லவ் சப்ஸ்க்ரைப் ஷேர் - விமர்சனம்
20 Feb 2026
தற்கால இளைஞர்களின் காதல் மற்றும் குடும்ப உறவுகளை ஒருசேரப் பேசும் முயற்சியில் உருவாகியுள்ள படம் 'லவ் சப்ஸ்க்ரைப் ஷேர்'.
இயக்குநர் ஆர்.மகாலக்ஷ்மி முருகன் இயக்கத்தில், ஆதவ் கிருஷ்ணா மற்றும் சிம்ரன் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படம், காதலின் இனிய துவக்கமும், பின்னர் ஏற்படும் பிரிவின் வலியும், மீண்டும் இணையும் ஆவலும் என பல அடுக்குகளைக் கொண்ட கதை. தாய் இல்லாத பெண்ணின் மன உளைச்சலும், காதலனின் அன்பில் அவள் காணும் பாதுகாப்பும், பின்னர் தாயைத் தேடிச் செல்லும் பயணமுமாக பயணிக்கும் இந்தக் கதை, இறுதியில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திச் செல்கிறது.
தாய் இல்லாமல் தந்தையின் அரவணைப்பில் வளரும் சிம்ரன், தன்னுடன் கல்லூரியில் படிக்கும் ஆதவ் கிருஷ்ணாவை காதலிக்கிறார். படிப்பில் மட்டும் கவனம் செலுத்தும் ஆதவ், முதலில் அவளது காதலை நிராகரித்தாலும், பின்னர் அவளது உண்மையான அன்பைப் புரிந்துகொண்டு காதலிக்கத் தொடங்குகிறார். ஆதவின் பெற்றோரைச் சந்தித்து அவர்களின் ஆசியையும் பெறுகிறார் சிம்ரன். ஆனால், தன்னையும் தனது தந்தையையும் விட்டுப் பிரிந்து சென்ற தனது தாயைச் சந்தித்து, தனது காதல் விசயத்தைத் தெரிவிக்க விரும்புகிறார். அதன்படி, இருவரும் காசிக்குப் பயணமாகிறார்கள். அங்கு தாயைச் சந்திக்கும் சிம்ரனுக்கு, எதிர்பாராத விதமாகக் காதலனைப் பிரியும் நிலை ஏற்படுகிறது. மறுபக்கம், மாயமாய் மறைந்த காதலியைத் தேடும் ஆதவ் பல சிக்கல்களைச் சந்திக்கிறார். இவர்களின் பிரிவின் பின்னணி என்ன, இறுதியில் இருவரும் இணைந்தார்களா, இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகனாக அறிமுகமாகும் ஆதவ் கிருஷ்ணா, மிகுந்த நம்பிக்கையுடன் நடித்திருக்கிறார். காதல், நகைச்சுவை, உணர்ச்சிகரமான காட்சிகள் என அனைத்திலும் சிறப்பாகச் செயல்பட்டுத் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். நாயகி சிம்ரன், புத்துணர்ச்சியும் துடிப்பும் நிறைந்த நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். காதலனிடம் மட்டுமின்றி, அவரது பெற்றோரிடமும் தனது காதலை விளக்கிச் சம்மதம் பெறும் காட்சிகளில், தனது காதல் மீதும் காதலன் மீதுமுள்ள நம்பிக்கையை அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகனின் பெற்றோராக நடித்த படவா கோபி மற்றும் வினோதினி, மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்செயன், முத்து புவன் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பங்களிப்பை நேர்த்தியாகச் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ்குமார், சென்னை மற்றும் காசி நகரங்களை இயல்பாகப் படம்பிடித்துத் திரைக்கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார். அஸ்வமித்ராவின் இசையில் பாடல்கள் காதல் உணர்வுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளன. பின்னணி இசையும் காட்சிகளுக்கேற்றவாறு பயணித்துள்ளது. படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த்.என்.பி, காதல் கதையில் உள்ள திருப்பங்களைச் சரியாகக் கையாண்டு படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றிருக்கிறார். அசோக் அமிர்தராஜின் கதை மற்றும் வசனம், இளைஞர்களின் காதலை வணிகரீதியாகச் சொன்னாலும், காதலின் உண்மையான உணர்வுகளையும் வலியையும் உணர்த்தும் விதத்தில் அமைந்துள்ளன.
திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் ஆர்.மகாலக்ஷ்மி முருகன், காதல் கதையை மட்டும் சொல்லாமல், தாய்-மகள் உறவு, குடும்பப் பிணைப்பு ஆகியவற்றையும் பின்னணியாகக் கொண்டு நேர்மையான படத்தை உருவாக்கியிருக்கிறார். முதல் பாதியில் இளைஞர்களின் காதலைச் சொல்லிவிட்டு, இரண்டாம் பாதியில் காதல் பிரிவு, அதனால் ஏற்படும் வலி, காதலர்களின் மன உறுதி ஆகியவற்றை முக்கிய அம்சமாகக் கையாண்டிருக்கிறார். ஆனால், இந்த உணர்வுகளை ஆழமாகச் சொல்லாமல் மேலோட்டமாகக் கடந்து சென்றிருப்பது படத்தைச் சற்று தொய்வடையச் செய்கிறது. இருப்பினும், காதல் காட்சிகளில் நாகரீகமாகக் கையாண்டிருப்பதும், காதல் என்பது இருவர் மட்டுமே சம்பந்தப்பட்ட விசயமில்லை, அது ஒட்டுமொத்த குடும்பத்துடன் இணைந்த ஒன்று என்பதை வலியுறுத்தியிருப்பதும் பாராட்டுக்குரியது.
Tags: love subscribe share

