ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே (ஹிந்தி)’ ஆகிய படங்களுக்குப் பிறகு தனுஷ் நடித்து மூன்றாவதாக ஓடிடியில் வெளிவந்துள்ள படம் ‘மாறன்’.

‘துருவங்கள் பதினாறு’ படத்தை இயக்கிய இளம் இயக்குனர் கார்த்திக் நரேன், தனுஷ் முதல் முறை இணைவதாக அறிவிக்கப்பட்டு இந்தப் படத்தின் முதல் அறிவிப்பு போஸ்டர் வந்த போதே ஒரு எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அது போகப்போக குறைந்து போனதன் காரணம் தெரியவில்லை. படத்தைப் பார்த்த பின் எதற்காக இந்த கூட்டணி இணைந்தது என்று புரியாமல் படம் பார்த்த பலரும் குழம்பிப் போய் இருககிறார்கள்.

அரதப் பழசான கதை, டெம்ப்ளேட் ஆன திரைக்கதை, திரும்பத் திரும்பக் கேட்டு சலித்துப் போன வசனங்கள் என படம் பார்த்தவர்களை நிறையவே சோதித்துவிட்டார் இந்த ‘மாறன்’.

இந்தக் கதையில் என்ன வித்தியாசத்தைக் கொடுக்கலாம் என இயக்குனர் கார்த்திக் நரேன் யோசித்ததாகவே தெரியவில்லை. இந்தக் கதையில் தனக்கு சவாலான விஷயம் என்ன இருக்கிறது என தனுஷ் கவனித்திருக்க மாட்டாரா என்பதும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.

படத்தில் ரசிக்க வைத்த ஒரே விஷயம் என்றால் தங்கை கதாபாத்திரம்தான். இப்படி பல கதாபாத்திரங்களைப் பார்த்திருந்தாலும் யதார்த்தமான நடிப்பில் ஸ்ம்ருதி வெங்கட் நம்மைக் கவர்ந்துள்ளார் என்பது உண்மை. 

படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன். இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிடுவதில் காட்டும் திறமையை படத்தில் நடிக்கும் போது காட்டலாம்.

தனுஷ் பாடல் எழுதி பாடுகிறார் என்றால் அந்தப் பாட்டு எப்படியும் ஹிட் ஆகிவிடும். இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் அப்படி ஒரு பாடல் உண்டு. ஆனால், கேட்கத்தான் முடியவில்லை. 

ஒரு ஏமாற்றம் என்றால் சொல்லிவிடலாம், முழுவதுமே ஏமாற்றம் என்றால் என்ன சொல்வது. 

மாறன் எடுத்தவர்கள் தங்களை மாற்றிக் கொள்வது அவர்களுக்கும்  ரசிகர்களுக்கும் சினிமாவுக்கும் நல்லது.