கார்கி - விமர்சனம்
16 Jul 2022
பெண்களை முன்னணி கதாபாத்திரங்களாகக் கொண்டு வரும் படங்கள் கூட முன்னணி கதாநாயகிகளை நடிக்க வைத்துத்தான் வரும். ஆனால், தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த சாய் பல்லவியை முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்ததற்காகவே இந்த படக்குழுவை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
அதிலும், நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்க இருந்தாலும் வேறொரு நடிகையை நடிக்க வைக்க வேண்டுமென்ற மனமே பெரிய மனம். அதைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
குற்றமே செய்யாத தன்னுடைய அப்பாவைக் காவல் துறை கைது செய்ததை எதிர்த்து ஒரு பெண் எப்படிப் போராடுகிறார் என்பதுதான் படத்தின் கதை. கடைசியில் யார் குற்றவாளி என்று தெரிந்தும் அவர் எடுக்கும் துணிச்சலான ஒரு முடிவு, தமிழ் சினிமாவில் இதுவரை வராத ஒன்று.
பள்ளியில் டீச்சராக இருப்பவர் சாய் பல்லவி. ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பா ஒரு அபார்ட்டிமென்ட்டில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கிறார். அந்த அபார்ட்மென்ட்டில் ஒரு சிறுமி நான்கு பேரால் கற்பழிக்கப்பட்டதற்காக அந்த நால்வரும் கைது செய்யப்படுகிறார்கள். கூடவே, சாய் பல்லவியின் அப்பாவும் அதே குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறார். தன் அப்பா நிரபராதி என நிரூபீக்க வக்கீல் காளி வெங்கட் உதவியுடன் நீதிமன்றம் செல்கிறார் சாய் பல்லவி. முடிவில் யார் குற்றவாளி, சாய் பல்லவியின் அப்பா விடுவிக்கப்பட்டாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரு சினிமா பார்க்கிறோம் என்று தெரியாத அளவிற்கு நேரடியாகவே ஒரு சம்வத்தைப் பார்க்கும் உணர்வைக் கொடுத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன். அதற்கான லொகேஷன், சாய் பல்லவியின் வீடு, நீதி மன்ற அறை என அனைத்துமே நாம் ஏற்கெனவே பார்த்த இடங்களைப் போல தோண வைக்கிறது.
படத்தின் மிகப் பெரும் பிளஸ் பாயின்ட் சாய் பல்லவி. இப்படி ஒரு கதையை தனது நடிப்பால் முழுமையாகத் தூக்கி நிறுத்துகிறார். சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களில் கூட இப்படி நடிக்க முடியும் என ஆச்சரியப்படுத்துகிறார். மேக்கப் இல்லாத முகம், பாந்தமான புடவை என அவரது தோற்றமே நம்மில் ஒருவர் என காட்டுகிறது. அவர் தவிக்கும் தவிப்பை நமக்கும் தொற்றிக் கொள்ள வைக்கிறார்.
சாய் பல்லவிக்கு உதவும் ஒரு அற்புதமான மனிதராக காளி வெங்கட். எங்கோ ஒரு மூலையில் இப்படிப்பட்ட நல்லவர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதால்தான் கோடை காலத்திலும் மழை பெய்கிறது.
சாய் பல்லவியின் அப்பாவாக ஆர்எஸ் சிவாஜி, இவரது நண்பராக கதைக்குத் திருப்புமுனையான கேரக்டரில் லிவிங்ஸ்டன், வக்கீலாக ஜெயப்பிரகாஷ் கொஞ்ச நேரமே வந்தாலும் தங்கள் இருப்பைப் பதிவு செய்கிறார்கள்.
கோவிந்த் வசந்தா பின்னணி இசை உணர்வுக்குவியல்களை உயிரோட்டமாய் நகர்த்துகிறது. ஷ்ரயந்தி, பிரேம் கிருஷ்ணா அக்காட்டு ஒளிப்பதிவு கதைக்குள் அடங்கி, கதைக்குத் துணையாய் இருக்கிறது.
இடைவேளைக்குப் பிறகு திரைக்கதயில் லேசான ஒரு தொய்வு தவிர படம் முழுவதும் அடுத்து என்ன ?, யார் குற்றவாளி என பரபரப்பாய் நகர்கிறது.
ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என மன தைரியத்தைக் கொடுக்கும் ஒரு படம்.
அன்று மிதிலை மன்னன் சனகனின் அரசவையில் கௌரவிக்கப்பட்டவர் கார்கி, இன்று தமிழ் சினிமா ரசிகர்களிடம் கௌரவிக்கப்பட இருப்பவர் இந்த ‘கார்கி’.
Tags: gargi, sai pallavi, gautham ramachandiran, govind vasantha