‘மஞ்சப்பை, கடம்பன்’ படங்களை இயக்கிய ராகவன், குழந்தைகள் மகிழ்வதற்காக இந்த ‘மை டியர் பூதம்’ படத்தை இயக்கியிருக்கிறார். தமிழில் குழந்தைகளுக்கான படங்கள் அதிகம் வருவதில்லை என்ற குறையை இந்தப் படம் நிறைவாகவே போக்கியிருக்கிறது.

பூதலோகத்தின் தலைவர் பிரபுதேவா. அவரது மகன் ஒரு சித்தரின் தவத்தைக் கலைத்ததால் சித்தர் சாபம் இடுகிறார். அந்த சாபத்தால் பூமியில் 3000 ஆண்டுகளாக சிலையாக இருக்கிறார் பிரபுதேவா. அந்த சிலைக்கு சிறுவனான அஷ்வத் உயிர் கொடுக்கிறார். அதே சமயம் 48 நாளில் ஒரு மந்திரத்தை அந்த சிறுவன் சொன்னால் மட்டுமே பிரபுதேவா மீண்டும் அவரது பூத லோகம் செல்ல முடியும். இல்லையென்றால் நிரந்தரமாக மரணமடைய நேரிடும். இந்த சூழ்நிலையில் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

தமிழ் சினிமாவில் ஆக்ஷன், நகைச்சுவை, சென்டிமென்ட் என பல விதமான கதாபாத்திரங்களில் நடித்தவர் பிரபுதேவா. குழந்தைகள் படத்திற்காக தனது தலையை மொட்டையடித்து வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் நடிக்க சம்மதம் தெரிவித்ததற்கு முதல் பாராட்டுக்கள். மாஸ்டர் அஷ்வத்துடன் சேர்ந்து அவரும் குழந்தையாகவே மாறி ரசிக்க வைக்கிறார்.

படத்தின் கதாநாயகன் அஷ்வத் தான். சிறுவனாக இருந்தாலும் நடிப்பில் சிறந்தவராக இருக்கிறார். படம் முழுவதுமே அவ்வளவு யதார்த்தமான நடிப்பு. திக்கிப் பேசும் குறையுடவர் அதனால் மன வருத்தம் அடையும் காட்சிகளில் நெகிழ வைக்கிறார். கிளைமாக்சில் அந்த மந்திரத்தை ஒழுங்காக சொல்வாரா மாட்டாரா என நம்மையும் பதை பதைக்க வைத்திருக்கிறார்.

மாஸ்டர் அஷ்வத்தின் அம்மாவாக ரம்யா நம்பீசன். தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரத்தில் மனமுவந்து நடிக்கும் ஒரே நடிகை. வழக்கம் போல யதார்த்தமாய் நடித்து ரசிக்க வைக்கிறார் ரம்யா.

பட்ஜெட்டுக்கு ஏற்றபடி விஎப்எக்ஸ் காட்சிகளை வைத்திருக்கிறார்கள். இன்னும் அதிகமான பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக செய்திருக்கலாம். அது மட்டும்தான் குறை.

மற்றபடி குழந்தைகள், குடும்பத்தினர் என அனைவரும் பார்த்து ரசிக்கும் டியர் பூதம்.