கட்ஸ் - விமர்சனம்

14 Jun 2025

நாயகன் ரங்கராஜ் பிறந்த அன்று அவரது தந்தையை மர்மக் கைகள் கொன்றுவிட, பின்னர் தாயையும் இழந்து வளரும் ரங்கராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டராக உயர்ந்தாலும் விதியின் கொடுமை அவரைத் தொடர்கிறது. மனைவி மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த அவரது வாழ்வு, மனைவியின் மரணத்தால் மீண்டும் சிதைகிறது. இந்தக் கொடூரமான கொலையின் உண்மையைக் கண்டுபிடிக்கும் போது, அவரது தந்தை கொலைக்குப் பின்னால் மறைந்திருக்கும் சதியும் வெளியாகிறது. ரங்கராஜ் எப்படி பழிவாங்கிறார், ஏன் அவரது மனைவி கொல்லப்பட்டாள், யார் இந்தக் கொலையாளி என்பதே கதையின் மையம்.  

ரங்கராஜ் இந்தப் படத்தில் இரு வேடங்களில் நடித்துள்ளார். விவசாயி பெத்தனசாமி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் ஆகிய இரு கதாபாத்திரங்களிலும் அவரது நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது. காதல் காட்சிகளில் இனிமையாகவும், சோகக் காட்சிகளில்  உணர்ச்சிகரமாகவும், அதிரடிக் காட்சிகளில் வீராவேசமாகவும் நடித்து, தனது நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். பெரிய மீசையும் அருவாளும் கொண்ட விவசாயியாக அவரது தோற்றம், பருத்திவீரன் கார்த்தியை நினைவூட்டுகிறது.  

ஸ்ருதி நாராயணன் கிராமத்து மனைவியாகவும், நான்ஸி நவீன மனைவியாகவும் தங்கள் பாத்திரங்களுக்கு நீதி செய்கின்றனர். டெல்லி கணேஷ் ஒரு மூத்த காவலராக நடித்திருந்தாலும், அவரது வசன உச்சரிப்பு சில இடங்களில் இயல்பாக இல்லை. சாய் தீனா, பிர்லா போஸ், ஸ்ரீலேகா மற்றும் அறந்தாங்கி நிஷா போன்ற துணை நடிகர்கள் தங்கள் பாத்திரங்களுக்கு ஏற்ப நன்றாக நடித்துள்ளனர்.  

தொழில்நுட்ப அம்சங்களில், ஒளிப்பதிவாளர் மனோஜ் கதைக்கு ஏற்ப காட்சிகளை வடிவமைத்துள்ளார். ஜோஸ் பிராங்கிளின் இசை பாடல்களில் மட்டுமல்ல, பின்னணி இசையிலும் கதையோட்டத்தை வலுப்படுத்துகிறது. படத்தொகுப்பாளர் ரஞ்சித் இரட்டைக் கதைகளை ஒன்றிணைக்கும் போது சில இடங்களில் வேகமாக முன்னேறியிருந்தாலும், ஒட்டுமொத்தமாக கதை தெளிவாகவே உள்ளது.  

இயக்குநராகவும், நடிகராகவும், கதை எழுத்தாளராகவும் ரங்கராஜ் பல முனைகளில் பணியாற்றியுள்ளார். வழக்கமான பழிவாங்கும் கதையை பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக வடிவமைத்தாலும், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் ஆழம் இருந்தால் இயக்குநராக அவரது திறன் முழுமையாக வெளிப்படும். இருப்பினும், முதல் படமாக "கட்ஸ்" அவரது நடிப்புத் திறனை நிரூபிக்கும் ஒரு திறமையான முயற்சியாக அமைந்துள்ளது.

Tags: guts, rangaraj

Share via: