அறிவான் - விமர்சனம்

20 Feb 2026

தமிழ் சினிமாவில் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் வகைமையில் அவ்வப்போது வரும் படங்கள், பார்வையாளர்களை திரையரங்கில் பதற்றத்துடன் உட்கார வைக்கும் வகையில் அமையும் போது மட்டுமே வெற்றி பெறுகின்றன.

அருண் பிரசாத் இயக்கத்தில், ஆனந்த் நாக் மற்றும் ஜனனி குணசீலன் நடிப்பில் வெளியாகியுள்ள 'அறிவான்' திரைப்படம், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தொடர் கொலைகளின் மர்மத்தை விரிக்கும் முயற்சியாக உருவாகியுள்ளது. இந்தப் படம், விசாரணைக்கான புதிய கோணங்களைத் தொட முயன்றாலும், சில இடங்களில் வேகம் குறைந்து போவதால் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதில் சற்று தடுமாறுகிறது. இருப்பினும், சமூகப் பிரச்சனைகளைத் தொட்டுச் செல்லும் அதன் அணுகுமுறை கவனம் ஈர்க்கிறது.

நேர்மையான ஆனால் சர்ச்சைக்கு உள்ளான காரணத்தால் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் நாக், நெய்வேலிக்கு மாற்றப்படுகிறார். பொறுப்பேற்ற சில நாட்களுக்குள்ளாகவே அப்பகுதியில் ஒரு சந்தேகத்திற்குரிய மரணம் ஏற்படுகிறது. அது விபத்தா அல்லது கொலையா என விசாரிக்கத் தொடங்க, அடுத்த நாளே அதே இடத்தில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஒரு ஆணின் உடல் கண்டெடுக்கப்படுகிறது. இரு சம்பவங்களிலும் ஒரு கார் தொடர்புடையதாகத் தெரிய வர, இரண்டுமே கொலை என முடிவு செய்யும் ஆனந்த் நாக், தனது தேடலை தீவிரமாக்குகிறார். அப்போது, ஒரு பாலியல் தொழிலாளிக்கு இதில் தொடர்பு இருப்பதை அறிகிறார்.

அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரிக்கும் போது, அவர் கொலையாளி பற்றிய ரகசியத்தை வெளியிட முயல, அங்கேயே கொடூரமாகக் கொல்லப்படுகிறார். முக்கிய சாட்சி இழந்ததோடு, காவல் நிலையத்தில் கொலை நிகழ்ந்ததால் ஆனந்த் நாக்கிற்கு அதிகார அழுத்தம் அதிகரிக்கிறது. அதே வேளையில், அப்பகுதியில் மூன்றாவது கொலை ஏற்படுகிறது. இழந்த தடயங்களுடன் தொடங்கி, குற்றவியல் செய்தியாளர் ஜனனியின் உதவியுடன் விசாரணையை மீண்டும் ஆரம்பிக்கும் ஆனந்த் நாக், கொலையாளியையும் அவரது உள்நோக்கத்தையும் எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதே 'அறிவான்' படத்தின் மையக் கதை.

தொடர் கொலைகள் மற்றும் அவற்றின் பின்னணியை வெளிக்கொணரும் போலீஸ் அதிகாரியின் விசாரணை என்ற வழக்கமான கதைக்கரு இருந்தாலும், திரைக்கதையை புதிய வடிவத்தில் கையாண்டு பார்வையாளர்களை ஈர்க்க இயக்குநர் எஸ். அருண் பிரசாத் முயற்சி செய்துள்ளார்.

நாயகன் ஆனந்த் நாக்கிற்கு போலீஸ் உடை சரியாகப் பொருந்தினாலும், அதற்கான உறுதியான நடிப்பில் சற்று ஏற்ற இறக்கங்கள் தென்படுகின்றன. வழக்கு விசாரணையில் கவனம் செலுத்துவதை விட, உடன் இருக்கும் காவலர்களை அவ்வப்போது கேலி செய்வதையே முதன்மையாகக் கொண்டிருப்பது, வழக்கின் தீவிரத்தை சற்று மங்கச் செய்கிறது.

நாயகி ஜனனி குணசீலனின் குற்றவியல் நிருபர் பாத்திரம் திரைக்கதையில் முக்கிய இடம் பிடிக்கும் என எதிர்பார்க்க வைத்தாலும், கதை முன்னேறும் போது அவர் பின்னால் தள்ளப்படுகிறார். பின்னர், வழக்கில் அவரை வலிந்து இணைப்பதால், படத்தில் அவருக்கு பெரிய பங்கு இல்லை என்ற போதிலும், கொடுக்கப்பட்ட காட்சிகளில் திறமையாக நடித்துள்ளார்.

பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கௌரி சங்கர், குருமூர்த்தி போன்றோர் துணை வேடங்களில் வருகின்றனர் என்றாலும், திரைக்கதையில் அவர்களால் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படவில்லை.

ஒளிப்பதிவாளர் யஷ்வந்த் பாலாஜியின் பணி தனித்தன்மை இல்லாதது என்றாலும், காட்சிகளின் தரம் உயர்வாக உள்ளது.

கார்த்திக்.ஈ.ஆர்.ஏ இசையமைப்பில் பாடல்களும் பின்னணி இசையும் கதையின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளன.

படத்தொகுப்பாளர் சத்யமூர்த்தி.ஆர், திரைக்கதையை வேகமாகவும் உற்சாகமாகவும் நகர்த்த கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, 'எப்படி?', 'ஏன்?', 'யார்?' என்ற மூன்று கேள்விகளை மையப்படுத்தி கிரைம் சஸ்பென்ஸ் திரைக்கதை உருவாக்கிய இயக்குநர் எஸ். அருண் பிரசாத், ஆரம்பத்தில் கதையை உற்சாகத்துடன் தொடங்கினாலும், அடுத்தடுத்த கொலைகள் மற்றும் விசாரணை திருப்பங்களை சாதாரணமாகக் கையாண்டது படத்தை சற்று பலவீனமாக்குகிறது.

கொலையாளி அடையாளம் தெரிய வந்த பிறகு, கொலைகளின் பின்னணியில் உள்ள சமூக விவகாரம், அவரைப் பிடிக்கும் முயற்சிகள், உச்சக்கட்டத்திற்கு முந்தைய காட்சிகள் ஆகியவை பார்வையாளர்களை பதற்றத்தில் வைக்கின்றன.

 

Tags: arivaan, ananth nag, janani

Share via: