ஒரு படத்தைப் பார்த்து அது ரசிகர்களுக்குப் புரிந்தால் அது கமர்ஷியல் படம், புரியாத படங்களை அறிவுஜீவி படம் என்று சொல்வார்கள். அதில் இந்தப் படம் இரண்டாவது வகை.

படம் பார்த்த பின் எத்தனை பேருக்குப் புரிந்தது, படத்தின் கதை என்ன சொல்லுங்கள் என்று கேட்டால் எத்தனை பேர் அதைச் சொல்வார்கள் என்று தெரியாது. அப்படி ஒரு படம் இந்த ‘குதிரைவால்’.

தூக்கத்திலிருந்து எழும் கலையரசன், தனக்குப் பின்னால் குதிரைவால் ஒன்று முளைத்துவிட்டதாக நினைக்கிறார். தனக்கு எப்படி வால் வந்தது என்று தெரியாமல் குழம்பித் தவிக்கிறார். கனவுகளுக்கு அர்த்தம் சொல்லும் பாட்டி, அவரது கணித ஆசிரியர், ஒரு ஜோசியர் என சிலரைத் தேடிச் சென்று காரணம் கேட்கிறார். ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்கிறார்கள். அந்த வால் வந்த கதையும், போன கதையும்தான் படத்தின் கதை.

இப்படி ஒரு கதையில் தனது கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதைப் புரிந்து (?) கொண்டு நடிக்க தனி தைரியம் வேண்டும். அது கலையரசனுக்கு நிறையவே இருக்கிறது. இயக்குனர்கள் மீதும், படத்தின் தயாரிப்பாளர்கள் மீதும் நம்பிக்கை வைத்து நடிக்க சம்மதித்திருப்பார் போலிருக்கிறது.

அஞ்சலி பாட்டீல்தான் கதாநாயகி. ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார். படத்தில் நடித்திருக்கும் சிலரைத் தவிர மற்றவர்கள் புதியவர்கள். அனைத்து கதாபாத்திரங்களும் குழப்பமான மனநிலை கொண்டவர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது.

படத்தில் ஆங்காங்கே குட்டி குட்டியாக பாடல்கள். பிரதீப் குமார் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். மார்டின் விசர் பின்னணி இசையமைத்திருக்கிறார். 

இலக்கிய உலகத்தில் சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தப் படம் வித்தியாசமான படம் என்று புகழத் தோன்றும். ஆனால், சாமானிய ரசிகனுக்கு இது என்ன படம் என்று கேட்கத் தோன்றும்.

தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு செல்ல இயக்குனர்கள் மனோஜ் லயனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர் முயற்சித்திருக்கிறார்கள். படத்தை இப்போது கொண்டாடுகிறார்களோ இல்லையோ பிற்காலத்தில் கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.