மஹா - விமர்சனம்
23 Jul 2022
தமிழ் சினிமாவில் சமீப காலமாகவே பெண் குழந்தைகள் கடத்தலைப் பற்றி பல படங்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் வந்துள்ள மற்றுமொரு படம் இது.
ஹன்சிகா முதல் முறையாக கதையின் நாயகியாக முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காதல் கணவர், விமான பைலட்டான சிம்புவை விமான விபத்தில் பறி கொடுத்தவர் முன்னாள் ஏர் ஹோஸ்டஸ் ஆன ஹன்சிகா. தனது ஒரே மகள் மானஸ்வியுடன் சென்னையில் இருக்கிறார். ஒரு சைக்கோ கொலைகாரன் மானஸ்வியைக் கடத்தி விடுகிறான். இது போன்று ஏற்கெனவே சில பெண் குழந்தைகள் கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். கடத்தப்பட்ட ஹன்சிகாவின் மகள் காப்பாற்றப்பட்டாரா, கொலைகாரனைக் கண்டுபிடித்தார்களா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இயக்குனர் ஜமீல் ஒரு த்ரில்லர் கதையைக் கொடுக்க வேண்டும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைப் பற்றி மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். அவரது நோக்கம் சரியாக இருந்தாலும் திரைப்படமாக, திரைக்கதையில் இன்னும் அதிகமான விறுவிறுப்பை சேர்த்திருக்க வேண்டும்.
சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்து கொஞ்ச நேரமே வந்தாலும் அவரது ரசிகர்களை தனது காதல் வசனத்தால் திருப்திப்படுத்தி இருக்கிறார். விமான விபத்தில் அவர் இறப்பது பற்றி ஜஸ்ட் லைக் தட் கடந்து போகிறார்கள். அதனால், ஹன்சிகா மீது நமக்கு அனுதாபம் வரவில்லை.
சிம்புவின் காதலியாக, பிறகு மானஸ்வியின் அம்மாவாக ஹன்சிகா சிறப்பாகவே நடித்திருக்கிறார். மகளை இழந்து பரிதவிக்கும் காட்சிகளில் உணர்ச்சி பூர்வமாக நடித்திருக்கிறார்.
ஸ்ரீகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அக்கதாபாத்திரத்தில் எப்படி நடிக்க வேண்டும் என அவர் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும். தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோரும் படத்தில் உண்டு. சைக்கோ கொலைகாரனாக மலையாள நடிகர் சுஜித் சங்கர் நடித்திருக்கிறார்.
இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான படம் என்பதால் போரடிக்கவில்லை. இன்னும் சிறப்பாகக் கொடுத்திருக்க வேண்டிய படம்.
Tags: maha, ur jameel, hansika, simbu