காந்தாரா சாப்டர் 1 - விமர்சனம்
02 Oct 2025
மூலிகைகள், அரிய விளைபொருட்கள் நிரம்பிய காந்தாரா வனத்தை கைப்பற்றும் ஆசையில், அருகிலுள்ள நாட்டின் அரசர் தீவிரமாக முயல்கிறார். ஆனால், அவர் தோல்வியுற்ற பிறகு, அவரது வாரிசுகள் அந்த முயற்சியை தொடர்ந்து முன்னெடுத்து, உயிரிழக்கும் அளவுக்கு போராடுகின்றனர். இதற்கிடையே, காந்தாரா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ரிஷப் ஷெட்டி, காட்டை விட்டு வெளியேறி, தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய முயன்று, சாதாரண மக்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளை அதிரடியாக உடைத்து, துறைமுகத்தை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருகிறார்.
பழங்குடியினரின் வலிமையை எதிர்க்க முடியாமல் திணறும் அரசர் ஜெயராம், அவர்களுடன் சமரசம் செய்து, அனைத்து மரியாதைகளையும் வழங்குவதாக உறுதியளிக்கிறார். ஆனால், உள்ளுக்குள் அவர்களின் ஆன்மீக சக்திகளை கட்டுப்படுத்தி, காந்தாராவை கைப்பற்றும் சூழ்ச்சியைத் திட்டமிடுகிறார். இந்த சதித் திட்டம் வெற்றி பெறுமா? நாயகன் ரிஷப் ஷெட்டி தனது மக்களையும், வனத்தையும் காப்பாற்றுவாரா? என்பதை உரத்த குரலில், அதிரடி காட்சிகளுடன் சொல்கிறது 'காந்தாரா: சாப்டர் 1'.
நாயகன் ரிஷப் ஷெட்டி, பழங்குடி இளைஞனாக முழுமையாக உருமாறியிருக்கிறார். "ஓ... ஓ..." என்று கர்ஜித்து சாமியாடும் காட்சிகளில் அவரது நடிப்பு அபாரம் - உடல் மொழி, கண்களில் தீப்பொறி பறக்கும் கோபம், எல்லாம் ஆக்ரோஷமாக வெளிப்பட்டு, பார்வையாளர்களை மிரட்டுகிறது. இயக்குநராகவும், எழுத்தாளராகவும் அவர் பிரகாசிக்கிறார், ஆனால் முந்தைய 'காந்தாரா'யின் உணர்ச்சிகரமான கதை இங்கு சற்று குறைவாகவே உணரப்படுகிறது.
நாயகி ருக்மணி வசந்த், அழகின் உருவமாக ஜொலிக்கிறார். ஆரம்பத்தில் அமைதியான பெண்ணாகத் தோன்றும் அவர், பின்னர் விஸ்வரூபம் எடுத்து, தனது வலிமையை வெளிப்படுத்தி அசத்துகிறார். அரசராக ஜெயராம் மற்றும் அவரது மகனாக குல்ஷன் தேவய்யா இருவரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வு - அவர்களின் நயவஞ்சகமும், ஆதிக்கமும் திரையில் தெளிவாகத் தெரிகிறது.
இசையமைப்பாளர் பி. அஜனீஸ் லோக்நாத், படத்தின் உயிர்நாடி. பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளை உயிர்ப்பிக்கின்றன - குறிப்பாக, சண்டை மற்றும் ஆன்மீக காட்சிகளில் அந்த இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது. ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ். காஷ்யப், வனத்தின் பிரம்மாண்டத்தை அழகாகப் படம்பிடித்திருக்கிறார்.
ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகள் இருந்தாலும், அவை கதையோடு இயல்பாக இணைந்து, திரையில் மாயாஜாலம் செய்கின்றன.எடிட்டர் சுரேஷ், காட்சிகளை இன்னும் சுருக்கமாக வெட்டியிருக்கலாம் - படத்தின் நீளம் சற்று சோர்வைத் தருகிறது.
ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில், வனக் கைப்பற்றல், பழங்குடி போராட்டம், ஆன்மீகம் ஆகியவை இணைந்து பிரம்மாண்டமான தோற்றம் கொடுக்க முயன்றிருக்கிறார். சண்டைக்காட்சிகளும், கிராபிக்ஸும் ரசிக்க வைக்கின்றன, ஆனால் திரைக்கதை சற்று சுவாரஸ்யமின்மையும், பழமையான பாணியும் படத்தை சற்று பலவீனப்படுத்துகின்றன.
இருந்தாலும், காந்தாராவின் மர்மமும், பழங்குடி கலாச்சாரமும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.மொத்தத்தில், 'காந்தாரா: சாப்டர் 1' ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன்-ஆன்மீக சாகசம் - நடிப்பும், இசையும் பலம், ஆனால் உணர்ச்சி மற்றும் வேகம் சற்று கூடுதலாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
Tags: kanthara chapter 1, rishab shetty