக்கும் இயக்குநர் மோகன்.ஜி, பார்வையாளர்களுக்கு ஒரு வரலாற்றுப் புத்தகத்தை வாசித்த உணர்வை அளிக்கிறார்.
கூடுதல் விவரங்கள் மற்றும் பிரம்மாண்டக் காட்சிகள் சேர்த்திருந்தால் படம் இன்னும் வியப்பூட்டியிருக்கும். இருந்தாலும், குறைந்த பட்ஜெட்டில் இத்தகைய கதையைத் திரையில் கொண்டுவந்த இயக்குநர் மோகன்.ஜி-ன் கடின உழைப்பையும் முயற்சியையும் பாராட்டலாம்.
Tags: draupathi 2, mohang, richard rishi, rakshana indusoodan

