மலையாளத் திரையுலகத்தில் அவ்வப்போது வித்திசமான திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். ஆனால், இப்படி ஒரு படமா என இந்தப் படம் அதிர்ச்சிப்படுத்தி உள்ளது.

‘மஹாவீர்யார்’ என படத்தின் தலைப்பைப் பார்த்து ஏதோ சரித்திரப் படம் என எதிர்பார்த்து தியேட்டருக்குப் போனால், ஏமாந்துதான் போவோம். 18ம் நூற்றாண்டில் நடக்கும் ஒரு கதையையும், இந்த 2022ல் நடக்கும் ஒரு கதையையும் இணைத்து புதுவிதமான படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

நிவின் பாலி ஒரு சாமியார். ஒரு ஊருக்குள் அவர் சென்ற சமயத்தில் அந்த ஊரில் இருந்த ஆஞ்சநேயர் சிலை காணாமல் போய்விடுகிறது. அதனால், போலீஸ் அவரைக் கைது செய்கிறது. அந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது. அதே சமயத்தில் 1783ம் ஆண்டில் ஒரு மன்னர் தவறிழைத்ததாகச் சொல்லி பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் குடும்பத்தினர் அதே நீதிமன்றத்தை நாடுகின்றனர். நிவின் பாலி வழக்கை தள்ளி வைத்து விட்டு அந்த மன்னர் மீதான வழக்கை விசாரிக்கிறார் நீதிபதி. அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஆரம்ப கட்ட சில காட்சிகள் மட்டும் சரித்திர நிகழ்வாக, சிலையைத் திருடியதாக நிவின் பாலி மீது ஊரார் குற்றம் சுமத்துவதாக நடக்கிறது. அதன் பிறகான காட்சிகள் முழுவதுமே நீதிமன்றத்திலேயே நடந்து முடிகிறது.

நிவின் பாலி என்னமோ செய்யப் போகிறார் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இரண்டாவது பாதியில் நீதிமன்றத்தில் நடக்கும் மன்னர் மீதான வழக்கை வேடிக்கை பார்க்கும் ஒரு துணை நடிகர் போலத்தான் நிற்கிறார்.

மன்னராக லால், அவருக்கு அடிக்கடி விக்கல் வருகிறது.  அழகான பெண்ணின் கண்ணீரைக் குடித்தால் அந்த விக்கல் நிற்கும் என்கிறார்கள். அதனால் தன் மந்திரியை விட்டு அழகான பெண் ஒருவரைக் கடத்தி வரச் சொல்கிறார். மந்திரியாக ஆசிப் அலி, அழகான பெண்ணாக ஷான்வி ஸ்ரீவத்சவா நடித்திருக்கிறார்கள்.

மலையாள ரசிகர்களுக்குக் கூட இந்தப் படம் வித்தியாசமாக இருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்க தமிழ் சினிமா ரசிகர்கள் இந்தப் படத்தை ரசிப்பார்களா என்பது சந்தேகமே.