ஒரு படத்தின் டிரைலரைப் பார்க்கும் போதே அது படத்தைப் பார்க்கத் தூண்டும் விதமாக இருக்க வேண்டும். ‘ஜோதி’ படத்தின் டிரைலரைப் பார்க்கும் போது அப்படித்தான் இருந்தது. 

மெடிக்கல் குற்றங்கள் என தமிழ் சினிமாவில் பெரும்பாலும் உடல் உறுப்புகள் கடத்தல் பற்றித்தான் காட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் படம் பிறந்த குழந்தைகள் காணாமல் போவதைப் பற்றிய படமாக அமைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரையிலும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணாமல் போன குழந்தைகள் கண்டுபிடிக்கப்படாமலேயே உள்ளது என்ற அதிர்ச்சித் தகவலையும் படத்தில் தந்துள்ளார்கள்.

படத்தின் ஆரம்பத்தையே அதிர்ச்சியுடன் ஆரம்பிக்கிறார்கள். நிறைமாத கர்ப்பிணியான ஷீலா ராஜ்குமார் வயிற்றை யாரோ அறுத்து வயிற்றுக்குள் இருந்து குழந்தையை எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார்கள். ஏதோ சத்தம் கேட்டு வரும் பக்கத்து வீட்டு க்ரிஷா குரூப் அது பற்றி தனது போலீஸ் கணவரான வெற்றிக்குத் தகவல் தருகிறார். வெற்றி அது பற்றிய விசாரணையை ஆரம்பிக்கிறார். குற்றவாளி யார் என்பதை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தில் இடம் பெற்றுள்ள நடிகர்கள், நடிகைகள் அந்தந்த கதாபாத்திரங்களில் பொருத்தமாக நடித்துள்ளார்கள். சினிமாத்தனமாக நடிக்காமல் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்திருக்கிறார்கள்.

போலீஸாக வெற்றி, அவரது மனைவியாக க்ரிஷா குரூப், குழந்தையை பறி கொடுத்தவராக ஷீலா ராஜ்குமார், அவரது கணவராக ராட்சசன் சரவணன், வெற்றியின் உதவியாளராக குமரவேல், ஷீலா வீட்டு டிரைலராக ராஜா சேதுபதி என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் படத்தில் தேவையான அளவு காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர்.

விசாரணை காட்சிகள் அடுத்தது என்ன என்ற பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. ஒருவர் மீது சந்தேகத்துடன் விசாரணை நடைபெற அதிலிருந்து வேறொருவர் மீது அடுத்த சந்தேகப் பார்வை போக இப்படியாக நகர்கிறது திரைக்கதை. படத்தின் கிளைமாக்ஸ் நாம் சிறிதும் எதிர்பாராத விதத்தில் அமைந்துள்ளது.

பிறந்த குழந்தைகள் கடத்தப்படுவதைப் பற்றி ஆரம்பத்திலேயே சில காட்சிகளை வைத்திருந்தால் படம் மீதான தாக்கம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.