மலையாளத்தில் வெளிவந்த ‘டிரான்ஸ்’ படத்தின் தமிழ் டப்பிங் படம்தான் இந்த ‘நிலை மறந்தவன்’.

கிறிஸ்துவ மதத்தில் ஒரு சிலர் அம்மதத்தைச் சேர்ந்தவர்களின் தீவிர மத ஈடுபாட்டைப் பயன்படுத்தி நன்கொடையாக பல கோடிகளைப் பெற்று அதை ஒரு கார்ப்பரேட் வியாபாராமாக செய்வது பற்றிய படம் இது.

கன்னியாகுமரியில் ‘மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்’ ஆக ஊக்கமளிக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்துபவர் பகத் பாசில். மனநலம் பாதிக்கப்பட்ட தன் தம்பி தற்கொலை செய்து கொண்டதால் அங்கிருந்து மும்பை செல்கிறார். அங்கு கிறிஸ்துவ மதத்தை வைத்து நன்கொடை பெற்று பல கோடிகளை சம்பாதிக்கும் கௌதம் மேனன், செம்பன் வினோத் ஆகியோரிடம் வேலைக்குச் சேர்கிறார். அவர்களின் ஆசை வார்த்தையில் மயங்கி போலி பாதிரியாராக மாறி மதப் பிரச்சாரம் செய்ய சம்மதிக்கிறார். அதன்படி செய்து பல கோடிகளைப் பெறுகிறது இந்த கூட்டம். ஒரு கட்டத்தில் தான் செய்வது தவறு என நினைக்கும் பகத் பாசில் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

மலையாளத்தில் எந்த ஒரு படத்தையும் சினிமாவாக மட்டுமே பார்ப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படியல்ல. அனைத்தையும் நிஜ வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். இங்குள்ள மக்களின் மனதில் சில விஷ விதையை விதைப்பதற்காகவே இந்தப் படத்தை டப்பிங் செய்து வெளியிட்டுள்ளார்களோ என யோசிக்க வைக்கிறது. அதற்கேற்றபடி மறைமுகமாக படத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் நிறையவே விளம்பரம் கொடுக்கிறார்கள்.

பகத் பாசில் எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும், அப்படியே அந்தக் கதாபாத்திரத்தில் ஒன்றிவிடுவார். இந்தப் படத்திலும் அப்படியே. இப்படி மதப் பிரச்சாரம் செய்து பணம் சம்பாதிக்கும் சிலரும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் என்னவெல்லாம் உடல் மொழியில் இருப்பார்களோ, எப்படியெல்லாம் பேசுவார்களோ, அப்படியே பேசி நடித்திருக்கிறார் பகத் பாசில். 

இடைவேளைக்குப் பின்தான் படத்தின் நாயகியாக நஸ்ரியா வருகிறார். பகத் பாசிலை வேவு பார்ப்பதற்காக அவரை அனுப்புகிறார்கள் கௌதம் மேனன், செம்பன் வினோத். உளவு பார்க்க ஆரம்பித்து போகப் போக பகத்தை நேசிக்க ஆரம்பித்துவிடுகிறார் நஸ்ரியா. உதவி செய்த நஸ்ரியாவுக்கும் ஒரு முடிவைக் கொடுக்கிறது கௌதம், செம்பன் கூட்டணி.

கௌதம் மேனன், செம்பன் வினோத் இருவரும்தான் படத்தின் வில்லன்கள். ஒரு கார்ப்பரேட் மதப் பிரச்சாரக் கம்பெனியின் நிர்வாகிகள் இப்படித்தான் இருப்பார்களோ என நம்மையும் மிரள வைக்கிறார்கள்.

டப்பிங் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு தமிழ்ப் டப்பிங்கை முடிந்த வரையில் பொருத்தமாக செய்திருக்கிறார்கள்.

கிறிஸ்துவ மதத்தில் இருக்கும் பணம் பறிக்கும் பாதிரியார்களைப் பற்றி படம் எடுப்பது இருக்கட்டும். அது போல இந்து மதத்தில் போலியான பாலியல் சாமியார்களைப் பற்றிய படமெடுத்தால் இங்கு எந்தத் தடையுமில்லால் வெளியிட்டு விட முடியுமா ?.